விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகிலுள்ள தாணிப்பாறையில் உள்ளது மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம். இதன் மலைப்பாதை வழியாகச் சென்றால், ’சதுரகிரி மலை’க்குச் செல்லலாம். சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையின் உச்சியில், சுந்தரமகாலிங்க சுவாமி மற்றும் சந்தனமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது.

இந்த மலைப்பாதைகளுக்கு இடையில் உள்ள ஐந்து பெரிய மலைகளைக் கடந்தே ’சதுரகிரி மலை’யை அடைய முடியும். சித்தர்களின் தலைமைப்பீடமாக இந்தச் சதுரகிரியைச் சொல்கிறார்கள். 18 சித்தர்களும் இந்த மலைப்பகுதியில் வாசம் செய்வதாகக் கூறுகிறார்கள் பக்தர்கள். மலைப்பகுதியில் ஆங்காங்கே காணப்படும் குகைகளும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது, இந்த சந்தனமகாலிங்க சுவாமி கோயிலில்தான். ஆண்டுக்கு ஒருமுறை சித்தர்களுக்கு இங்கு விசேஷ பூஜையும் நடத்தப்படுகிறது. மலையேறிச் சென்று சந்தனமகாலிங்கத்தையும், சுந்தரமகாலிங்கத்தையும் வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பதாலும், 18 சித்தர்களின் அருளும் கிடைக்கும் என்பதாலும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள், பல சங்கடங்களைத் தாண்டியும் சதுரகிரி மலையேறி சிவ பரம்பொருளை வழிபடுகின்றனர்.

இம்மலை மேல் உள்ள கோயிலுக்குச் செல்ல, ’அமாவாசை’, ‘பெளர்ணமி’, ’பிரதோஷம்’ ஆகிய நாள்களில் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இம்மலைப்பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கினால் கடந்த ஓராண்டாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதையடுத்து, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ’ஆடிப் பெளர்ணமி’யை முன்னிட்டு சதுரகிரிமலைக்குச் செல்ல நேற்று (21-ம் தேதி) முதல் வரும் 24-ம் தேதி வரை 4 நாள்கள், மலைப்பாதையில் சென்று வரவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

’மலைக்குச் செல்லும் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும், எளிதில் தீப்பற்றும் பொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது’ என, வனத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதுடன், ’மலைப்பகுதியில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டால், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட மாட்டாது’ எனவும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
கொரோனா ஊரடங்கினால் ஓராண்டுக்குப் பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சதுரகிரி மலை நோக்கிப் படையெடுத்துள்ளனர்.