Published:Updated:

திடீர் முடிவு; சபரிமலை பிரசாதம் `அரவணை' விற்கத் தடை; தேவசம்போர்டு எடுத்த முடிவின் பின்னணி!

அரவணை பிரசாதம்
News
அரவணை பிரசாதம்

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அரவணையில் 14 வகையான பூச்சிமருந்துகளின் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

Published:Updated:

திடீர் முடிவு; சபரிமலை பிரசாதம் `அரவணை' விற்கத் தடை; தேவசம்போர்டு எடுத்த முடிவின் பின்னணி!

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அரவணையில் 14 வகையான பூச்சிமருந்துகளின் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அரவணை பிரசாதம்
News
அரவணை பிரசாதம்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் முக்கியப் பிரசாதமாக அரவணை மற்றும் அப்பம் ஆகியவை வழங்கப்பட்டுவருகின்றன. சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் அரவணை மற்றும் அப்பம் பிரசாதமாக வாங்கிச் செல்வது வழக்கம்.

250 மில்லி அளவு கொண்ட ஒரு டின் அரவணை பிரசாதம் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்பம் ஒரு பாக்கெட் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரவணை 10 டின் கொண்ட பாக்ஸ் 1010 ரூபாய்க்கும், 20 டின் கொண்ட பாக்ஸ் 2020 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அரவணை பிரசாதம் மூலம் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு அதிக அளவு வருவாய் வருகிறது. இந்த நிலையில் அரவணை பிரசாதத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரம் குறைந்தது எனவும், பூச்சிமருந்தின் அளவு அதிகமாக இருப்பதாகவும் ஒரு தனியார் நிறுவனம் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சபரிமலை சிறப்பு ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்துத் திருவனந்தபுரத்தில் உள்ள ஆய்வு கூடத்தில் அரவணை பிரசாதம் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்து. அதில் அரவணை பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமற்றதாகவும், பூச்சிமருந்தின் தாக்கம் அதிகம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சபரிமலையில் பூஜைகள் செய்யும்.மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி
சபரிமலையில் பூஜைகள் செய்யும்.மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி

ஒப்பந்ததாரர்களிடம் ஏற்பட்ட போட்டி காரணமாக இந்தப் புகார் கூறப்பட்டுள்ளதாகவும், பம்பையில் உள்ள கூடத்தில் அரவணை பிரசாதத்துக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருள்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகிறது எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன் கூறியிருந்தார். இந்த நிலையில் அரவணை பிரசாதத்தில் உள்ள ஏலக்காயின் தன்மை குறித்துப் பரிசோதிக்க உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அரவணையில் 14 வகையான பூச்சிமருந்துகளின் தன்மை இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், `சாப்பிடத் தகுதி இல்லாத ஏலக்காய் கலந்த அரவணையை விற்பனை செய்யக்கூடாது எனவும் தரமான உணவு உண்பது மனிதர்களின் உரிமை' எனவும் ஐகோர்ட் கூறியது. எனவே தரமான ஏலக்காய் கிடைக்கும்வரை ஏலக்காய் இல்லாமல் அரவணை தயாரித்து விநியோகிக்கலாமா என்பது குறித்து ஸ்பைசஸ் போர்டுடன் ஆலோசனை நடத்த வேண்டும் ஐகோர்ட் நேற்று உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை பக்தர்கள்
சபரிமலை பக்தர்கள்

இந்நிலையில், `சபரிமலையில் அரவணை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏலக்காய் இல்லாத அரவணை தயாரித்து இன்று முதல் விநியோகம் செய்யப்படும்' எனவும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். இதையடுத்து சபரிமலையில் அரவணை விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஏற்கெனவே அரவணை தயாரித்த பாத்திரங்களைக் கழுவி சுத்தப்படுத்தப்பட்டு நேற்று இரவு முதல் அரவணை தயாரிக்கும் பணி தொடங்கியது. இன்று மதியத்தில் இருந்து ஏலக்காய் இல்லாத புதிய அரவணை விற்பனை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

சபரிமலையில் நேற்று மாலை 5 மணியுடன் அரவணை விநியோகம் செய்வது நிறுத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் ஆறு லட்சம் டின் அரவணை விற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஐந்து கோடி ரூபாய் தேவசம்போர்டுக்கு நஷ்டம் ஏற்படுள்ளதாகக் கூறப்படுகிறது. நான் ஒன்றுக்கு, 2,40,000 அரவணை டின்கள் தயாரிக்கும் வசதி உள்ளது. ஆனால், தினமும் வரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பக்தர்களுக்கு தேவையான அளவுக்கு வழங்க முடியாமல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.