ஆபத்துத்தாரண பைரவர்!
`பைரவ மூர்த்தி யோக கோலத்தில் அருளும் தலம் எது, எப்படிச் செல்வது’ என்று தேனி வாசகர் ஆர்.திருமலை கேட்டிருந்தார். அவருக்கு கீழ்க்காணும் விவரத்தை தூத்துக்குடி வாசகர் காசி அளித்துள்ளார்.
மதுரைக்கும் காரைக்குடிக்கும் இடையில் உள்ள ஊர் திருப்பத்தூர். குன்றக்குடிக்கு அருகில் உள்ள தலம். இங்குதான் யோக பைரவர் அருள்பாலிக்கிறார்.

இவர் அருள்பாலிக்கும் இடத்தை சர்வ ஸித்தி பூமி என்று சிறப்பிக்கின்றன ஞானநூல்கள். பாதங்கள் இரண்டையும் பிணைத்துக்கொண்டு கால் பெருவிரல்களைப் பூமியில் ஊன்றிய கோலத்தில் யோகத்தில் அமர்ந்துள்ளார் இந்த பைரவர். இடது கரத்தை இடது தொடையில் ஊன்றியுள்ள யோக பைரவர் வலது திருக்கரத்தில் இடியை ஏந்தியுள்ளார்.
இவரின் திருமேனியில் 12 ராசிகளும் அடங்கியுள்ளனவாம். இவருக்கு ஆபத்துத்தாரண பைரவர் என்றும் சிறப்புண்டு. ஆகவே இவரை வழிபட்டால் ஆபத்துகளிலிருந்து காத்து நிற்பார் என்பது நம்பிக்கை.

இவருக்குத் தினமும் அர்த்தஜாம பூஜையின்போது புனுகுச் சட்டம் சாத்தி வழிபடுகிறார்கள். வடைமாலையும் சம்பாவும் நைவேத்தியம் செய்வார்கள். அர்த்தஜாம பூஜைக்கு மணி அடித்தபிறகு எவரும் பைரவர் சந்நிதிக்குச் செல்ல மாட்டார்களாம்!சர்வ மங்கலங்களையும் அருளவல்ல சிவபெருமானின் ஸ்தோத்திரம் ஒன்று உண்டு. `பரமேச்வர மாத்ருகா வர்ணமாலா’ என்று பெயர். இதைப் படிப்பதால் குரு, சனி, ராகு-கேது முதலான கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பார்கள். அதில் மொத்தம் 51 துதிகளால் ஆன ஸ்லோகங்கள் இருப்பதாக ஞாபகம். இந்த ஸ்லோகம், தமிழ் விளக்கத்துடன் எந்த நூலில் உள்ளது. எங்கு கிடைக்கும்?
-கி.முருகன், வள்ளியூர்
`பண்டு எழுவர்’ என்று திருநாவுக்கரசர் போற்றும் ரிஷிகளை `சப்த ரிஷிகள்’ என்று விவரிக்கின்றன புராணங்கள். அத்திரி, பிருகு, புலத்தியர், வசிஷ்டர், கெளதமர், ஆங்கிரசர், மரீசி. இந்த ஏழு முனிவர்களும் தனித்தனி தலங்களில் வழிபட்டுள்ளார்களா?
சிவபெருமானுடன் இந்த எழுவரையும் சேர்த்து வணங்கும் மரபு உண்டு என்கிறார் நண்பர் ஒருவர். அறுபத்து மூவர், அகத்தியர் ஆகியோர் சில சிவாலயங் களில் அருள்வது போன்று, சப்தரிஷிகள் காட்சி தரும் திருத்தலம் ஏதேனும் உண்டா?
-சி.அருணா, காஞ்சிபுரம்
நண்பர் ஒருவர் வலிப்பு நோயால் அவதியுற்று வருகிறார். ஆன்மிகப் பெரியவர் ஒருவரின் வழிகாட்டுதல் படி, திருவாசி தலத்துக்குச் சென்று வழிபட்டு வந்தோம். இப்போது மெள்ள குணமடைந்து வருகிறார். `ஜம்புநாத ஸ்தோத்திரம்’ எனும் துதிப் பாடல், பத்மபுராணத்தில் உண்டு.
அந்த ஸ்தோத்திரத்தைத் தினமும் பூஜையில் பாடி வழிபட்டு வந்தால், வலிப்பு நோய் குணமாகும் என்றும் அறிந்தோம். எனக்கு அந்த ஸ்லோக வரிகள் தேவை. அது எந்த நூலில் உள்ளது. எவரிட மேனும் இருந்தால், நகல் எடுத்து அனுப்புங்களேன்.
-கே.லதா, சென்னை-44
பஞ்சமுக விநாயகர் குறித்து தகவல் படித்தேன். விநாயகருக்கு பஞ்சமுகம் திகழ்வதன் தத்துவம் என்ன? ஐந்து முகங்களோடு விநாயகர் அருளும் கோயில்கள் எந்தெந்த ஊர்களில் உள்ளன? விவரம் அறிந்த அன்பர்கள் தகவல் பகிருங்களேன்.
-எஸ்.ராமநாதன் மதுரை-3
பல அபூர்வமான மூலிகைகள் குறித்தும் அவற்றின் மகத்துவம் குறித்தும், அவை கிடைக்கும் இடங்கள் குறித்தும் சித்தர்பிரான் கோரக்கர் நூலொன்று அருளியிருப்பதாகக் கேள்வியுற்றேன்.கோரக்கர் அருளிய அந்த நூலின் பெயர் என்ன? இதுபோன்ற வேறு மூலிகை விளக்க நூல் ஏதேனும் உண்டா? விவரம் அறிந்தோர் பகிர்ந்து உதவுங்களேன்.
-வி.சுப்பையா, தாழையுத்து