Election bannerElection banner
Published:Updated:

கல்லறைத் திருநாள்... வேளாங்கண்ணியில் எளிய முறையில் சிறப்புத் திருப்பலி!

கல்லறை திருநாள்
கல்லறை திருநாள்

கல்லறைத் திருநாளை ஒட்டி வேளாங்கண்ணியில் இன்று சிறப்புத் திருப்பலி எளிய முறையில் நடந்தது.

வேளாங்கண்ணியில் இன்று நடந்த கல்லறைத் திருநாளை முன்னிட்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு, சமூக இடைவெளி காரணமாக எளிய முறையில் திருப்பலி நடைபெற்றது.

ஆண்டுதோறும் இறந்த முன்னோர்களின் ஆன்மாவிற்கு மரியாதை செலுத்தும் தினமாகக் 'கல்லறை திருநாள்' கிறிஸ்தவர்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதன்படி தென்னிந்தியாவில் கிறிஸ்தவர்கள் புனிதமாகக் கருதும் ஆரோக்கிய அன்னை மேரி மாதா வீற்றிருக்கும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இன்று கல்லறைத் திருநாள் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்தவர்கள், தங்கள் முன்னோர்களின் கல்லறைகளைப் பூக்களால் அலங்கரித்தும், உணவுப்பண்டங்களை வைத்தும் படையலிட்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். மூதாதையர்கள் தங்களின் குடும்பத்தினருக்கு ஆசி வழங்க வேண்டிக் கொண்டனர்.

இறந்தோரை நினைவுகூரும் சிறப்புமிக்க இந்நன்னாளில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்புத் திருப்பலியும் நடைபெற்றது. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பேராலயத்தைச் சுற்றி அடக்கம் செய்யப்பட்ட பாதிரியார்களின் சமாதிக்கு பேராலயப் பங்குத் தந்தை சூசைமாணிக்கம் தலைமையில் புனிதம் செய்யப்பட்டு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. அதில் பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

கல்லறை திருநாள்
கல்லறை திருநாள்

அதனைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டு வேளாங்கண்ணிக்கு வந்து சுனாமியால் இறந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சுமார் ஆயிரம் பேர் நினைவாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆர்ச் அருகில் புதைக்கப்பட்ட கல்லறைத் தோட்டம் உள்ளது. அங்கு வேளாங்கண்ணி பேராலயத்தின் சார்பில் கல்லறைத் திருநாள் வழிபாடு நடைபெற்றது. இங்கு அனைவரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு