Published:Updated:

காதல் கைகூட வணங்க வேண்டிய கோயில்கள்! #ValentinesDay

காதல் கைகூட வணங்க வேண்டிய கோயில்கள்! #ValentinesDay
காதல் கைகூட வணங்க வேண்டிய கோயில்கள்! #ValentinesDay

காதல் கைகூட வணங்க வேண்டிய கோயில்கள்!

ருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு. ஒருத்தியோ அல்லது ஒருவனோ உள்ளம் கொள்ளைகொண்ட காதலனாகவோ அல்லது காதலியாகவோ இருந்துவிட்டால் வாழ்க்கை மேலும் இனிமையாகும். ஆண்டாள் தன் காதல் கைகூட திருமாலிருஞ்சோலைப் பெருமாளை வேண்டிக்கொண்டாள். சுந்தரர், இறைவனையே காதலுக்குத் தூது அனுப்பித் தன் காதலில் வெற்றி கண்டார். அன்னை அம்பிகை காதலோடு தவமிருந்து சிவபெருமானைச் சேர்ந்தாள். சிவபெருமானோ எல்லோருக்கும் ஒருபடி மேல் போய் தன் உடலில் ஒரு பாகத்தையே அன்னைக்குத் தந்தார். முருகப்பெருமானும் வள்ளியைக் காதலித்துக் கரம் பற்றினார். காதலைக் கடவுளர்களும் போற்றுகின்றனர். நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவதுபோலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட வணங்கவேண்டிய கோயில்கள் சிலவற்றைக் காணலாம். 


காதலித்தால் முருகன் போலக் காதலிக்க வேண்டும்! - வள்ளிமலை

முருகன் தமிழ்க்கடவுள் மட்டுமல்ல, காதல் கடவுளும்கூட. அவன் வள்ளியின் மேல் காதல் கொண்டான். அதற்காக அவள் வசித்த வள்ளிமலையில் பல விளையாடல்களை நிகழ்த்தினான். குறிசொல்லும் குறத்தியாக மாறினான். வேடனாக வந்து `மேயாத மான்...' எனப் பாடினான். அண்ணன் விநாயகரைத் துணைகொண்டு யானையைக் காட்டி வள்ளியைப் பயமுறுத்தி, கிழவனாக வந்து வள்ளியைக் காத்து அவளைக் கொஞ்சினான். மரமாக மாறி நின்று அவள் உறவினர்களோடு விளையாடினான். பின்பு அவளுக்குத் தன் சுய உருவம் காட்டி அவளை மணந்தான். காதலுக்காக இத்தனை வேடங்கள் இட்ட அந்த முருகக் கடவுளும் காதல் குறத்தி வள்ளிப் பிராட்டியும் வாசம் செய்யும் வள்ளிமலையை, `காதல் மலை' என்றே சொல்லலாம். காதலர்கள் அங்குச்சென்று மனமுருகப் பிரார்த்தித்தால் காதல் கைகூடி திருமணத்தில் முடியும் என்பது அங்கு வந்து செல்லும் காதல் ஜோடிகளையும் தம்பதிகளையும் காணும்போதே புரிந்துகொள்ளமுடியும். காதலர்கள் மனமுருக அங்கு வள்ளிப் பிராட்டியிடம் வேண்டிக் கொள்ள, காதலில் வெற்றி பெற வரம் அருள்வாள் என்பது நம்பிக்கை.

தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயம்!

ரதி - மன்மதனுக்கு தமிழகக் கோயில்கள் பலவற்றில் எழில் மிகுந்த சிலைகள் உள்ளன. தென்காசி, திருக்கோகர்ணம், மதுரை, தாரமங்கலம், திருக்குறுக்கை, தாடிக்கொம்பு, காஞ்சிபுரம், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஆலயங்களில் ரதி - மன்மதன் சிலைகள் உள்ளன. தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் ஒரு வழக்கம் உண்டு. 

பெண்கள் காதல் கைகூட அங்கிருக்கும் மன்மதனின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும். அதேபோல ஆண்கள் ரதியின் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தங்கள் விருப்பம் நிறைவேறி திருமணமானவுடன் தம்பதிகளாக மீண்டும் அங்கு வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பதும் நியதி.

காதல் வரமருளும் மரங்கள்

ஆலயங்களில் இருக்கும் தலவிருட்சங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. விருட்சங்களை வணங்கி வழிபடுவதால் கிடைக்கும் விசேஷ பலன்கள் என்ன என்பதை எல்லாத் தலத்தின் தலபுராணங்களும் எடுத்துரைக்கும்.  
புன்னை மரத்தின் அடியில் அன்னை, மயிலாக மாறி இறைவனை நோக்கித் தவம் செய்து திருமணம் செய்துகொண்ட தலம் மயிலாப்பூர். அன்னை தவமிருக்கும் தலங்கள் பல இருந்தபோதும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயமே திருமணத்தலம். அன்னை வேண்டிக்கொண்ட தலவிருட்சத்தின் நிழலில் அமைந்திருக்கும் சந்நிதியில் வேண்டிக்கொண்டு கபாலீஸ்வரரையும் கற்பகாம்பாளையும் வழிபடுவது சிறப்பிற்குரியது.


காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரநாதர் ஆலயத்தின் மாமரத்தின் அடியில்தான் இறைவன் அன்னைக்குக் காட்சிகொடுத்து அருள்புரிந்தார். மாவடி சேவை ஏகாம்பரநாதர் கோயில் பிரம்மோற்சவத்தின் 9 -ம் நாள் நடைபெறுகிறது. அதைக் கண்டால் விரைவில் திருமண வரம் கிட்டும் என்பது ஐதீகம்.


தென்னாங்கூரில் சுவாமி ஹரிதாஸ்கிரி சுவாமிகளால் பாண்டுரங்கன் ஆலயம் சிறப்பாகக் கட்டப்பட்டுள்ளது. அந்த ஆலயத்தில் `சாகேத விருட்சம்' என்னும் ஒரு விருட்சம் உள்ளது. சுவாமி ஹரிதாஸ்கிரி குஜராத்தில் உள்ள துவாரகாவிலிருந்து இந்த மரத்தின் கிளையினைக் கொண்டு வந்து இங்கு நட்டுவைத்தார். துவாரகாவில் இருக்கும் சாகேத விருட்சத்தின் கீழ் நின்றுதான் ருக்மிணி தன் காதல் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டு கண்ணனை அடைந்தாள். கண்ணன் அந்த மரத்தின் கீழ் இருந்துதான் குழல் ஊதுவானாம். அந்த மரத்தின் அடியில் நின்று வேண்டிக்கொண்டால் காதல் கைகூடும் என்பது நம்பிக்கை. எப்போதும் குடைபோலவே வளர்ந்து நிழல் பரப்பும் அந்த மரத்தின் ஒரு கிளையே இந்தக் கோயிலில் நட்டு வளரச் செய்திருப்பதால், இந்த மரமும் துவாரகையின் சாகேத மரத்தைப் போலவே மனமொருமித்த காதலர்களைத் திருமணப் பந்தத்தில் இணைத்து வைக்கும் சிறப்பினைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது பட்டீஸ்வரம். பட்டீஸ்வரம் துர்கை அம்மன் கோயிலில் தலவிருட்சமாக விளங்குவது வன்னிமரம். இங்கு இரு வன்னி மரங்கள் உள்ளன. ஒரு வன்னிமரத்தின் கீழ் மற்றொரு மரம் வளராது என்கின்றனர். ஆனால் இங்கு இரண்டும் வளர்ந்து நிற்கின்றன. இங்கிருக்கும் ஒரு மரத்தில் பெண்கள் தாங்கள் விரும்பும் ஆணை நினைத்து மஞ்சள் கயிறு கட்டினால் விரைவில் அந்தக் காதல் வெற்றியடைந்து பெற்றவர்களின் சம்மதத்தோடு திருமணம் கைகூடும் என்கின்றனர். மற்றொரு மரத்தில் கயிற்றினைக் கட்ட குழந்தைபாக்கியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர். 

மணக்கால் அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள் கோயில்


பிற்காலச் சோழர்களின் காலத்தைச் சேர்ந்த அய்யம்பேட்டை ஸ்ரீவைகுண்டநாராயண பெருமாள் திருக்கோயிலில் ஒரு சிறப்புப் பிரார்த்தனை உண்டு. காதல் கைகூடிட இங்கு ஒரு வேண்டுதல் செய்யப்படுகிறது. காதலில் பிரச்னை ஏற்படுமாயின் எலுமிச்சைப் பழம் ஒன்றை இங்குள்ள பெருமாள் காலடியில் வைத்து உரிய மூலமந்திரம் சொல்லி அர்ச்சிக்கின்றனர். பின்னர் பழத்தைப் பிழிந்து சாறை அருந்தினால் அவர்களது வேண்டுதல் நிறைவேறிக் காதல் கைகூடும் என்று நம்புகின்றனர். இதைப் பிரிந்திருக்கும் தம்பதிகள் செய்ய பிரிந்துசென்றவர் மனம் மாறி ஒன்றிணைவர். 


திருச்சத்திமுற்றம் சிவன் கோயில்

கும்பகோணம் பட்டீஸ்வரத்துக்கு அருகே உள்ளது திருச்சத்திமுற்றம். அன்னை, காவிரி ஆற்றின்கரையின் மணல் கொண்டு லிங்கம் செய்து இறைவனை வழிபட்ட தலம். இறைவன் அன்னையின் தவத்தில் மகிழ்ந்து நெகிழ்ந்து காட்சி கொடுத்தார். அப்போது அன்னை இறைவனைத் தழுவி முத்தமிட்டதாகத் தலவரலாறு சொல்கிறது. சக்தி முத்தமிட்ட தலம் ஆதலால் `திருச்சக்திமுத்தம்' அல்லது `திருச்சத்திமுற்றம்' எனப்படுகிறது. அன்னையும் இறைவனும் காதலோடு தழுவியபடி காட்சியளிப்பதால் இங்கு வேண்டுதல் செய்யக் காதல் கைகூடும். பிரிந்த கணவன், மனைவி இணைவர் என்பது ஐதீகம்.

அடுத்த கட்டுரைக்கு