Published:Updated:

ஶ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஜாகீர் உசேன் வெளியேற்றப்பட்ட விவகாரம்... சட்டம் என்ன சொல்கிறது?

ஶ்ரீரங்கம் கோயில்
News
ஶ்ரீரங்கம் கோயில்

'இந்துக் கோயில்களுக்குள் அந்நிய மதத்தவர்கள் செல்ல முடியாதா' என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதும் இதற்கு முன்பும் ஶ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோயில்களில் இந்து மதத்தவர்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை என்ற போர்டுகளைப் பார்த்திருந்தாலும் அதன் சட்டபூர்வமான மதிப்பு என்ன?

ஶ்ரீரங்கம் திருக்கோயில், உலகத்தின் உள்ள இந்துக் கோயில்களில் பரப்பளவில் மூன்றாவது பெரிய கோயில். புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இத்திருக்கோயில் வரலாற்றுக் காலத்தில் பல்வேறு படையெடுப்புகளுக்கு உள்ளானது. இங்கிருக்கும் பெருமாள் விக்ரகம் பல ஆண்டுகள் வேறு தலங்களுக்கு மாற்றப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. வைணவத்தின் தலைநகராகத் திகழும் இத்திருக்கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். அப்படிப்பட்ட ஆலயத்தில் நடந்த நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு சர்ச்சை தற்போது சமூக ஊடகங்களில் சுழன்று வருகிறது.

ஶ்ரீரங்கம் கோயில்
ஶ்ரீரங்கம் கோயில்

ஜாகீர் உசேன், நாடறிந்த நாட்டியக் கலைஞர். இஸ்லாமியராக இருந்தபோதும் இந்து மதம் சார்ந்த வழிபாடுகளில் ஈடுபாடு கொண்டவராகவே இருந்துவருகிறார். பல பழைமையான ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்திருக்கும் ஜாகீர் உசேன் அங்கு நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். அப்படி அவர் ஶ்ரீரங்கத்திலும் தனது நாட்டிய நிகழ்ச்சியை நிகழ்த்தியிருக்கிறார். அவருக்கு அரங்கன் மீது மிகுந்த பக்தி உண்டு என்பதை ஶ்ரீரங்கம் திருக்கோயிலைச் சார்ந்தவர்கள் அறிவார்கள். அதனால்தான் இந்து அல்லாதவர் என்றபோதும் அவர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

ஜாகீர் உசேன், இரு தினங்களுக்கு முன்பு ரங்கநாதன் நரசிம்மன் என்பவரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்று புகார் எழுந்துள்ளது. 'மாற்று மதத்தவன் என்று சொல்லி இழிவுபடுத்தித் தன்னை பலவந்தமாகப் பிடித்துத் தள்ளினார்' என்றும் அதனால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் ஜாகீர் உசேன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அதன்பின் இந்த விஷயம் சமூக ஊடகங்களின் வாயிலாகப் பரவி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கருத்துச் சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளது.

ஸ்டாலினுடன் ஜாகீர் உசேன்
ஸ்டாலினுடன் ஜாகீர் உசேன்

இந்தச் சர்ச்சையால் பலருக்கும் 'இந்துக் கோயில்களுக்குள் அந்நிய மதத்தவர்கள் செல்ல முடியாதா' என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்போதும் இதற்கு முன்பும் ஶ்ரீரங்கம் உள்ளிட்ட பல கோயில்களில் இந்து மதத்தவர்கள் அல்லாதவர்கள் உள்ளே நுழைய அனுமதியில்லை என்ற போர்டுகளைப் பார்த்திருந்தாலும் அதன் சட்டபூர்வமான மதிப்பு என்ன என்பது குறித்துக் கேள்வியெழுப்புகிறார்கள்.

உண்மையில் சட்டம் என்ன சொல்கிறது? இந்துக் கோயில்களுக்குள் பிற மதத்தவர்கள் செல்ல முடியாதா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''தமிழ்நாடு டெம்பிள் என்ட்ரி ஆதரைசேஷன் ஏக்ட் 1947-ன் செக்‌ஷன் 3-ல் சில விதிகள் உள்ளன. அதன்படி இந்து அல்லாதவர்கள், பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான தீட்டு இருப்பவர்கள், மாதவிலக்கான பெண்கள், மது அருந்தியவர்கள், தொற்று நோய் பரப்பும் அபாயம் இருப்பவர்கள், துணையில்லாமல் வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள், குளிக்காதவர்கள் ஆகியோர் ஆலயத்துக்குள் நுழையக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கோயில்களுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையமுடியாது என்பது சட்டபூர்வமாக சரியே. கருணாநிதி தலைமையிலான தி.மு.க அரசு 1970-ம் ஆண்டு இந்தச் சட்டத்தில் முக்கியமான திருத்தம் ஒன்றைச் செய்தது. அந்தச் சட்டத்தில் 4 ஏ என்கிற பிரிவை உருவாக்கி, 'இந்துக்கள் அல்லாதவர்களும் கோயில்களுக்குள் செல்லலாம்' என்று ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தது. அப்போது அதற்கு எதிராக கல்யாண் தாஸ் என்பவர் தொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் 5.7.1972 அன்று அந்த சட்டத் திருத்தத்தை ரத்துச் செய்து தீர்ப்பு வழங்கியது.

ஜாகீர் உசேன்
ஜாகீர் உசேன்

அந்தத் தீர்ப்பே இன்றுவரை தொடர்கிறது. எனவே இந்துக்கள் அல்லாதவர்கள் இந்துக் கோயில்களுக்குள் செல்வது என்பது சட்டப்படித் தடை செய்யப்பட்ட ஒன்றுதான்" என்கிறார்கள்.

ஆனால் பக்தர்கள் தரப்பில், "சட்டம் இப்படி இருந்தாலும் பல அந்நிய மதத்தவர்கள் கோயில்களுக்குள் வந்து வழிபாடு செய்வது எப்போதும் இருக்கும் நடைமுறையே. பக்தியின் காரணமாக அவர்கள் அனுமதிக்கப்படுவதை நாம் அறிவோம். பல சுற்றுலாத்தலங்களில் இருக்கும் ஆலயங்களில் பக்தர்கள் அனைவரும் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பதை சோதனை செய்து அனுமதிப்பதில்லை. அதேவேளை, வரும் பக்தர் நாடறிந்த முக்கியப் பிரமுகராக இருந்தால் அவர் மதம், பெயர் ஆகியன எல்லோருக்கும் தெரிந்தே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் பிரச்னைகள் எழுவதும் அடங்குவதும் வாடிக்கையே'' என்கிறார்கள்.

இந்தப் பிரச்னை குறித்து உள்ளூர் பக்தர்கள் சிலரிடம் பேசினோம்.

"ஜாகீர் உசேனை வெளியேற்றியதாகக் குற்றம் சாட்டப்படும் ரங்கநாதன் நரசிம்மன் தொடர்ந்து ஶ்ரீரங்க ஆலய நிர்வாகத்தின் மீது பல வழக்குகள் தொடுத்திருப்பவர். சம்பவம் நடந்த அன்று எதேச்சையாக ஜாகீர் உசேன் உள்ளே வருவதைக் கண்டு, 'இஸ்லாமியரான நீ எப்படிக் கோயிலுக்குள் வரலாம்' என்று கேட்டார் என்கிறார்கள்" என்கிற அளவோடு நிறுத்திக் கொண்டார்கள்.

ஜாகீர் உசேனை வெளியே அனுப்பிய விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானதும் தன் தரப்பு நியாயங்களைச் சொல்லி ரங்கநாதன் நரசிம்மன் வீடியோ பதிவுகள் வெளியிட்டதுடன், நேற்று (12.12.2021) ஶ்ரீ ரங்கநாத ஸ்வாமி கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் மீது இந்துக்கள் அல்லாதவர்களைக் கோயில் வளாகத்துக்குள் அனுமதித்தது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தற்போது ஊடகங்களில் இந்தச் சர்ச்சையே பெரிதாக உள்ள நிலையில் இதுகுறித்து ஆன்மிகம் சார்ந்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள நாடறிந்த ஆன்மிகச் செயல்பாட்டாளர் ஒருவரிடம் பேசினோம். முதலில் இது குறித்துப் பேசவே மறுத்தவர் பின் சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
ஜாகீர் உசேன்
ஜாகீர் உசேன்

"அந்தக் காலத்திலிருந்தே பிற மதத்தவர்களை உள்ளே அனுமதிக்கும் பழக்கம் இல்லை. படையெடுப்பின்போது வலுக்கட்டாயமாக உள் நுழைந்தால் மட்டுமே அது சாத்தியம். அனுமதி கேட்டால் அவர்களை அனுமதிக்கும் வழக்கம் கிடையாது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளை வேண்டிக்கொண்டு ஆற்காட்டுப் போரில் வெற்றி பெற்ற ராபர்ட் கிளைவ் தான் வேண்டிக்கொண்டபடி மகர கண்டியை கோயில் கொடிமரத்துக்குப் பின்புறம் நின்றே பெருமாளுக்கு சமர்ப்பணம் செய்தான் என்கிறது வரலாறு.

கோயிலில் உற்சவர் என்னும் தத்துவம் உருவானதே சகலரும் இறைவனின் தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான். எனவே எல்லா மதத்தவரும் உற்சவர் வெளியே வரும்போது வழிபடலாம் என்கிற நடைமுறைதான் இப்போதும் இருக்கிறது. ஏன் ஶ்ரீரங்கத்திலேகூட வடநாட்டு மன்னர் ஒருவர் பரிசுப்பொருள்களோடு காத்திருக்க, அரங்கனின் உத்தரவு கிடைக்காமல் தன் பணியாளரை விட்டுவிட்டுச் சென்றார் என்றும் அரங்கனின் உத்தரவு கிடைத்தபின்னரே அவை ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதும் ஶ்ரீரங்கம் கோயில் வரலாற்றில் பதிவாகியிருக்கும் ஶ்ரீவைணவர்களின் நம்பிக்கை. அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்துக்களைத் தவிர வேறு மதத்தவர்கள் உள்ளே வரக்கூடாது என்னும் சட்டமும் கொண்டுவரப்பட்டது.

இந்தப் பிரச்னையைப் பொறுத்தவரையில் இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, இருவரும் கோயில் நிர்வாகம் சார்ந்தவர்கள் அல்ல. இருவருமே தங்களை அரங்கனின் பக்தர்களாகக் கருதுபவர்கள். அப்படி இருக்கும்போது இப்படித் தேவையில்லாத பிரச்னையைப் பெரிதுபடுத்துவானேன்? கோயிலுக்குள் பக்தர்கள் இருவருக்குள் சண்டைகள் வருவது பெரிய விஷயம் ஒன்றும் இல்லை.

ஜாகீர் உசேன் கோயில் நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியிருக்கும்போது அவர் கோயில் நிர்வாகத்திடம் புகார் செய்து தரிசனம் செய்து வந்திருக்கலாமே? இப்போது தேவையில்லாமல் கோயிலின் பெயர் இதில் அடிபடாமல் இருந்திருக்கும்.

ஶ்ரீரங்கம்  பெருமாள்
ஶ்ரீரங்கம் பெருமாள்

அதேவேளையில் பக்தியோடு வரும் ஒருவரைத் தடுப்பது என்பது சட்டப்படி சரியாக இருக்கலாமே தவிர, தர்மப்படி சரியாக இருக்காது. கபீர்தாஸ் போன்ற இஸ்லாமியப் பெருமக்களை நாம் பக்தி மரபில் மகான்களாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம்தானே... அப்படியிருக்கையில் சாதி, மத, இன, தேச அடிப்படைகளைக் கடந்து எல்லோரையும் இறைவனை அணுகி வழிபட அனுமதிக்க வேண்டியது இந்தக் காலத்தின் கட்டாயம். சமீபகாலமாக கோயில்கள் தொடர்பான பல பிரச்னைகள் அரசியலாக்கப்பட்டு வருகின்றன. இதைப் புரிந்து நடந்துகொண்டால் பக்தியும் பெருகும்; சர்ச்சைகளும் குறையும்" என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

நம் கோயில்களையும் பாரம்பர்யத்தையும் காக்கும் கடமை பக்தர்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட பக்தர்கள் தேவையில்லாமல் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபடுவது, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நம் மரபுக்குப் புகழ் சேர்க்காது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.