Published:Updated:

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

மேட்டுமகாதானபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேட்டுமகாதானபுரம்!

மேட்டு மகாதானபுரம் சோழேஸ்வரர் தரிசனம்...

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

மேட்டு மகாதானபுரம் சோழேஸ்வரர் தரிசனம்...

Published:Updated:
மேட்டுமகாதானபுரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மேட்டுமகாதானபுரம்!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப்பொழுது. கரூர் - திருச்சி மார்க்கத்திலுள்ள மகாதானபுரம் காசிவிஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றிருந்தோம். அருகிலேயே கல்யாண வரம் தரும் வரதராஜ பெருமாள் ஆலயமும் உள்ளது. இரண்டு கோயில்களிலும் மிக அற்புதமான தரிசனம் கிடைத்தது.

கோயிலுக்கு வந்திருந்த அன்பர் ஒருவர் மூலம், அருகிலுள்ள மேட்டு மகாதானபுரம் ஊரில் இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, பழைய சிவாலயம் ஒன்றைச் சீரமைத்து வழிபாட்டுக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்ற தகவலை அறிந்து சிலிர்த்தோம்.

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

வர்களின் திருப்பணியை நேரில் சென்று பார்க்கலாமே என்று முடிவெடுத்து மேட்டுமகாதானபுரத்துக்குப் புறப்பட்டோம். கரூர் - குளித்தலை ரோட்டில் சுமார் 20 கி.மீ பயணித்தால் மகாதானபுரம் வந்துவிடலாம். அங்கிருந்து சிறிது தொலைவிலேயே மேட்டு மகாதானபுரம் அமைந்துள்ளது. பக்தர்கள் பலருக்கும் பரிச்சயமான ஊர்தான் இது. இங்குள்ள ஆதிமகாலட்சுமி கோயிலும், கோயிலின் ஆடித் திருவிழாவும் மிகவும் பிரசித்திபெற்றது. இன்னொரு தகவலும் உண்டு. இந்த மகாலட்சுமி கோயிலிலிருந்து இப்போது நாம் தரிசிக்கப் பொகிறோமே சிவாலயம்... அதுவரையிலும் சுரங்கப் பாதை ஒன்று இருப்பதாகவும் தகவல் சொல்கிறார்கள். வாருங்கள் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

அழகான அமைதியான ஊர் மேட்டுமகாதானபுரம். இவ்வூரில் சின்ன வாய்க்காலின் தென்புறக் கரையில் அமைந்திருக்கிறது, இளைஞர்களால் திருப்பணி கண்டுவரும் சிவாலயம். அளவில் சிறியதுதான். கட்டுமானம், பழைமை ஆகியவற்றைக் கொண்டே இது 1000 ஆண்டுகள் தொன்மை மிக்கது என்பதை அறிய முடிகிறது.

நாம் வருவது தெரிந்து ஆலயத்தில் அருகில் திருப்பணி இளைஞர்கள் ஒன்று சேர்ந்திருந்தார்கள் போலும். அவர்களில் ஒருவர் முன்வந்து நம்மை வரவேற்று உபசரித்தார். ``நான்தான் ஜெகதீஷ் கண்ணன்’’ என்றவர், தன் நண்பர்களையும் நமக்கு அறிமுகம் செய்தார். தொடர்ந்து தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார்.

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

ஆலயம் கற்றளிதான். விமானம் செங்கல் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது. விநாயகர், சண்டேஸ்வரர், நந்திதேவர், தேவியருடன் அருளும் முருகன், அவரருகில் நாகப் பிரதிஷ்டை... ஒவ்வொரு தெய்வமாக தரிசித்தபடியே சென்றோம். ஆலயத்தின் கூறைகளில் ஆங்காங்கே செடிகொடிகள் வளர்ந்திருந்தன. சிறிய அர்த்தமண்டபம் - கருவறையுடன் திகழ்கிறது ஸ்வாமியின் சந்நிதி. அருள்மிகு சோழேஸ்வரர் என்று திருநாமம். சோழர்கள் காலத்துக் கோயிலாக இருக்கலாம் என்பதை திருப்பெயர் மூலமே உணர்த்துகிறார் ஈசன். சிறிய லிங்க மூர்த்தம்தான். ஆனால் கருவறையில் அவ்வளவு சாந்நித்தியம் - ஈர்ப்பை உணரமுடிந்தது நம்மால்.

குருக்கள் கண்ணன் ஆரத்தி காட்டினார். தேவரும் மூவரும் எளிதில் காணவொண்ணா பெருஞ்சோதியானவரை - எம்பிரானை - நம் ஈசனை சிறு தீபத்தின் ஒளியில் லிங்கத் திருமேனியராக தரிசித்து மெய்யுருகி நின்றோம். `எவ்வளவு அற்புதமான விழாக்களை எல்லாம் கண்டிருப்பார் இந்த ஸ்வாமி. அடியார்களும் பக்தர்களும் இவரை எப்படியெல்லாம் பூஜித்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால் சகலத்தையும் துறந்து, பலகாலம் தன்னையும் தன் ஆலயத்தையும் தாவரஜன்மங்களுக்கு இடையே மறைத்துக்கொண்ட காரணமதான் என்னவோ...

அதுசரி, சிவச் சிந்தையை யாரால் அறிய இயலும். இதோ இப்போதும் இந்த இளைஞர்களின் வடிவில் தாமே அல்லவா தன் ஆலயத்தைச் சீரமைத்துக் கொண்டிருக்கிறார். இனி இந்த ஊர் இன்னும் செழிப்பாகும். மகாலட்சுமியின் அருளால் சிறப்புற்றிருக்கும் இந்தத் தலம், இனி இந்த மகாதேவனாலும் மகிமை பெறும்...’

``ஆரத்தி எடுத்துக்கோங்க’’

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

சிந்தனையோட்டத்தில் இருந்த நம்மை உசுப்பியது குருக்கள் கண்ணனின் குரல். அவர் ஏதோ நம் மனவோட்டத்தைப் படித்தவர் போல் சொன்னார்... ``ரொம்ப வரப்பிரசாதியானவர் இந்த ஸ்வாமி. இவர் அருளால் இந்த ஊருக்கு இன்னும் வெளிச்சம் கிடைக்கும்’’ என்று. அத்துடன், நம்மை அம்பாள் தரிசனத்துக்கு அழைத்துச் சென்றார். அம்பாள் மரகதவல்லி கருணை ததும்பும் திருமுகத்தோடு அருள்கிறாள். தரிசித்த நொடியில்... அப்படியொரு ஆனந்தம் நமக்குள். நல்லன எல்லாம் அருளவேண்டும் என்று வேண்டி துதித்தோம்.

பிரசாத விபூதியையும், அம்பாள் குங்குமத்தையும் நெற்றிக்கு இட்டுக் கொண்டு, மண்டபத்தில் அமர்ந்துகொண்டோம். இறைப்பணி செய்யும் இளைஞர்களும் நம்மைச் சுற்றி அமர்ந்துகொண்டார்கள்.

``சொல்லுங்களேன்... இப்படியொரு அற்புதமான பணியில் ஈடுபடும் எண்ணம் எப்படி வந்தது?’’

ஜெகதீஷ்கண்ணன் பேசினார். ``சோழர் காலத்துக் கோயில் என்கிறார்கள் அடியார்கள். அதனால்தான் சோழேஸ்வரர் என்று ஸ்வாமிக்குத் திருப்பெயர் வந்திருக்கிறது. இங்கே இப்படியொரு கோயில் இருப்பதே எங்கள் ஊரில் பலருக்கும் தெரியவில்லை. அந்த அளவுக்குச் சிதிலம் அடைந்து கிடந்தது. கோயில் மீதும், கோயிலைச் சுற்றியும் புதர்கள் மண்டிக்கிடந்தன.

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!
இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

ஐந்து வருடங்களுக்கு முன்பு யதேச்சையாக இந்தப் பக்கம் வந்த எனக்கு, கோயிலைக் கண்டதும் இதைச் சீரமைக்கலாமே என்று தோன்றியது. நண்பர்களிடம் சொன்னேன் ஆலயப் பணிகளைக் கையில் எடுத் தோம். ஏழு வருடங்களுக்கு முன்னாடி எங்க ஊர் பிடாரி அம்மன் கோயிலிலும் திருப்பணி செய்திருக்கிறோம்.

அந்த அம்மன் பல வருடங்களாக கருவறையில் மண்ணுக்குள் புதைந்து கிடந்தாள். எங்கள் ஊரிலும் பல பிரச்னைகள். நாங்க நண்பர்கள் இணைந்து, அம்மனை வெளியே எடுத்து பூஜை செய்து, வழிபாடு களுக்கும் ஏற்பாடுகள் செய்தோம். சித்திரை முதல் நாள் பிடாரி அம்மனுக்கு விழா எடுத்தோம். 35,000 ரூபாய் பணம் திரட்டி, அம்மன் பவனி வருவதற்காக சிறியளவில் தேர் ஒன்றும் செய்து கொடுத்தோம். அம்மன் அருளால் இப்போது எங்க ஊரில் பிரச்னைகளோ, அசம்பாவித சம்பவங்களோ இல்லை.

இந்தச் சிவனாலயத்தைச் சீரமைக்கும் பணியை 5 வருடங்களுக்கு முன் கையில் எடுத்தோம். முன்பு சுப்புரத்தினம் ஐயர் என்பவர், இந்தக் கோயிலில் பிரதோஷம் நாளில் மட்டும் பூஜை செய்து வந்தார். அவர் இறந்ததற்குப் பிறகு அதுவும் தடைப்பட்டது. அடுத்து மூன்று வருடங்களாக பாழடைந்து போனது. சுற்றிலும் மரம், செடி-கொடிகள் வளர்ந்தன. கோயில் கட்டுமானமும் சிதிலம் அடைந்தது. இந்த நிலையில்தான் நாங்கள் கோயிலைச் சுற்றி சுத்தம் செய்ய எண்ணினோம். நானும் நண்பர் மணிவண்ணனும் கண்ணன் குருக் களிடம் விவரம் சொன்னோம். ஏற்கெனவே கோயிலில் வழிபாடு செய்து வந்த சுப்புரத்தினம் குருக்களின் மகன்தான் இவர்’’ என்று ஜெகதீஷ் கூறி நிறுத்த கண்ணன் குருக்கள் தொடர்ந்தார்.

``இந்தப் பணியைச் சிவனே கூடிவரச் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஐயா... இவர்கள் என்னைச் சந்திப்பதற்கு முதல் நாள் எனக்கொரு கனவு. ஸ்வாமி என்னிடம் `எனக்குச் சோறு போடாமா ஏன் பட்டினி போட்டிருக்க’ என்று அதட்டுவது போன்று ஒரு காட்சி. பதறிப்போய் விழித்துக்கொண்டேன். விடிந்ததும் இவர்கள் வந்தார்கள். நான் விஷயத்தைச் சொன்னதும் எல்லோருக்கும் வியப்பு. சிலிர்த்துப் போனார்கள். மூவருமாகச் சேர்ந்து எங்களால் இயன்ற பணியை அன்றே தொடங்கிவிட்டோம்’’ என்று சிலிர்ப்பு மாறாமல் விவரிக்கிறார் கண்ணன் குருக்கள்.

``முதற்கட்டமாக கோயில் பிராகாரத்தில் குவிந்துகிடந்த மண்ணை அப்புறப்படுத்தி, தண்ணீர்விட்டுக் கழுவிச் சுத்தம் செய்தார்களாம். அன்றே சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் தொடர்ந்தனவாம். சுற்றிலும் நின்றிருந்த கருவேல மரங்களை வெட்ட கூலி கொடுக்கவும் நிதி இல்லாதச் சூழல். `விறகை வெட்டி நீங்களே விற்று பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ எனக் கூறி, மரம் வெட்டுவோரை அழைத்து வந்து கருவேல மரங்களை வெட்டி, கோயில் இருக்கும் பகுதியைச் சீர்செய்தார்களாம்.

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

“தொடர்ந்து இயன்ற அளவுக்கு நாங்களாகவே நிதி திரட்டி, புனரமைப்பு வேலையைச் செய்துவந்தோம். அருகிலுள்ள வீட்டில் இருந்து கோயிலுக்கு மின் இணைப்பு கொடுத்தோம். அடுத்து ஒரே மாதத்தில் கோயிலுக்கென்று தனி மின் இணைப்பு பெற்றோம். கோயிலைச் சுற்றி 50 மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுவைத்தோம். ஆரம்பத்தில் பிரதோஷ நாளில் மட்டும் சோழேஸ்வரருக்கு அபிஷேகம் பண்ணினோம். அப்போது நான், ஜெகதீஷ்கண்ணன், குருக்கள் ஐயா மூவர் மட்டும்தான் இருந்தோம். இப்போது நிறையபேர் வர ஆரம்பித்துவிட்டார்கள். எல்லாம் சுவாமியின் அருள்தான்’’ என்கிறார் மணிவண்ணன்.

இவர்களின் பணியைப் பார்த்து, ஊரிலுள்ள மகளிர் அமைப்பினரும் இயன்ற உதவிகளைச் செய்தார்களாம். பிரதோஷ வழிபாட்டுக்குத் தேவையான அபிஷேகப் பொருள்களை அவர்கள் வாங்கிக்கொடுக்க, குளித்தலையில் பூக்கடை வைத்திருக்கும் இளைஞர் கார்த்திக் தன் பங்களிப்பாக பூக்கள் மற்றும் மாலைகளைக் கொடுத்து வருகிறாராம். தொடர்ந்து, பழைய ஜெயங்கொண்டபுரம் சிவாலயத்தைப் பராமரிக்கும் இளைஞர்கள் சிலர் உதவியோடு, சிவனடியார்களை அழைத்து வந்து திருவாசகம் முற்றோதுதலும் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள். தொடர்ந்து விளக்கு பூஜை, அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி என விழா வைபவங்கள் நடைபெற, இப்போது இந்தக் கோயிலுக்குப் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.

``கோயில் புனரமைப்பு தொடர்பாக அரசுத் தரப்பில் ஏதேனும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவா?’’ என்று கேட்டோம்.

“சில வருடங்களுக்கு முன்பு, தொல்லியல் துறை சார்பா இங்கு வந்து, இங்குள்ள கல்வெட்டுகளை வீடியோ, போட்டோ எடுத்துகிட்டுப் போனாங்க. ஆனால், அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லை. சிவனடியார்கள் பலரும் கோயிலின் அமைப்பை ப் பார்த்துவிட்டு `1200 வருஷம் பழைமையான கோயிலாகத் தெரிகிறது’ என்கிறார்கள். ஊரில் உள்ள வயதான பெரியவர்களுக்குக் கூட இந்தக் கோயிலின் தலபுராணம் முதலான விஷயங்கள் குறித்து தெரியவில்லை!’’ என்கிறார்கள் திருப்பணி இளைஞர்கள்.

இளைஞர்கள் மீட்டெடுத்த சிவாலயம்!

அற்புதமான இளைஞர்கள் மிக அற்புதமான பணியை எடுத்துச் செய்கிறார்கள். `கோயிலின் மேற்கூரையில் கருங்கற்கள் நகர்ந்துள்ளன. அதனால் மழைக் காலத்தில் மூலஸ்தானம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்று எல்லா பகுதிகளிலும் நீர் ஒழுகுகிறது. கூரை, விதானம், சுவர்கள் அனைத்தும் சரிசெய்யப்படவேண்டும். நால்வர் பெருமக்கள், அனுமன், ஹயக்ரீவர், அஷ்டபைரவர் முதலான தெய்வ மூர்த்தங்களைப் புதிதாகப் பிரதிஷ்டை செய்து கோயிலைப் பொலிவுறச் செய்யவேண்டும். இந்தத் திருப்பணிகள் யாவற்றையும் நிறைவேற்றி கோயிலுக்கு விரைவில் குட முழுக்கு நடத்தவேண்டும்’ என்று தங்களின் விருப்பத்தையும் திட்டத்தையும் அழகாக முன்வைக்கிறார்கள்.

இது ஈசனின் செயல். அவனருளால் அவன் தாள் பணிந்து இந்த இளைஞர்கள் எடுத்திருக்கும் நற்காரியம் நல்லபடியே நடந்தேறட்டும். அதற்கு அந்தச் சிவனருள் துணைநிற்கும். நாமும் நம்மால் இயன்றை பங்களிப்பை வழங்கி இளைஞர்களின் இறைப்பணிக்குத் தோள் கொடுப்போம். (தொடர்புக்கு: கண்ணன் குருக்கள் - 99658 57838).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism