Published:Updated:

ஆருடத்தைப் பொய்யாக்கி அருள் செய்த பாபா ! - ஷீர்டி மகிமைகள்!

ஷீர்டி சாய் பாபா
News
ஷீர்டி சாய் பாபா

ஷீர்டி சாய் பாபாவின் மகிமைகள்...

இன்று பெரும்பாலானவர்கள் ஜோதிடத்தை நம்பியே வாழ்கிறார்கள். செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் ஜோதிடரின் ஆலோசனையைக் கேட்டே செய்கிறார்கள். ஆனால் பாபாவை நம்பியிருக்கும்போது, நமக்கு வரும் தீங்குகள் காணாமல் போகும் என்பதை அவரின் பக்தர்கள் அறிவார்கள். ஒருமுறை 'பாபு சாஹேப்பை பாம்பு தீண்டும்' என்று பிரபல ஜோதிடரான நானா சாஹேப் சொன்னபோதும், பாபு பாபாவை நம்பி இருந்து ஆபத்து நீங்கினார் என்பதை நாம் அறிவோம். சாயிநாதனின் பக்தர்கள் ஒருபோதும் கிரகங்களையும் காலங்களையும் கண்டு அஞ்சவேண்டியதேயில்லை என்பதை உணர்த்தும் சம்பவம் ஒன்று சாவித்ரிபாயி வாழ்வில் நிகழ்ந்தது.

ஷீர்டி பாபா
ஷீர்டி பாபா

பாந்த்ராவில் வாழ்ந்த டெண்டுல்கர் என்பவரின் மனைவி சாவித்ரி பாயி, பாபாவின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்ட பெண்மணி. ஆனால் அவரின் மகனான பாபு டெண்டுல்கருக்கு அத்தனை நம்பிக்கையில்லை. பாபு டெண்டுல்கர் மருத்துவராகும் பொருட்டு அதற்கான பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருந்தான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் அவனுக்குத் தன் திறமையின் மீதே சந்தேகம் ஏற்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பாபுவுக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. உள்ளூரில் பெயர்பெற்ற ஜோதிடர்களை அழைத்து 'தான் எழுதும் தேர்வு எப்படியிருக்கும்' என்பது குறித்து கேட்டான். சொல்லிவைத்தாற்போல அனைவரும் ஒன்றுபோல பலன் சொன்னார்கள். 'இந்த ஆண்டு கிரக நிலைகள் சரியில்லை' என்றும் 'அடுத்த ஆண்டு மிகவும் சாதகமாக இருப்பதால், இந்த ஆண்டு தேர்வு எழுதாமல் இருப்பது நல்லது' என்றும் தெரிவித்தனர்.

சாய் பாபா
சாய் பாபா

பாபு, ஓர் ஆண்டு வீணாகக் கழிப்பது குறித்து கவலைகொண்டார். மகனின் இந்தத் தவிப்பைக் கண்ட சாவித்ரி பாயி, ஷீர்டிக்குப் பயணமானார். சாயிநாதனைக் கண்டு அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். அவருக்கு பிரசாதம் வழங்கிய சாயி, 'அவள் வேண்டுவது என்ன' என்று கேட்டார். உடனே சாவித்ரி தன் மனக்குறையை இறக்கிவைத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாபா தன் கைகளை உயர்த்தி அவளை ஆசீர்வதித்து, ``என்னை நம்புகிறவர்கள் ஏன் ஜோதிடத்தை நம்ப வேண்டும். ஜாதகம், கைரேகைக்காரர்கள் ஆகியோர் சொல்லும் ஆருடங்களைத் தூக்கியெறிந்துவிட்டு உன் மகனை என்மேல் நம்பிக்கை கொள்ளச் சொல். இந்த ஆண்டே தேர்வினை எழுதச் சொல். என்னை நம்பியவர்கள் ஏமாற்றமடைவதில்லை. நிச்சயம் அவன் தேர்வில் வெற்றிபெறுவான். அதற்காக அவனைக் கடுமையாகப் படிக்கச் சொல்" என்று சொல்லி சமாதானத்தோடு அவளை அனுப்பினார் பாபா.

ஷீர்டி சாயி
ஷீர்டி சாயி

சாவித்ரி, பாபாவின் செய்தியை தன் மகனுக்குச் சொன்னார். அதைக் கேட்டதும் கொஞ்சம் மனம் தெளிவடைந்த பாபு, தேர்வுக்காகக் கடுமையாகத் தயாராகி வெற்றிகரமாகத் தேர்வினை எழுதியும் முடித்தான். ஆனாலும், அவனுக்குள் அவநம்பிக்கை முழுமையாக நீங்கிவிடவில்லை. 'முடிவுகள் தனக்கு சாதகமாக இருக்காது' என்று நம்பினான். அதனால், எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் நடைபெறும் வாய்மொழித் தேர்விற்காக அவன் பயிற்சி எடுக்கவேயில்லை. ஆனால் தேர்வு அதிகாரியோ, அவன் தேர்வில் வெற்றிபெற்ற செய்தியைச் சொல்லியனுப்பி நேர்முகத் தேர்வுக்கு ஆஜர் ஆகுமாறு தகவல் அனுப்பினார்.

அதை எதிர்பார்த்திராத பாபுவுக்கு தற்போது பாபாவின் வார்த்தைகளில் முழுமையான நம்பிக்கை உண்டானது. தன் அவநம்பிக்கையே, தன்னைப் பின்னோக்கி இழுக்கும் கிரகங்களின் செயல் என்றும், அதை பாபாவின் அருள் இருந்தால் முறியடித்துவிடலாம் என்றும் தெளிவடைந்தான். பாபாவை வணங்கிச் சென்று வாய்மொழித்தேர்விலும் வெற்றிபெற்றான்.

சாய் பாபா
சாய் பாபா

நாம் எங்கிருந்தாலும் பாபா நம்மைப் பார்த்தபடியே இருக்கிறார். நம் மனதின் ஆசைகள் அனைத்தையும் அவர் அறிவார். அவை, உரிய காலத்தில் நமக்கு கிடைக்கும்படி அவர் ஆசி வழங்குவார். பாபாவின் பரம பக்தரான கேப்டன் ஹாடேவுக்கு ஓர் ஆசை ஏற்பட்டது. பாபாவின் கைகளால் ஆசீர்வதித்து வழங்கப்பட்ட புனிதமான நாணயம் ஒன்று தனக்கு வேண்டும் என்று விரும்பினார்.

ஷீர்டி செல்வதாகச் சொன்ன ஒரு நண்பரிடம் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றினை பாபாவுக்கு தக்ஷிணையாக வழங்கும்படிக் கொடுத்து அனுப்பினார். அந்த நண்பரும் ஷீர்டி சென்று பாபாவைக் கண்டு வணங்கி அந்த ஒரு ரூபாய் நாணயத்தை தக்ஷிணையாக வழங்கினார். பாபா அந்த நாணயத்தைக் கையிலெடுத்தார். தன் விரல்களால் அதைச் சுண்டி விளையாடினார். சில நிமிடங்கள் கழித்து அதை அந்த நண்பரிடம், "இந்த நாணயத்தை, உதிப் பிரசாதத்துடன் அதன் உரிமையாளரிடமே சேர்த்துவிடு. இருப்பதைக் கொண்டு அவரை திருப்தியாக வாழச் சொல். மேலும், எனக்கு அவர் தரவேண்டியது எதுவுமில்லை என்பதையும் சொல்" என்று சொல்லிக் கொடுத்தார்.

ஷீர்டி பாபா
ஷீர்டி பாபா

அந்த நண்பருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ஊருக்குத் திரும்பியதும் கேப்டன் ஹாடேவினைச் சந்தித்து நாணயத்தையும் பிரசாதத்தையும் வழங்கி அங்கு நடந்தவற்றையும் சொல்லி சிலிர்த்துக்கொண்டார். பாபா எப்போதும் தன்னோடு இருக்கிறார் என்பதை அறியாமல் ஆசைப்பட்ட தன் அறியாமையை நினைத்து ஹாடே வருந்தினார். பாபாவின் கருணையை நினைத்துப் பூரித்தார். பக்திப்பெருக்கில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.