Published:Updated:

உதவலாம் வாருங்கள்

சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

உற்சவங்களில் இறை வாகனங்கள் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம்.

உதவலாம் வாருங்கள்

உற்சவங்களில் இறை வாகனங்கள் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம்.

Published:Updated:
சிவபெருமான்
பிரீமியம் ஸ்டோரி
சிவபெருமான்

அன்பார்ந்த வாசகர்களே...

ஆன்மிகத்தில் தேடலும் அது சார்ந்த சந்தேகங்களும் வினாக்களும் மிக அதிகம். அந்த வகையில் ஆலயங்கள், சமய இலக்கியங்கள், சாஸ்திரங்கள் மற்றும் புராண நூல்கள் குறித்த தகவல்கள் தொடர்பாக, உங்களுக்குள் எழும் சந்தேகங்களை - கேள்விகளை ‘உதவலாம் வாருங்கள்’ பகுதிக்கு எழுதி அனுப்புங்கள். தகுதியானவை சக்தி விகடனில் பிரசுரமாகும்.

இந்தப் பகுதியின் சிறப்பு... வாசகர்கள் எதிர்பார்க்கும் தகவல்களை, உதவிகளை... அவை பற்றி துல்லியமாகத் தெரிந்திருக்கும் வாசகர்களிடம் இருந்தே பெறப் போகிறோம். சந்தேகமோ, விளக்கமோ... அவற்றுக்கான பதில் விளக்கங்களோ, உதவி குறித்த தகவல்களோ எதுவாயினும் அவற்றை ‘உதவலாம்... வாருங்கள்!’ என்று குறிப்பிட்டு சக்தி விகடனுக்கு அனுப்பவும். உங்களுடைய தெளிவான முகவரி, இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் குறிப்பிடுவது மிக அவசியம்.

தூண் சிற்பங்களில் தெய்வ மூர்த்தங்கள் குறித்த தகவல்கள் எனக்குத் தேவை. மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் தூண் சிற்பமாகவுள்ள அனுமனுக்கு பக்தர்கள் பிரார்த்தனை வழிபாடு செய்வதைப் பார்த்திருக்கிறேன். இதேபோல் வழிபாட்டில் உள்ள தூண் சிற்பங்கள், அவை அமைந்திருக்கும் ஆலய விவரங்களை பகிர்ந்துகொண்டால், பயனுள்ளதாக இருக்கும்.

- எம். வேணு, சென்னை-46

பூஜையில் அபிஷேக ஆராதனைகள் குறித்த நியதிகளை விளக்கி வழிகாட்டும் பழைமையான புத்தகங்கள் பற்றிய விவரங்கள் தேவை. எவரிடமேனும் இதுகுறித்த புத்தகம் இருப்பின் நகல் எடுத்து அனுப்பினாலும் உதவியாக இருக்கும். புத்தகம் கிடைக்கும் இடம் - முகவரியைப் பகிர்ந்தாலும் பயன் பெறுவேன்.

- கீ. முருகன், கடலூர்

உற்சவங்களில் இறை வாகனங்கள் பற்றி தெரிந்துகொள்ள விருப்பம். ரிஷபம், கயிலாய வாகனம், கற்பக விருட்ச வாகனம், பெருமாள் பவனி வரும் கருட வாகனம் முதலானவை குறித்த ஆகம விளக்கங்கள் தேவை. இதுபற்றிய விவரம் அறிந்த அன்பர்கள், தகவல் பகிரலாமே. மேலும், நாச்சியார்கோவில் கல் கருடன் போன்று வேறு எந்தத் தலங்களில் இறை வாகனங்கள் சிறப்புற்றுத் திகழ்கின்றன எனும் விவரத்தையும் பகிரலாம்.

- தி.லோகநாதன், சாத்தூர்

கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில், குழந்தை வரம் அருளும் திருக்கோயில்கள், அங்கு நடைபெறும் சிறப்புப் பரிகார வழிபாடுகள், எப்படிச் செல்வது எனப்போன்ற விவரங்கள் தேவை. கோவை அன்பர்கள் எவரேனும் விவரம் பகிர்ந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

- சி.விஸ்வநாதன், திருப்பூர்

பெரும்பாலான ஊர்கள் விருட்சங்களின் பெயரைப் பெற்றுள்ளன. திருநெல்வேலியை வேணுவனம் என்பார்கள். அதேபோல் தில்லை மரங்கள் அடர்ந்த பகுதியே தில்லை என அழைக்கப்பட்டதாக அறிவோம். ஆனால் அங்கே இப்போது பெயருக்குக் கூட ஒரு தில்லை மரம் இல்லை என்கிறார்கள். ராமாயணம் தந்த மரா மரத்தையே ஆச்சாள் மரம் என்றும் சொல்கிறார்கள். நான் படித்த புத்தகம் ஒன்றில் `ஆச்சாள் மரமே தில்லை மரம்' என்ற தகவல் இடம்பெற்றிருந்தது. எனக்கு தில்லை மரம் குறித்த விரிவான விவரங்கள் தேவை. அந்த மரக் கன்று வேண்டும் எனில், எங்கு கிடைக்கும்?

- கோ. பழநி, திருநெல்வேலி

கந்த புராணம் அரங்கேறிய இடம் காஞ்சி குமரக் கோட்டம் என்பது தெரியும். அதேபோல், கந்த சஷ்டிக் கவசம், கந்தகுரு கவசம் போன்ற நூல்கள் ஏதேனும் திருத்தலத்தில் அரங்கேற்றப் பட்டனவா. விவரம் தெரிவியுங்களேன்?

- வீ.மணிவண்ணன், சென்னை-66

உதவலாம் வாருங்கள்

`சதாசிவ மூர்த்தம் குறித்த விவரங்கள் தேவை. தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் சிவபெருமானின் இந்தத் திருக்கோலம் எந்தக் கோயிலில் உள்ளது?' என்று 7.9.21 தேதியிட்ட இதழில் தூத்துக்குடி வாசகர் கோ.வள்ளிநாயகம் கேட்டிருந்தார். அவருக்கு சென்னை வாசகர் ஆர்.கிருஷ்ணன் கீழ்க்காணும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சிவப் பேறு அருளும் சிவ வடிவங்களுள் சதாசிவ மூர்த்தமும் ஒன்று. சிவ ஆகமத்தை உபதேசிக்கும் பொருட்டு, பெருமான் ஐந்து முகங்களுடன் சதாசிவனாகக் காட்சியளிக்கிறார்.

கிழக்கு நோக்கிய திருமுகம்- தத்புருஷம். இது ஈஸ்வரனுக்கு உரியது. தெற்கு நோக்கியது- அகோர முகம்; ருத்ரனுக்கு உரியது. மேற்கு நோக்கியது- சத்யோ ஜாதம்; பிரம்மனுக்கு உரியது. வடக்கு நோக்கியது- வாமதேவ முகம்; விஷ்ணுவுக்கு உரியது. சதாசிவனின் உச்சியில் விளங்கும் முகம்- ஈசானம்.

இவற்றுள் தத்புருஷம், அகோரம், சத்யோ ஜாதம், வாம தேவம் ஆகிய ஒவ்வொன்றுக்கும் 5 ஆகமங்கள் வீதம், 20 ஆகமங்களும், உச்சியில் உள்ள ஈசான முகத்தால் 8 ஆகமங்களுமாக மொத்தம் 28 ஆகமங்களை சிவபெருமான் உபதேசித்தார் என்பர்.

சதாசிவ மூர்த்தி- ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்கள், பதினைந்து கண்கள் கொண்டு தாமரைப் பீடத்தில் நிற்கும் திருமேனியர் என்று திருமூலர் போற்றுகிறார்.

இந்த சதாசிவ வடிவம்- ஒரு முகம், இரண்டு முகம், ஐந்து முகம், 25 முகங்கள் எனப் பல கோலங்கொண்ட வடிவங்களாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோயில்களில் பெரும்பாலும் சுதை வடிவில் மட்டுமே சதாசிவ மூர்த்தி அமைந்துள்ளதைக் காணலாம்.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மேலைக் கோபுரத்தின் முதல் நிலை- மேற்புறத்தில் வலப் பக்கம் சதாசிவ வடிவம் உள்ளது. மேலும், இங்குள்ள கிழக்கு கோபுரத்தின் கிழக்குப் பகுதியின் முதல் நிலையிலும், 2-ஆம் கோபுர வடப் பக்கம் கீழ் வரிசையிலும், சந்நிதி நுழை வாயிலில் உள்ள துவாரபாலகர்களுக்குப் பின்புறத்திலும் இந்த வடிவைக் காணலாம்.

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில் மேலைக் கோபுரத்தின் கிழக்குப் பக்கத்தில் சதாசிவரை தரிசிக்கலாம்.

தஞ்சைப் பெருவுடையார் கோயிலில், 2-ஆம் கோபுரத்தில் சதாசிவ திருவடிவம் உள்ளது.

எலிபெண்டா குகையில் ஐந்து முகங்கள், பத்து திருக்கரங்களுடன் நிற்கும் நிலையில் சதாசிவ மூர்த்தி யின் வடிவம் காணப்படுகிறது.

கேள்விகள், தகவல் பகிர்வுகளை அனுப்ப வேண்டிய முகவரி:

`உதவலாம் வாருங்கள்' சக்தி விகடன், 757, அண்ணாசாலை, சென்ன-600 002

Email: sakthi@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism