Published:Updated:

ரதி-மன்மதன், மார்ஸ்-வீனஸ், ரே- ஹத்தோர்... காதல் கடவுள்கள் உலகில் எத்தனை?

ரதி-மன்மதன், மார்ஸ்-வீனஸ், ரே- ஹத்தோர்... காதல் கடவுள்கள் உலகில் எத்தனை?
News
ரதி-மன்மதன், மார்ஸ்-வீனஸ், ரே- ஹத்தோர்... காதல் கடவுள்கள் உலகில் எத்தனை?

காதல் சார்ந்த ஓவியங்கள் அனைத்திலும் இதய சின்னத்தில் அம்பு விட்டபடி இறக்கையுடன் பறக்கும் ஓர் ஆண் குழந்தை இருப்பதைக் காணலாம். வீனஸின் மகனான அந்தக் குழந்தையின் பெயர் `க்யூபிட்' (Cupid) என்பதுடன் அவனுக்குக் கண்பார்வை இல்லை என்பதும் நம்பிக்கை.

பூமியைச் சுற்றிப் பார்க்க வந்த இரு கடவுளர்கள், களிமண்ணைக் கொண்டு தங்களைப் போலவே சிலரை உருவாக்கியதால் மனித இனம் உருவானதாகச் சொல்கிறது ஓர் ஆப்பிரிக்கக் கதை. இந்தப் பரிணாம வளர்ச்சியில் காதலும், கடவுளும் இணைபிரியாதவை என ஒவ்வொரு மதத்திலும் பின்பற்றப்படும் நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன.

`மீன்கொடி தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்' - பிரபலமான காதல் பாடல் இது. தென்றலைத் தேராக்கி, காமன் விழாவில் கட்டப்படும் மகர தோரணத்தில் உள்ள மீனைக் கொடியாக்கி, இனிக்கும் கரும்பை வில்லாக்கி, அந்த வில்லில் எய்திட மலர் அம்புகளை,  காதல் கடவுளான மன்மதனின் கைகளில் தந்து, ஓர் அழகிய உருவத்தைத் தந்துள்ளன இந்தியப் புராணங்கள்.

மன்மதன் என்றால், `மனதிலிருந்து பிறந்தவன்' என்று பொருள்படும். இவனது மனைவியான ரதிதேவி தான் உலகிலேயே மிகவும் அழகான பெண் என்றும், கனிந்த காதலின் சின்னமாகத் திகழ்வது ரதி மன்மத வசந்தோற்சவ ஊர்வலமே என்றும் பாடுகின்றன இந்தியப் புராணங்கள். இதைப்போலவே, பழைமைவாய்ந்த மனித நாகரிகங்கள் எனக் கருதப்படும் ரோமானிய, கிரேக்க, எகிப்திய, சீனப் பண்பாடுகளில் காதல் மற்றும் கடவுள் நம்பிக்கைகள் எவ்வாறு இடம்பெற்றன, மனிதக் காதலுக்கு யார் கடவுள் என்றும் அறிந்திட முதலில் `காதல் அத்வைதம்' அறிவோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ரோமானியர்களின் ஆண் பெண் காதல் தெய்வங்களான மார்ஸ், வீனஸை மனதில் கொண்டுதான், `Men are from Mars...Women are from Venus' என்று ஆணையும் பெண்ணையும், நேரெதிர் குணங்கள் கொண்டவர்களாகச் சித்திரிக்கின்றன ரோமானியப் புராணங்கள். காதல் சார்ந்த ஓவியங்கள் அனைத்திலும் இதயச் சின்னத்தில் அம்பு விட்டபடி இறக்கையுடன் பறக்கும் ஓர் ஆண் குழந்தை இருப்பதைக் காணலாம். வீனஸின் மகனான அந்தக் குழந்தையின் பெயர் `க்யூபிட்' (Cupid) என்பதுடன் அவனுக்குக் கண்பார்வை இல்லை என்பதும் நம்பிக்கை.
அழகுக்கும், அழகிய முதிர்ந்த காதலுக்கும், அன்னை வீனஸ் முன்னிற்க, குற்றமற்ற, தூய்மையான அன்புக்கும், கண்மூடித்தனமான காதலுக்கும் மகனான க்யூபிட்டை உருவகப்படுத்துகின்றன, ரோமானிய காதல் இலக்கியங்கள்.

காதலுக்குக் கண் இல்லை என்பது உண்மை என்பதை, க்யூபிட்டின் அம்பு உணர்த்துகிறது. ஆம், தனது அம்புகளைக் கொண்டு, காதலர்களை இணைப்பதும், பிரிப்பதும் கண்பார்வையற்ற க்யூபிட் செய்யும் வேலை. மேலும் டயானா, மினெர்வா, சிரெஸ், ஜூனோ, வெஸ்டா, வுல்கான்  என ரோமானிய மனிதக் கடவுளர்களும் (Demigods) இவர்களது வரலாற்றில் உண்டு.

ரோமானியர்களின் காதலும், கடவுளும் இப்படியென்றால் கிரேக்கர்களின் கதை வேறு வகை. கிரேக்கர்களுக்கும் நம்மைப் போலவே ஆயிரக்கணக்கில் கடவுள்கள் இருந்தாலும், அனைத்துக்கும் ஆரம்பம், காதல் கடவுள்தான்!

ஈராஸ் (Eros) என்ற ஆதிக்கடவுள், பூமியைப் பெண்ணாகவும், வானத்தை ஆணாகவும் தோற்றுவிக்க, வானம் பார்த்த பூமியின் முதற்காதலில் மனிதமும், மற்ற அனைத்தும் தோன்றின என்கின்றன கிரேக்க இதிகாசங்கள். அதன் பிறகு மனிதக் காதலுக்கு உதவ வந்த தெய்வங்களான `அப்போலோ' (Appollo), `அப்ரோடைட்' (Aphrodite), `ஜூய்ஸ்' (Zeus) ஆகிய அனைவருக்கும் ஆரம்பம் ஈராஸ் என்ற கிரேக்க பிரம்மனே. இவர்களில், அப்ரோடைட் என்ற கிரேக்க காமக் கடவுளின் பெயரைச் சார்ந்துதான், பாலுணர்வைத் தூண்டும் உணவுகள் மற்றும் மருந்துகள் `அப்ரோடைசியாக்ஸ்' (Aphrodisiacs) எனப்படுகிறது. கிட்டத்தட்டக் கிரேக்கம் போலவேதான், எகிப்திய ஆதிக் கடவுள்களும்... சூரியன், கடல் என இரண்டே இரண்டு பேர்தான்.

`ரே' (Re) என்ற சூரிய கடவுள் மேலிருந்து அனைவரையும் காக்க, `ஓசிரிஸ்' (Osiris) என்ற ஆழ்கடல் கடவுள் கீழே அனைவரையும் உள்வாங்கிக் கொள்ள, மனிதம் செழிக்கிறது என நம்பப்படுகிறது. ஆனால், எகிப்திய புராணங்களில் காதலுக்கான கடவுள் ஒரு துணைப் பாத்திரம் மட்டுமே. சூரிய கடவுளான ரேவின் மனைவி `ஹத்தோர்' (Hathor) தான் காதல், கருவுறுதல், தாய்மை, செல்வம் ஆகிய அனைத்துக்கும் அடையாளமாகத் திகழும் பெண் தெய்வமாகக் கொண்டாடப்படுகிறாள். அதன்பிறகு, மதங்கள் பெருகியதைப்போல, எகிப்தில் கடவுள்களும் பல்வேறு பெயர்களில் பெருகினர் என்கிறது எகிப்திய வரலாறு.

மேற்கே இப்படியென்றால், கிழக்கே காதல் எப்படி இருந்தது என்பதைச் சீன மற்றும் ஜப்பானிய இதிகாசங்களும், நாட்டுப்புறக் கதைகளும் அழகாக உரைக்கின்றன. சீனக் காதல் கடவுள் பெயர் கிட்டத்தட்ட ஆங்கிலத்தில் `யூ லவ்' (Yue Lao) என்பது போலவே ஒலிக்கிறது. நிலவின் கீழே நிற்கும் கிழவன் என்று பொருள். இறவா நிலை கொண்ட இந்தச் சீனக் கடவுள்தான், சீன மக்களின் காதல் மற்றும் திருமணத்துக்கான தெய்வம். 

கண்ணுக்குப் புலப்படாத சிவப்பு நிறக் கயிற்றைக் கொண்டு, இவர்தான் காதலர்களை இணைத்து வைப்பதாகச் சீனர்கள் நம்புகின்றனர். மேலும், தங்களது உண்மையான, தூய்மையான காதலால், வானில் நட்சத்திரங்களாக மிளிரும் `நியு லாங்க்' (Niu Lang), `ஷி னு' (Zhi Nu) என்ற இரு காதல் தெய்வங்களும் உண்டு என்கிறது மற்றொரு சீனப் புராணம். இவர்களது டாவோ மதத்தில் இன்றியமையாத பெண் தெய்வமான `ஜியுடியன் இக்சுவானு' (Jiutian Xuannu) இல்லையென்றால் மனித இனமே இருந்திருக்காது என்பது அவர்களது நம்பிக்கை. 
சற்று யோசித்துப் பார்த்தால், அனைத்து நாடுகள், மொழிகள், மதங்கள் என அனைவருக்கும் பொருந்தும் ஒரே உணர்வு காதல் மட்டுமே. ஆனால் இந்தக் காதலிலும் அழகிய நீதியைத் தருகிறது மன்மதனின் அம்பு. தனது கைகளில் கரும்பு வில் மற்றும் மணக்கும் மலர் அம்புகளை ஏந்தியவாறு, வசந்த காலத்தில் தென்றல் தேரேறி தனது உற்றத் தோழியான காதல் மனைவி ரதியுடன் மன்மதன் வலம் வரும்போது, அங்கே சிவபெருமான் பெருந்தவம் செய்து கொண்டிருக்கிறார். 

அங்கே, பார்வதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, நீண்ட தவம் செய்த சிவபெருமானின் மனதில் காம உணர்வை ஏற்படுத்தக் கணைகள் தொடுக்கிறான் மன்மதன். தவம் கலைந்த சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணைத் திறக்க மன்மதன் எரிந்து சாம்பலாகிறான். அப்போது மன்மதனின் காதல் மனைவி இறைவனிடம் முறையிட, அவளது கண்களுக்கு மட்டும் புலப்படும்படி காமனை மீண்டும் உயிர்ப்பிக்கிறார் சிவபெருமான். அதாவது, உடல்ரீதியான காமத்தை எரித்து, மனரீதியான உள்ளன்பையும், காதலையும் உயிர்ப்பிக்கும் உடலற்ற ரூபமாக, அனங்கன் என்ற மன்மதன் திகழ்கிறான். இவ்வாறு காதல் வேறு, காமம் வேறு என்று முறைப்படுத்தப்பட்ட காதல் நெறிமுறைகளையும் அழகாக உரைக்கிறது நமது இதிகாசங்கள்.

ஆக, தனி மனிதன் குடும்பமாக வாழவும், குடும்பங்கள் சமுதாயமாக உருவாகவும், காதலும், கடவுளும் மனிதனுக்கு அவசியம் தேவைப்படுகிறது. அதனால்தான், அவனது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கடவுள்கள் காதலுடனேயே காணப்படுகின்றன. காமம் தவிர்த்து மனிதன் காதலையும், கடவுளையும் ஒன்றாகப் பார்க்கும் நிலையில், காதல் அனைத்தையும் தாண்டிய புனிதத் தன்மையை அடைந்து விடுகிறது என்பதே நிதர்சனம். இதுவே காதல் அத்வைதமும் கூட!
அனைவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்..!