Published:Updated:

அத்திவரதரை தரிசிக்க வரும் குடியரசுத் தலைவர்... ஏற்பாடுகள் தீவிரம்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 12 - ம் தேதி அத்திவரதரை தரிசிக்க வருகை தரவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அத்திவரதர்
அத்திவரதர்

காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயிலில் நடைபெறும் அத்திவரதர் வைபவத்திற்கு வரும் மக்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள், ஆன்மிகவாதிகள், திரை நட்சத்திரங்கள் என தினம்தினம் வி.ஐ.பிக்கள் வருகை தருகிறார்கள்.

அத்திவரதர்
அத்திவரதர்

ஜூலை 1-ம் தேதி அத்திவரதர் வைபவம் கோலாகலமாகத் தொடங்கியது. தினமும் சராசரியாக ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகிறார்கள். கடந்த சில தினங்களாக துர்கா ஸ்டாலின், பொன்.ராதா கிருஷ்ணன், சௌமியா அன்புமணி என அரசியல் பிரமுகர்கள் தரிசனம் செய்தனர். திரை நட்சத்திரங்களும் தினமும் வருகிறார்கள். இந்த நிலையில் இன்றுவரை பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். இன்று (10.7.2019) மாலை சங்கரமடாதிபதி விஜயேந்திரர் அத்திவரதரை தரிசனம் செய்தார்.

பிரதமர் மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டவர்களும் அத்திவரை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க 12-ம் தேதி மதியம் 3 மணிக்கு காஞ்சிபுரம் வருகிறார்.

விஜயேந்திரர்
விஜயேந்திரர்

டெல்லியிலிருந்து 12 மணிக்கு தனிவிமானத்தில் கிளம்பும் அவர் சென்னை விமான நிலையம் வந்திறங்குவார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி வளாகத்திற்கு வருகிறார்.

பின்பு அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் தேவராஜ பெருமாள் கோயில் மேற்குக் கோபுரம் வழியாக அத்திவரதரை தரிசனம் செய்கிறார்.

விஜயேந்திரர்
விஜயேந்திரர்

12 -ம் தேதி காஞ்சிபுரம் வரும் குடியரசுத் தலைவர், அன்று 3 மணியிலிருந்து 4 மணிவரை ஆலயத்தில் இருப்பார் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 11- ம் தேதி ஆனி உற்சவத்தை முன்னிட்டு மாலை 5 மணிவரை மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.