அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்டவாரியத்தின் செய்தித் தொடர்பாளரும், முஸ்லிம் மத குருவுமான மவுலானா கலீல்-உர்-ரஹ்மான் சாஜித் நொமானி மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ’பெண்களை கல்லூரிக்கு துணையில்லாமல் அனுப்பாதீர்கள். பர்தா அணிந்தும் கூட தனியாக அனுப்பாதீர்கள்.

அப்படி அனுப்புவது பாவமான செயல். பெண்களை கல்லூரி மற்றும் கோச்சிங் சென்டருக்கு துணையில்லாமல் அனுப்பும் பெற்றோரை அல்லா நகரகத்திற்கு அனுப்புவார்’ என்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
இது குறித்து, இந்திய ஜனநாயக மதச்சார்பற்ற முஸ்லிம் அமைப்பாளர் ஜாவேத் ஆனந்த் அளித்த பேட்டியில், `நோமானியின் கற்பனையான ஆலோசனை, வேலை செய்யும் இந்திய முஸ்லிம்களுக்கு பொருந்தாது. இது மறைமுகமாக பெண்களை உயர்கல்வி கற்கவிடாமல் பெற்றோரைக் கொண்டு தடுப்பது போன்ற ஓர் ஆலோசனையாக இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
ஜாவேத் ஆனந்தின் கருத்தை நடிகர் நஸ்ருதின் ஷா, நடிகை ஷபானா ஆஸ்மி மற்றும் முஸ்லிம் மதகுருமார்கள் ஆமோதித்துள்ளனர். கருத்து சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து நோமானி தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்த போது அதனை நோமானி பாராட்டி இருந்தார். தாலிபான்களும் பெண்கள் வெளியில் செல்லும் போது துணையில்லாமல் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

நாட்டில் முஸ்லிம் பெண்கள் 52% கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். அதோடு உயர் கல்வியில் சேர்வதில் முஸ்லிம் ஆண்களை விட முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் முஸ்லிம் பெண்களில் கல்வி விகிதம் அதிகமாக இருக்கிறது. முஸ்லிம்களுக்கு தெலங்கானா உள்ளிட்ட சில மாநிலங்களில் இட ஒதுக்கீடு இருக்கிறது. கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை பா.ஜ.க அரசு சமீபத்தில் ரத்து செய்து உத்தரவிட்டது.