Published:Updated:

சிவனடியார்கள் ருத்திராட்ச ஆபரணங்கள் அணிவது ஏன்.?

 உருத்திராட்ச
உருத்திராட்ச

ருத்திராட்சங்கள் இயற்கையாகவே, தம்முள் ஒட்டிக்கொண்டு காய்ப்பதுண்டு. இத்தகையன, உமையும்; சிவனும் சேர்ந்த வடிவெனக் கருதி, மேலும் கீழும் தங்கக்காரையிட்டு, பதக்கமாக அணிவதற்கு 'கௌரி சங்கரம்' என்பது பெயர்.

``ருத்திராட்சங்களை முறைப்படி அணிவதே விரதம் ஆகும். அந்த விரதத்தை நான் சதா சர்வ காலமும் மேற்கொண்டுள்ளேன்" என்று சிவ பெருமானே கூறுவதாக புராணங்கள் தெரிவிப்பதால் தெய்விகப் பொருளாக சிவனடியார்கள் ருத்திராட்ச ஆபரணங்களை அணிகிறார்கள். சிவச் சின்னங்களுள் தலையாயதும்; முதன்மையானதுமான ருத்திராட்சம் இறைவன் படைப்புகளில் வியப்புக்குரிய ஒன்றாகும். சிவனடியார்கள் விரும்பி அணியும் சிவச் சாதனமான ருத்திராட்ச மணிகள் பொதுவாக `கணிவடம்' (ஜபமாலை) ஆக பயன்படுத்தப் பெறுகின்றன.

ஆயினும் உயர் மணிகளுடன் சேர்த்து ஆபரணமாக அணிவதும் சிறப்புடைய விஷயமாக கருதப்பட்டதால், ருத்திராட்ச மணிகள் சைவ நேயர்களால் விரும்பி அணியப்படுவதாக அமைகிறது.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

இத்தகு சிறப்பு வாய்ந்த ருத்திராட்சங்களை, ஆபரணங்களாக ஏற்றருள்வது சைவ மடங்களை ஆட்சி செய்யும் ஆதீனகர்த்தர்களின் மரபாக உள்ளது. குருபூஜை போன்ற விசேஷ காலங்களில், அற்புதமான ருத்திராட்ச ஆபரணங்களை அணிந்து `ருத்திராட்ச மாலா அலங்கிருதர்'-ஆக தரிசனம் தந்தருளுகின்றனர். சாதாரண நாள்களில், ஆதீனகர்த்தர்கள் `சிரோவேடம்' தரித்தவர்களாகவே காட்சித் தருவர். குருபூஜை விழாக் காலங்களில், ருத்திராட்ச வடத்தினால் ஆன கொத்துத்தாழ்வடம் எனும் பன்மணிக் கோவையை, வளையம் போன்று மடித்துத் தலையில் ஞான மகுடமாகச் சூடுவர்.

பல சிறிய ருத்திராட்ச மாலைகளைச் சேர்த்துக் கொத்தாக அமைப்பது `தாழ்வடம்'. இது நீளம் அதிகமாக வயிற்றுப் பகுதி வரை வரும்படி அமையும் ஆபரணம். மூன்று ஜோடி ருத்திராட்ச பன்மணித் தாழ்வடங்கள் சிறப்புடையன; முதலாவது ஒரே அளவினதாக உடைய முத்து மணிகளும்; ருத்திராட்ச மணிகளும் மாற்றிக் கோத்த மாலை ' முத்து அட்ச வடம்' எனப்படுகிறது.

இரண்டாவது, பவழ மணிகளை மாற்றிக் கோத்த `பவள அட்ச வடக் கொத்து' என்றும், மூன்றாவது, பொன்மணிகளுடன் சேர்த்துக் கோக்கப்பட்ட `பொன் அட்ச மாலைக் கொத்து' என்றும் அழைக்கப்படுகிறது. தாழ்வடங்கள் இணையும் இடத்தில், பெரிய மணிகள், பதக்கங்கள் கோக்கப்பட்டிருக்கும்.

ருத்திராட்ச மாலை
ருத்திராட்ச மாலை

பொதுவாக, ருத்திராட்ச மணிகளைக் கோத்த கயிற்றின் இருமுனைகளையும் இணைத்து முடிக்கும் இடத்தில் தொங்கலாக அமைக்கும் பெரிய மணி , `நாயக மணி' எனப்படும். ஆதீனகர்த்தர்கள் தலையில் சிரோ வடத்தை அணியும்போது, இம்மணி பின் கழுத்தில் வரும்படி அணிவது மரபு. இந்த நாயக மணி அமையும் இடத்தில், மகர கண்டிகை, கௌரி சங்கரம் போன்ற பதக்கங்களும் இடம் பெறுவது வழக்கமாகும்.

ருத்திராட்சங்கள் இயற்கையாகவே, தம்முள் ஒட்டிக்கொண்டு காய்ப்பதுண்டு. இத்தகையன, உமையும்; சிவனும் சேர்ந்த வடிவெனக் கருதி, மேலும் கீழும் தங்கக்காரையிட்டு, பதக்கமாக அணிவதற்கு `கௌரி சங்கரம்' என்பது பெயர். இந்தக் காரைகளில், சிவலிங்க வடிவங்கள் புடைப்புகளாக அமைக்கப் பெற்றிருப்பதும் சிறப்பு. இத்தகு ஆபரணங்கள் சிறப்பான வேலைப்பாடுகளும், ஆங்காங்கே பதிக்கப் பெற்ற வண்ணக் கற்களும் கொண்டவை.

தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீனம்

சிரத்தில், கொத்துத் தாழ்வட மகுடம்

செவிகளில், ஆறுகட்டி சுந்தர வேடம்

தோள்களில், ருத்திராட்ச வாகுவளைகள், கங்கணங்கள்

மார்பில், ஏறுமுகக் கண்டி, கொத்துத் தாழ் வட மாலைகள்

ஆகிய ஆபரணங்களுடன், ஆதீனகர்த்தர்கள் `ருத்திராட்ச மாலா அலங்கிருதர்' களாக காட்சி தருவர். விழா நேரங்களிலும், அன்பர்களைக் கௌரவிக்கும்போதும், `பொற்கிழி' அளிக்கும்போதும் ஆதீனகர்த்தர்கள் ருத்திராட்ச மாலை அணிவித்து ஆசீர்வதிப்பது திருமடங்களின் சிறப்புகளில் ஒன்றாகும்.

அடுத்த கட்டுரைக்கு