Published:Updated:

சரஸ்வதி தேவி ஸ்தாபித்த சிவாலயம்... சரஸ்வதி விளாகத்தில் வித்யாரம்பம் - விஜயதசமி கொண்டாட்டம்!

இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்குத் தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் சரஸ்வதி தேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவம் இருந்து அருள் பெற்றதாகத் தல புராணம் தெரிவிக்கிறது.

கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகத்தில் உள்ள ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவிக்குச் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

விஜயதசமி கொண்டாட்டம்
விஜயதசமி கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் சரஸ்வதி விளாகம் கிராமம் உள்ளது. இங்கு ஸ்ரீவித்யாநாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சரஸ்வதி தேவிக்குத் தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் சரஸ்வதி தேவி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டித் தவம் இருந்து அருள் பெற்றதாகத் தல புராணம் தெரிவிக்கிறது. இதனால் இவ்வூர் சரஸ்வதி விளாகம் என்றழைக்கப்படுகிறது. சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சுவாமி ஸ்ரீவித்யாரண்யஸ்வரர், அம்பாள் ஸ்ரீவித்யாநாயகி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

இக்கோயிலில் சரஸ்வதி பூஜை, சிவராத்திரி, நவமி திதி நாள்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவியை வழிபட்டால் ஞானமும், சிறந்த கல்வியும் கிடைக்கும் என்பது ஐதிகம். சரஸ்வதி தேவியால் ஸ்தாபிக்கப்பட்ட சிவாலயம் இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு சிறப்பு வித்யார்த்தி ஹோமம் நடத்தப்பட்டு சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்குச் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றன.

விஜயதசமி கொண்டாட்டம்
விஜயதசமி கொண்டாட்டம்

தொடர்ந்து மகா தீபாராதனை நடத்தப்பட்டு, குழந்தைகள் கல்வியில் சிறக்க வித்யாரம்பம் செய்து வைக்கப்பட்டது. அப்போது குருக்கள் வேத மந்திரம் ஓத, ஓதுவார்கள் தேவாரம் இசைக்க, குழந்தைகள் அரிசி மணிகளில் எழுத, அவர்களது நாவில் கோயில் அர்ச்சகர் தேன் கொண்டு தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு