வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு சார்பில் எஸ்.எஸ் காலனி எஸ்.எம்.கே திருமண மண்டபத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் 'ஸ்ரீரங்க மகாத்மியம்' எனும் தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் ஆன்மிக உரையாற்றினார்.

"108 திவ்ய தலங்களில் ஸ்ரீரங்கம் முதலாவது தலமாகும். இதை பூலோக வைகுண்டம் என்றும் கூறுவர். இந்த தலம் உருவான விதமே சிலிர்ப்பூட்டக்கூடிய ஒன்றாகும்.
வைகுண்டத்தில் மகாவிஷ்ணு முதலில் படைத்தது பிரம்மாவைத் தான். பிரம்மாவிடம் நான்கு வேதங்களையும் தந்து, பின் உலகையும் உயிர்களையும் படைக்கச் செய்தார். அத்தோடு பிரம்மா தன்னைப் படைத்த மஹாவிஷ்ணுவின் பிரணவாகார சொரூபத்தை ஒரு சிலை வடிவில் செய்து அதை பூஜிக்கவும் செய்தார்.
பிரம்மா தனது சத்ய லோகத்தில் பூஜித்த அந்தப் பிரணவாகார விமானமுடன் கூடிய சிலைதான் இன்றும் ஸ்ரீரங்கத்தில் நம் வழிபாட்டில் உள்ளது. இந்தச் சிலையை சூர்ய வம்சத்தில் வந்த மனுவின் புதல்வனான இட்சவாகு என்பவன் கடும் தவம் புரிந்து பூமிக்கு கொண்டுவந்து, அயோத்தியில் சரயூ நதிக்கரையில் வைத்து பூஜித்து வந்தான்.

பின் அந்த வம்சத்தில் ஸ்ரீராமபிரான் அவதாரம் செய்து இந்த மூர்த்தியை வழிபட்டார். பின்னர் இதை விபீஷணன் வசம் ஒப்படைத்து இலங்கைக்குக் கொண்டுசெல்லப் பணித்தார்.
ஆனால் இதை இலங்கை செல்லும்வரை இரு நாழிகைக்கு மேல் கீழே எங்கும் வைத்துவிடக்கூடாது என்கிற நிபந்தனையுடன்தான் விபீஷணனிடம் தருகிறான் ராமன்.

இருந்தும் காவிரித்தீவை கடக்கும்போது அங்கு தங்கிக் காவிரியில் விபீஷணன் நீராடுகிறான். அது, இரு நாழிகைக்கு மேல் சென்று விட்ட நிலையில் அந்தப் பிரணவாகார விமானமுடன் கூடிய சிலை அந்தத் தீவில் கோயில் கொள்கிறது. அதன் பிறகே காவிரித்தீவு திருவரங்கம் என்றானது.
இந்த திருவரங்கம் பிற்காலத்தில் சோழ அரசர்களால் பெருங்கோயிலாக உருமாறியது. இந்தத் தலத்தில் இருந்து கொண்டுதான் ஸ்ரீராமாநுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகர், ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் வைணவத்தை வளர்த்தனர்.
இவர்களால், 'தமிழ் மறை' எனப்படும் நாலாயிர திவ்யபிரபந்தமும் இங்கே இறைவன் முன்னால் பாராயணம் செய்யப்பட்டு, அந்த வழக்கம் இப்போதும் தொடர்ந்து வருகிறது. திருவரங்கம் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் ஆணிவேராய்த் திகழும் தலமாகும். 'அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்' என்று ஆழ்வார்கள் சொன்னது போல நாம் வாழ்கிற காலத்திலேயே இறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும்." என்று பேசினார்.