Published:Updated:

`கொரோனா அச்சம்; தமிழர்கள் அன்பு பரிமாற்றம்; ஆளில்லா படகுகள்!' - கச்சத் தீவு திருவிழா ஹைலைட்ஸ்

கச்சத் தீவு திருவிழா
கச்சத் தீவு திருவிழா ( உ.பாண்டி )

திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை யாழ்ப்பானம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், இலங்கை காளே மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர்.

கடந்த இருநாள்கள் நடந்த கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று காலை திருப்பலியுடன் நிறைவடைந்தது. கொரோனா வைரஸ் அச்சத்தால் வழக்கத்தைவிட குறைவான அளவிலான பக்தர்களே கலந்துகொண்டதால் உற்சாகமின்றி திருவிழா நடந்து முடிந்தது.

கச்சத் தீவு புனித அந்தோணியர் ஆலய சிலுவை பாதை
கச்சத் தீவு புனித அந்தோணியர் ஆலய சிலுவை பாதை
உ.பாண்டி

கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 72 விசைப்படகுகள் மற்றும் 22 நாட்டுப் படகுகளில் 2,570 பக்தர்கள் கச்சத் தீவு சென்றனர். வருவாய்த்துறையினர், காவல், சுங்கத்துறை மற்றும் உளவுப் பிரிவினர் ஆய்வுக்கு பின் படகுகளில் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் அனைவரும் நேற்று மாலை கச்சத் தீவை அடைந்தனர். ராமேஸ்வரம் - கச்சத் தீவு இடையே உள்ள கடல் பகுதியில் இந்திய கடலோரக் காவல் படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தினரும், இலங்கை கடற்படை, கடலோரக் காவல் படை கப்பல்களும் சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

முன்னதாக நேற்று காலை முதலே இலங்கையில் உள்ள மன்னார், யாழ்ப்பானம், நெடுந்தீவு, இரண தீவு மற்றும் கொழும்பிலிருந்து ஏராளமான பக்தர்கள் படகுகள் மூலம் கச்சத் தீவு வந்திருந்தனர். இதையடுத்து நேற்று மாலை கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது. நெடுந்தீவு பங்குத் தந்தை எமிலிபால், அந்தோணியார் உருவம் கொண்ட கொடியை ஏற்றினார்.

கச்சத் தீவு திருவிழா திருப்பலி
கச்சத் தீவு திருவிழா திருப்பலி
உ.பாண்டி

அதைத் தொடர்ந்து கோயில் வளாகத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த 14 சிலுவைகள் வழியாகச் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதைத் தொடர்ந்து திருப்பலியும் புனித அந்தோணியாரின் தேர்ப்பவனியும் நடைபெற்றன. இலங்கை கடற்படை வீரர்கள் அந்தோணியார் ரதத்தை தூக்கியபடி ஆலயத்தை வலம் வந்தனர்.

கச்சத் தீவில் கடைகள்
கச்சத் தீவில் கடைகள்
உ.பாண்டி

அதன் பின்னர் இருநாடுகளிலும் இருந்து வந்திருந்த தமிழர்கள் தங்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். திருவிழாவின் 2-ம் நாளான இன்று காலை யாழ்ப்பானம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் தமிழிலும், இலங்கை காளே மறைமாவட்ட ஆயர் ரேமண்ட் விக்ரமசிங்கே சிங்களத்திலும் திருவிழா திருப்பலியை நடத்தினர். தொடர்ந்து நற்கருணை ஆசீர்வாதம் நடந்தது. இதையடுத்து திருவிழா கொடி இறக்கப்பட்டதுடன் திருவிழா நிறைவு பெற்றது. இவ்விழாவில் சிவகங்கை முதன்மை குரு லூர்து ராஜா, இலங்கை முப்படை தளபதி ரியல் அட்மிரல் ரவி விஜயகுணரத்ன, யாழ்ப்பானம் இந்திய துணைத் தூதர் பாலச்சந்திரன், யாழ்ப்பானம் மேயர் இமானுவேல் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரன், யாழ் எம்.பி அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

கச்சத் தீவு திருவிழாவில் கூடும் பக்தர்களிடையே கொரானோ வைரஸ் பரவும் என அச்சம் நிலவியதால், ஏற்கெனவே கச்சத் தீவு செல்ல பதிவு செய்திருந்த இந்திய பக்தர்களில் 500-க்கும் மேற்பட்டோர் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதேபோல் இலங்கையிலிருந்து சுமார் 10,000 பக்தர்கள் கச்சத் தீவு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மிகக் குறைந்த அளவாக சுமார் 4,000 பேர் மட்டுமே திருவிழாவில் பங்கேற்றனர். இதனால், வழக்கமாகக் காணப்படும் உற்சாகம் இன்றி கச்சத் தீவு திருவிழா நடந்தேறியது. அதிகளவிலான பக்தர்களை எதிர்பார்த்து கச்சத் தீவில் கடைகள் அமைத்திருந்த இலங்கை மக்கள் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் சோகம் அடைந்தனர்.

மீட்கப்பட்ட இலங்கைப் படகுகள்
மீட்கப்பட்ட இலங்கைப் படகுகள்
உ.பாண்டி

இன்று காலை திருவிழா முடிந்த நிலையில் இரு நாட்டு பக்தர்களும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு தங்களின் ஊர் திரும்பினர். கச்சத் தீவில் இருந்து ராமேஸ்வரம் திரும்பிய பக்தர்களுக்கு கொரானோ பாதிப்பு ஏற்படாமல் இருக்க மருத்துவத் துறையின் சார்பில் கைகளை சுத்தப்படுத்தும் கிருமி நாசினி அளிக்கப்பட்டது. இதனிடையே இந்திய கடல் பகுதியில் சில பைபர் படகுகள் ஆட்கள் இன்றி எஞ்சினுடன் மிதந்துள்ளன. இதைக் கண்ட கடலோரக் காவல் படையினர் மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தியதில் அது கச்சத் தீவில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை பக்தர்களின் படகுகள் எனவும், அவை காற்றின் வேகத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மண்டபம் கடலோரக் காவல் படை நிலையத்தில் இருந்து சென்ற ரோந்து கப்பல், இந்திய கடல் பகுதிக்குள் வந்த 7 படகுகளை மீட்டு இந்திய கடலோரக் காவல்படையினர், இலங்கைக் கடற்படையினர் வசம் ஒப்படைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு