Published:Updated:

விழுப்புரம்: 1,300 ஆண்டுகள் பழைமையான லகுலீசுவரர், நெற்பயிர் ஆயுத விநாயகர், சிவலிங்கம் கண்டுபிடிப்பு!

பல்லவர் காலத்து சிவலிங்கம், சிற்பங்கள்
பல்லவர் காலத்து சிவலிங்கம், சிற்பங்கள்

விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த பழைமையான இரண்டு சிற்பங்களும், சதுர வடிவிலான ஒரு சிவலிங்கமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட எல்லை அருகில், விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது மாம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்தில்தான் பல்லவர் காலத்தைச் சேர்ந்த 1,300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிதான லகுலீசுவரர் சிற்பம், பிள்ளையார் சிற்பம் மற்றும் சதுர வடிவிலான சிவலிங்கமும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் குழுவினர் கண்டறிந்துள்ளனர்.

விழுப்புரம் திருநாதர் குன்று: `ஐ' எனும் தமிழ் எழுத்து இங்குதான் முதலில் கண்டறியப்பட்டதா?
இங்கு கண்டறியப்பட்டுள்ள 2 சிற்பங்களில் ஒன்று லகுலீசுவரர் சிற்பம். இச்சிற்பம் அரிதாக பார்க்கப்படும் ஒன்று. லகுலீசுவரர் எனும்பெயர் சிவபெருமானின் 28-வது நாமமாக கூறப்படுவதுண்டு.
சிவலிங்கம்
சிவலிங்கம்

சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு, செவ்வாடை மட்டும் உடுத்தி, உடல்முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டு இறைவனை பூஜிக்கும் அகோரிகள் வழிபடும் தெய்வமாக இந்த லகுலீசுவரர் இருந்துள்ளார். இவருடைய வழிபாடு குஜராத்தில் தோன்றி, பின்னர் கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா ஆகிய இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியதாகக் கூறப்படுகிறது. இந்த லகுலீசுவரர் சிற்பம் தமிழகத்தில் குறைந்த அளவிலேயே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதால், புதியதாகக் கண்டறியப்படும் போதெல்லாம் அரிதான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இந்த லகுலீசுவரர் சிற்பம் தான் மாம்பாக்கம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவர், ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "நெற்குன்றம் அருகே கல்வெட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு இரண்டு நண்பர்களுடன் அங்கு சென்றேன். அப்போதுதான் மாம்பாக்கம் பற்றி அறிந்தோம்.

மாம்பாக்கம் கிராமத்தில் வீடுகள் உள்ள பகுதிகளை கடந்து சற்று தொலைவிலிருந்த வயல் பகுதியில், மாமரத்தின் அடியில் சதுர ஆவுடையாருடன் கூடிய சிவலிங்கமும், அதனருகே இரண்டு பலகை சிற்பங்களும் இருப்பதை பார்த்தோம். அங்குள்ள ஒரு சிலரால் மட்டுமே அவ்வப்போது வழிபாடு நடைபெற்று வருவது போலக் காணப்பட்டது. அவற்றை ஆய்வு செய்தபோதுதான் அந்த லிங்கம் மற்றும் சிற்பங்கள், 1,300 ஆண்டுகள் பழைமையான பல்லவர் காலத்தைச் சேர்ந்தவை என்பதைக் கண்டறிந்தோம்.

Vikatan

இரண்டு சிற்பங்களில் ஒன்று லகுலீசுவரர் சிற்பம். 3 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் கொண்ட கல் பலகையில் புடைப்பு சிற்பமாக அழகுற வடிவமைக்கப்பட்டிருந்தார் லகுலீசுவரர். இவரின் தலையில் ஜடாபாரம் அலங்கரிக்க , இரு செவிகளிலும் பத்ர குண்டலம் கொண்டு, முகத்தை சற்று சாய்த்தவாறு இருக்கும் வகையில் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. வலது கரத்தில், அவருடைய ஆயுதமான தடி போன்ற லாங்குலத்தைக் கடக முத்திரையில் தாங்கியிருக்க; இடது கையை கடி முத்திரையில் இடையின் மீது வைத்துள்ளார். லாங்குலத்தின் அடிப்பகுதி மெல்லியதாகவும் , அதன் மேல்பகுதி பருமனாகவும் காட்சி தருகிறது. வழக்கமாக தண்டத்துடனோ... இல்லை தனியாகவோ காட்சிப்படுத்தப்படும் நாகம், இந்தச் சிற்பத்தில் காணப்படவில்லை.

லகுலீசுவரர்
லகுலீசுவரர்

இடையில் ஆடைகட்டி, பத்மாசனத்தில் அமர்ந்து காட்சி தரும் லகுலீசுவரர், கழுத்தில் அணிகலனாக சரபளியும் , வயிற்றில் உதரபந்தமும் கொண்டு காணப்படுகிறார். இந்தச் சிற்பத்தின் அமைதியை வைத்துப் பார்க்கும்போது, 7-ம் நூற்றாண்டின் இறுதிக் காலமாகவும் அல்லது 8-ம் நூற்றாண்டின் தொடக்கமாகவும் இருக்கலாம் எனக் கருத முடிகிறது.

சைவப் பிரிவுகளில் ஒன்றான பாசுபதத்தைத் தோற்றுவித்தவர் இந்த லகுலீசுவரர்தான். இன்றைய குஜராத் மாநிலத்தில் உள்ள காயரோஹனகத்தில் லகுலீசுவரரால் தோற்றுவிக்கப்பட்ட பாசுபதம், அவரது சீடர்கள் மூலம் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டது. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழக நிலப்பரப்பில் இப்பாசுபதம் வளர்ச்சியுற்று பல்லவர்கள் காலத்தில் சிறப்புற்றிருந்தது. இதுவரை சுமார் 30 க்கும் குறைவான லகுலீசுவரர் சிற்பங்களே தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலானவை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல 8- ம் நூற்றாண்டுக்குப் பின்னர் வரும், சிவன் கோயில்களில் சண்டிகேஷ்வரரை வைத்து வழிபாடு நடைபெறும் இடத்தில், 8-ம் நூற்றாண்டுக்கு முன்னர், பல்லவர்களின் ஆட்சி காலங்களில் இந்த லகுலீசுவரரே வழிபடப்பட்டுள்ளார் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது சிற்பம், பிள்ளையார். அதே அளவு கொண்ட கற்பலகையில், 4 கரங்களுடன் பிள்ளையார் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருந்தார். கரண்ட மகுடம் தலையை அலங்கரித்திட, தனது மேல் வலது கரத்தில் நெற்பயிரையும், மேல் இடது கரத்தில் அக்கமாலையை ஏந்தி; கீழ் வலது மற்றும் இடது கரத்தை தன் தொடையின் மீது வைத்தவாறு இரண்டு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாக காட்சி தருகிறார்.

பிள்ளையார், நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு காணப்படுவது சிறப்பானது. வளமையின் குறியீடாகச் சொல்லப்படும் நெற்பயிரை ஆயுதமாகக் கொண்டு இதுவரை சில பிள்ளையார்களே கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தின் காலமும், இதனுடன் கண்டறியப்பட்ட லகுலீசுவரரின் காலமே ஆகும். இதுவரை, இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த லகுலீசுவரர் கண்டறியப்பட்ட இடங்களில் பெரும்பாலும் இதே போன்று பிள்ளையாரும் கண்டறியப்பட்டுள்ளார். இவ்விறு சிற்பங்களுடன், இரண்டு அடியிலான சதுர ஆவுடையாருடன் கூடிய, இதே காலத்தைச் சேர்ந்த ஒரு சிவலிங்கமும் காணப்படுகிறது.

பிள்ளையார்
பிள்ளையார்

இவற்றை வைத்துப் பார்க்கும்போது, 7- ம் நூற்றாண்டின் இறுதியில் இந்த ஊரில் பல்லவர் காலத்து சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கலாம். அது காலப்போக்கில் சிதைந்துபோயிருக்கக் கூடும். இந்த லிங்கம் மற்றும் சிற்பங்களே நமக்குக் காலத்தின் சாட்சியங்களாக எஞ்சி நின்று, தொன்மையை உணர்த்துகின்றன. இவை முறையாக பூஜிக்கப்பட வேண்டியதும், பாதுகாக்கப்பட வேண்டியதும் முக்கியமானதே" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு