Published:Updated:

`` `இவர்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்' என்றதற்கு சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்..!" - பாரதி பாஸ்கர்

பாரதி பாஸ்கர்
News
பாரதி பாஸ்கர்

"இந்தியா முழுவதும் இருக்கும் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தியவர் சாரதா அன்னை. அவர்தான் விவேகானந்தருக்கும் நிவேதிதாவுக்கும் அன்னையாக இருந்து வழிநடத்தினார்."

Published:Updated:

`` `இவர்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்' என்றதற்கு சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்..!" - பாரதி பாஸ்கர்

"இந்தியா முழுவதும் இருக்கும் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தியவர் சாரதா அன்னை. அவர்தான் விவேகானந்தருக்கும் நிவேதிதாவுக்கும் அன்னையாக இருந்து வழிநடத்தினார்."

பாரதி பாஸ்கர்
News
பாரதி பாஸ்கர்

நமக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, ஆசிரியர் தனக்குத் தெரிந்த பாடங்களையெல்லாம் நமக்குப் பாடமாகச் சொல்லித் தருவார். ஆனால், குரு என்பவர் நம்மை அறிந்து, நாம் எந்தத் துறையில் பிரகாசிப்போம் என்பதைத் தெரிந்து அந்தத் திசையில் நமக்கு போதிப்பார். ஒவ்வொருவருக்கும் ஒரு குரு கிடைத்து அவர்களை வழிநடத்தினால் அவர்களின் வாழ்க்கை சரியான திசையில் பயணிக்கும். பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், தன் ஆன்மிக குரு பற்றி இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

Bharathi Baskar
Bharathi Baskar

''தினம் ஓர் ஆன்மிகக் குருவைப் பற்றிப் பேசும் நிகழ்ச்சியொன்று, சென்னையில் நடைபெற்றது. அதில் என்னையும் பேசுவதற்காக அழைத்திருந்தனர். 'நீங்கள் யாரைப் பற்றிப் பேசப் போகிறீர்கள்?' என்று என்னைக் கேட்டார்கள். 'சாரதா தேவியைப் பற்றிப் பேசலாமென்று இருக்கிறேன்' என்று நான் கூறினேன்

நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கு ஒருபுறம் பெரிய ஆச்சர்யம், மறுபுறம் சந்தோஷம். ஏனென்றால் அந்த ஆன்மிக நிகழ்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதிலும் அன்னை சாரதா தேவியைப் பற்றி இதுவரை அதில் எவரும் பேசியதில்லை. 'நீங்கள் சொல்வது மிகவும் ஆச்சர்யமாகவும் சிறப்பாகவும் இருக்கிறது' என்று கூறி என்னைப் பேசச் சொன்னார்கள்.

அந்த நிகழ்ச்சியில் பேசுவதற்காக, நான் சாரதா தேவி பற்றிய நூல்களையெல்லாம் சேகரித்து முழுவதுமாக வாசித்தேன். அவற்றிலிருந்த பல விஷயங்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவையாகவும், எனக்கு ஆன்மிக தத்துவங்கள் பலவற்றையும் போதிப்பதாகவும் இருந்தன.

சாரதா தேவி
சாரதா தேவி

இந்தியா முழுவதும் இருக்கும் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தியவர் சாரதா அன்னை. அவர்தான் விவேகானந்தருக்கும் நிவேதிதாவுக்கும் அன்னையாக இருந்து வழிநடத்தினார். சாரதா அம்மையார் பள்ளிக்கூடம் சென்று படித்தவர் அல்லர். ஆனால், சகோதரி நிவேதிதாவுக்கு அவர் எழுதிய கடிதத்தை வாசித்தால், அதில் உள்ள இறைத்தன்மையையும் இயற்கையின் மேன்மையையும் நம்மால் மிகச் சிறப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.

'என் செல்ல மகளே நிவேதிதா... பிரபஞ்சத்தின் இசையை, இறைவன் எல்லா ஒலியிலும் வைத்திருக்கிறான். அவை அசையும்போது அவற்றை ஒலிக்கச்செய்கிறான். அதோ தெரியும் தட்சிணேஸ்வர்... அதற்கு எதிரே இருக்கும் ஆலமரம், தன்னுடைய ஆயிரம் நாவுகளால் அந்த இசையைப் பாடுகிறது' என்று ஆலமரத்தின் இலைகளை சாரதா அன்னை அப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு தேர்ந்த கவிஞர்கூட எழுதிட முடியாத வரிகள். அதிகம் படித்திராத சாரதா அம்மையார் இப்படிக் குறிப்பிடுகிறார்.

சாரதா தேவி
சாரதா தேவி

அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்த ராமகிருஷ்ண மடங்களுக்குத் தலைவராக சாரதா அம்மையார் இருந்தார். அப்படி இருந்தபோதிலும் தினமும் தன் தாயார் வீட்டுக்குச் சென்று, அங்கு அவர் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, அதன் பிறகு மடத்துக்கு வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சாரதா அம்மையார், தனக்கு சீடர்கள் கொடுத்த சிறுதொகையை எடுத்துச்சென்று தன் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுப்பது வழக்கம்.

அந்தப் பணத்தைப் பெறுவதற்கு அவர் வீட்டில் ஒருவருக்கொருவர் பெரிய அளவில் சண்டையிட்டுக் கொள்வார்கள். உறவினர்கள் கூச்சல், குழப்பத்துடன் ஆபாசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வார்கள்.

சில வேளைகளில் அடித்துக்கொள்வதுபோல் பேசிக்கொள்வதையும் சாரதா அம்மையார் கேட்பார். ஆனாலும், வழக்கம்போல் இவர் அங்கு பாத்திரங்களைத் தேய்ப்பது, தானியம் தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் மடத்துக்குப் புறப்பட்டுவிடுவார்.

இதைப் பார்த்த சாரதா அம்மையாரின் சீடர்களுக்கு மிகுந்த கோபம் வரும். உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாராட்டப்படும் சாரதா அம்மையார் தன் வீட்டில் ஒரு வேலைக்காரியைப்போல் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துகொண்டிருப்பது அவரின் சீடர்களுக்கு மிகுந்த கோபத்தைத் தந்தது.

ஶ்ரீ ராமகிருஷ்ணர்
ஶ்ரீ ராமகிருஷ்ணர்

ஒருமுறை சாரதா அம்மையார் தனது வீட்டில் வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரின் சீடர்களில் ஒருவர் அவர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டுக்குள் வந்தார். 'அம்மா, நீங்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறீர்கள். எங்கள் குரு ஶ்ரீ ராமகிருஷ்ணரின் மனைவி. நீங்கள் எவ்வளவு உயர்ந்த பீடத்தில் இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு இது ஏன்? இவர்கள் போடும் சண்டையை எல்லாம் நீங்கள் எப்படிச் சகித்துக்கொள்கிறீர்கள்?' என்று கேட்டார்.

'இது இப்படித்தான் இருக்கும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும். இதன் நடுவில்தான் நம்முடைய வேலைகளை நாம் செய்துகொண்டு போக வேண்டும்' என்றார் சாரதா அம்மையார். அப்போது அந்தச் சீடர் எதேச்சையாக அன்னையை நிமிர்ந்து பார்க்க, அன்னை பராசக்தியின் வடிவமாகவே அவரின் கண்களுக்குக் காட்சி அளித்தார் சாரதா அம்மையார்.

'இது இப்படித்தான் இருக்கும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும்' எனச் சாரதா அம்மையார் சொன்ன இந்த வார்த்தைகள், மரத்தடியில் அமர்ந்திருக்கும் அந்த வங்காளப் பெண்மணியுடையது அல்ல... சாட்சாத் அந்தப் பராசக்தியேதான்' என்று இதுபற்றி எழுதுகிறார் அந்தச் சீடர்.

 பாரதி பாஸ்கர்
பாரதி பாஸ்கர்

என்னுள்ளும் இந்த வார்த்தைகள் மிகப் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்ததுடன், உலகைப் புதிய வடிவில் பார்க்கவும் வைத்தன.

இந்த வார்த்தைகள் என் மனதில் மிகப்பெரும் ஆறுதலையும் மாற்றத்தையும் கொண்டுவந்தன. எவருடைய வார்த்தைகள் நம்முடைய வாழ்க்கைப் பாதையைச் செப்பனிடுவதற்கும், மாற்றி அமைப்பதற்கும் உதவுகின்றனவோ... அவரே நம் குரு. அந்த விதத்தில் என் குரு, சாரதா அன்னை.

பல தருணங்களில், நாம் சில வேலைகளை எடுத்துச் செய்யும்போது, 'மனிதர்கள் இவ்வளவு மோசமாக இருக்கிறார்களே' என்று எனக்குத் தோன்றும். அப்போது எனக்கு இவை ஒரு மந்திரச்சொல் போல் பயன்பட்டன."