Published:Updated:

செஞ்சி: அழியும் தறுவாயில் இருக்கும் பல்லவர் காலத்துப் பொக்கிஷம் காக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

சிதைந்த நிலையில் கோயில்

1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோயில், ஓவியம், மற்றும் சிலைகள் அழியும் தறுவாயில் இருப்பதைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், அவை காக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

செஞ்சி: அழியும் தறுவாயில் இருக்கும் பல்லவர் காலத்துப் பொக்கிஷம் காக்கப்படுமா? வலுக்கும் கோரிக்கை!

1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த கோயில், ஓவியம், மற்றும் சிலைகள் அழியும் தறுவாயில் இருப்பதைக் கண்டறிந்த ஆய்வாளர்கள், அவை காக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Published:Updated:
சிதைந்த நிலையில் கோயில்

தமிழகத்தில் ஆங்காங்கே கண்டறியப்படும் ஒவ்வொரு தொன்மையான சின்னங்களும், கல்வெட்டுகளும், தகவல்களும் நம் முன்னோர்களின் காலத்தைய வாழ்க்கை முறையை மென்மேலும் வெளிப்படுத்தி வருகின்றன. அத்தகவல்கள் நமக்கு வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்த தவறுவதில்லை. அந்த வரிசையில், விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கண்டறியப்பட்டுள்ள ஓவியமும், சிலைகளும், சிற்பங்களும் நமக்கு பல தகவல்களை எடுத்துரைத்தாலும், அவை யாவும் அழியும் தறுவாயில் இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

இதுதொடர்பாக திருவண்ணாமலை ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வத்திடம் பேசினோம். "விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ளது பாக்கம் கிராமம். இந்தக் கிராமத்தை ஒட்டியபடி அமைந்துள்ள சஞ்சீவி மலையின் அடிவாரத்தில் கொற்றவை சிலை இருப்பதாகக் கேள்விப்பட்டு அதை ஆய்வு செய்வதற்காக நண்பருடன் அங்கு சென்றேன். அந்தக் கோயிலில் பூஜை செய்து வரும் விஜயகுமார் என்பவர் இந்த மலைக்கு மேலே 'நீலகிரி அம்மன் கோயில்' இருப்பதாக கூறினார். அதன்படி அந்தக் கோயிலை பார்ப்பதற்குச் சென்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அழியும் நிலையில் பழைமையான ஓவியம்
அழியும் நிலையில் பழைமையான ஓவியம்

சீராக ஏறும் மலை பாதையாக இல்லாமல், செங்குத்தாகச் சென்றது. சுமார் 821 அடி உயரத்தில் ஒரு தட்டையான பாறையின் மீது பல்லவர் காலத்தைச் சேர்ந்த செங்கற்களால் ஆன தளியொன்று சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது. வடக்கு திசை நோக்கியபடி ஐந்தடி உயரத்தில் காணப்பட்ட அந்த செங்கல் தளியின் முன்பாதி, சிதைந்த நிலையில் காணப்பட்டது. சிதிலமடைந்த செங்கல் தளியினுள் காணப்படும் 'விஷ்ணு துர்க்கை' இன்று நீலகிரி அம்மன் என்ற பெயரால் அப்பகுதியில் அழைக்கப்படுகிறார். இந்தச் சிலையை சுற்றியுள்ள மூன்று பக்கவாட்டு சுவர்களிலும் பல்லவர் காலத்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்போது அவை யாவும் அழிந்து காலத்தின் சாட்சியாய் ஓரிரு இடங்களில் மட்டுமே நன்றாகத் தெரிகிறது. மூன்று பக்கவாட்டு சுவற்றிலும் சுமார் நான்கு அடி அகலத்திலும் மூன்று அடி உயரத்திலும் இந்த ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதில், விஷ்ணு துர்க்கை சிலைக்குப் பின்னால் இருக்கும் சுவற்றில் மட்டுமே 'சோமஸ்கந்தர் ஓவியம்' சிதைந்த நிலையில் இருப்பதை காணமுடிகிறது. மற்ற இரு சுற்றிலும் உள்ள ஓவியங்கள் முற்றிலும் உதிர்ந்த நிலையில், அதன் தடம் மட்டுமே வெள்ளை பூச்சுடன் காணப்படுகிறது. சிதைந்த நிலையில் காணப்படும் இந்த சோமாஸ்கந்தர் ஓவியத்தைப் பார்க்கும்போது, காஞ்சி கைலாசநாதர் மற்றும் பனமலை தாளகிரீஸ்வரர் கோயிலிலுள்ள ராஜசிம்ம பல்லவன் (கி.பி.700 - 728) காலத்திய ஓவியத்துடன் ஒத்துப்போகிறது. ஆகவே, இதன் காலமும் ராஜசிம்ம பல்லவனின் காலத்தியது எனக் கருதலாம். ராஜசிம்மனின் ஓவியங்கள் பொதுவாகவே அரியதாகவை. இதுவரை இரண்டு, மூன்று இடங்களில் மட்டுமே காண கிடைத்துள்ளது. அப்படிப் பார்த்தால், இந்த அரிதான ஓவியமும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமே. இங்கு காணப்படும் விஷ்ணு துர்க்கையின் காலம் 8ம் நூற்றாண்டின் துவக்கமாக இருக்கலாம்.

மதில் சுவர் போன்ற அமைப்பு
மதில் சுவர் போன்ற அமைப்பு

கரண்டமகுடம் விஷ்ணு துர்க்கையின் தலையை அலங்கரிக்க, காதுகளில் பத்ர குண்டலங்கள் சூட்டியபடி அழகிய முகபாவங்களோடு காணப்படுகிறார். நான்கு கரங்களில், மேல் இரண்டு கரத்தில் சக்கரமும், சங்கும் ஏந்தியபடியும்; கீழ் இரு கரங்களில், வலது கரத்தில் அபய முத்திரையும், இடது கரத்தை இடையில் மீது ஊன்றியபடியும் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதுமட்டுமின்றி, நான்கு கரங்களிலும் தோள்வளையும், கைவளையும் இடம்பெற்றுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் துர்க்கை வடக்கு நோக்கியபடி காணப்படுவதால், ராஜசிம்ம பல்லவன் காலத்தில் காவல் தெய்வமாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு இருக்கக்கூடும் எனக் கருதமுடிகிறது. இந்த மலையிலிருந்து சுமார் 50 அடி கீழே இறங்கியபோது, கருங்கற்களால் ஆன கோட்டை சுவர் போன்ற அமைப்பு ஒன்று காணப்படுகிறது. இவை, இந்தப் பகுதியில் கோட்டை அல்லது சிறு கோயில்கள் இருந்திருக்கக்கூடும் என்பதற்கு சாட்சியங்களாக காணப்படுகின்றன. மலையின் அடிவாரத்தில் உள்ள கொற்றவை சிலை 9ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். இந்த ஊரின் வடக்கு பகுதியில் காணப்படும் சப்தமாதர்களின் சிலைகள், திறந்தவெளியில் சிறு மதில் மட்டும் எழுப்பப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

நான்கு கரங்களுடன் லலிதாசனத்தில் பிள்ளையாரும், கோடாரி மற்றும் பாம்பை கரத்தில் ஏந்தியபடி கபால மாலை அணிந்து சாமுண்டியும், வஜ்ராயுதம் ஏந்தி மயிலின் மீது அமர்ந்து கௌரியும், சங்கு, சக்கரம் ஏந்தி எருமை மீது அமர்ந்து வராகியும், சங்கு, சக்கரத்துடன் வைஷ்ணவியும், கரண்ட மகுடம் தரித்து, அங்குசம், அக்கமாலையுடன் மகேஸ்வரியும், நான்கு முகங்களுடன் பிராமியும், கீர்த்தி மகுடத்துடன் கரங்களில் அங்குசம், தாமரை ஏந்திய நிலையில் இந்திராணியும் பலகைக்கற்களில் தனித்தனியே அழகுற செதுக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளனர்.

சப்தமாதர்கள் சிற்பங்கள்
சப்தமாதர்கள் சிற்பங்கள்

அதற்கு எதிர் திசையில், சாலையின் ஓரமாக பாதிக்குமேல் புதைந்த நிலையில் நான்கு கரங்களுடன் கூடிய வலம்புரி பிள்ளையாரின் சிற்பமும் காணப்படுகிறது. இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.9-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். இத்தனை வரலாற்றுச் சிற்பங்கள் நிறைந்துள்ள இந்த ஊரில், மலையின் மீது உள்ள பல்லவர்கால ஓவியமும், கோயிலும், சிலையும் காக்கப்பட வேண்டியவை. அதேபோல, திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள சப்தமாதர்கள் சிற்பங்களும் கூரை அமைத்து பாதுகாக்கப்பட வேண்டியவை. இவற்றைப் பாதுகாப்பதின் மூலம் எதிர்வரும் காலங்களில் நம் சந்ததிகள் இவற்றைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்" என்றார்.

இந்தத் தொன்மையான சின்னங்கள் காக்கப்படுமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism