Published:Updated:

யோகங்களும் அருள்வார் சனி!

பொங்கு சனீஸ்வரர்
பொங்கு சனீஸ்வரர்

சிறப்புத் தகவல்கள்

சனிபகவான் என்ற வார்த்தையைக் கேட்டாலே எல்லோருக்கும் ஒரு பயம். அந்த அளவுக்கு நாம் சனி பகவானைப் பார்த்துப் பயந்திருக்கிறோம். ஆனால், உண்மையில் சனி பகவான் இந்த அளவு பயமுறுத்தக்கூடியவரா என்று பார்த்தால், நிச்சயமாகக் கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை தந்து நம்மை நல்வழிப் படுத்துபவர் சனி பகவான்தான். வேகமாகச் செல்லும் நம் வாழ்க்கைச் சக்கரத்தைத் தடுத்து நிறுத்தி, நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம், நம் இலக்கு எது என்பதை நமக்கு உணரவைப்பவர்.

ஆக, வாழ்க்கையின் எந்தவிதமான பிரச்னையையும் எதிர்கொள் வதற்குரிய துணிச்சலையும், இயல்பாகக் கையாள்வதற்குரிய அனுபவத் தையும் தருவாறே தவிர சனி பகவான் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதனைக் கீழே போகச் செய்யமாட்டார்.

சனி பகவான்தான் சித்தர்கள், பாசாங்கற்ற உண்மையான ஆன்மிகவாதிகள், கடைநிலை ஊழியர்கள், தொண்டர்கள், சமூக சேவகர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் வழியாக மக்கள் சேவை செய்பவர்களுக்கு காரணகர்த்தாவாக திகழ்பவர். சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் பாசாங்கு செய்யாமல் உண்மையாக உழைக்கக் கூடியவர்கள்.

மகரம், கும்பம் ஆகிய இரண்டு லக்னங்களுமே சனியின் ஆட்சி வீடுகள். அருகிலேயே இருக்கும் இரண்டு லக்னங்களில் ஆட்சி பெறும் கிரகம் சனி மட்டுமே. துலாம் ராசியில் உச்சமடையும் இவர், மேஷ ராசியில் நீசம் அடைகிறார்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும் அலைச்சலையும் தரக்கூடிய கிரகம். இவர் நீசம் அடைந்து பலமிழந்து போனால், அந்த ஜாதகர் சொகுசான வாழ்க்கை வாழக்கூடிய வாய்ப்புப் பெற்றவராக இருப்பார். சனி நீசமாகி குருவின் பார்வை பெற்ற பலரும் பெரிய கோடீஸ்வர்ரகளாக இருப்பார்கள்!

சனி பகவான் அருளும் சச யோகம்

ராசிச் சக்கரத்தில் சில கிரகங்களின் நிலை அல்லது இணைவு, யோகம் எனப்படும். இந்த இணைவின் மூலமாக ஜாதகத்தின் பலன் கூடவோ, குறையவோ செய்யும். சுபகிரகங்களின் நல்ல அமைப்பு சுபயோகங்களைத் தரும்.

இந்த சுபயோகங்கள் தனயோகம் (செல்வம் தரும் அமைப்பு), ராஜயோகம் (பெயர், புகழ், மதிப்பு தரும் அமைப்பு) எனப் பல்வேறு விதமாக அமையும். மிகவும் உயர்தரமான கஜகேசரி, பஞ்சமஹா புருஷ யோகம் போன்றவையும் உள்ளன. பழைமையான ஜோதிட நூல்களில் இவ்வாறான யோகங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றுள் ஒன்று `சச யோகம்’ ஆகும்.

சனி தனது சுய ராசிகளான மகரம், கும்பம் அல்லது உச்ச ராசியாகிய துலாமில் இருக்க, மேற்படி ராசிகள் கேந்திரமாக அமைவது சச (மக்கள்) யோகம் எனப்படும்.

சச யோகத்தில் பிறந்தவர் அரசு அதிகாரம், தலைமைப் பண்பு, ஏராளமான செல்வம் ஆகியவற்றை உடையவராகத் திகழ்வார். எல்லோராலும் புகழப்படுவார். வலிமையானவராகவும், கிராமம் அல்லது ஏதேனும் நிலப்பகுதிக்குத் தலைவராகவும் விளங்குவார். இப்படியான சச யோகத்தைப் பெற்றவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்; மகிழ்ச்சி உடையவர். தாயிடம் பணிவுள்ளவர். இவர்களின் சேவகர்கள் - பணியாள்கள் மிகவும் விசுவாசமாக நடந்துகொள்வார்கள்.

ரிஷப ராசிக்கும் துலாம் ராசிக்கும் யோகம் அருள்பவர்...

பன்னிரு ராசிகளில் ரிஷப ராசிக்காரர்களுக்குச் சூரியன், புதன், சனி ஆகியோர் யோக பலன்களைத் தரக்கூடியவர்கள். சனி முழு முதல் யோக காரகன் ஆவார். ரிஷப ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சனி பகவான் வலுத்திருந்தால், சகல யோகங்களையும் பெறமுடியும். சனியும் புதனும் இணைந்திருப்பது அதிர்ஷ்ட வாய்ப்புக்களைத் தரும்.

அதேபோல் துலாம் ராசிக்காரர்களுக்குச் சனி முதல் தர யோக காரகன் ஆவார். இவர் வலுத்து, இவரது தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறும்போது யோக பாக்கியங்களை ஜாதகர் பெறமுடியும்.

மகரம் மற்றும் கும்பம் சனி பகவானின் சொந்த வீடுகள். இந்த ராசிகளைச் சேர்ந்தோரும் சனிபகவானின் அருள்பெற வாய்ப்பு உண்டு. தற்போது மகரத்தில் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்கிறார். ஆகவே கெடுபலன்கள் குறையும். பாதகங்களும் பிரச்னைகளும் பாதிப்புகளைத் தராது. அனைத்தையும் எதிர்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். இந்த நிலை, துலாம் ராசிக்கும் `அர்த்தாஷ்டமச் சனி’ எனும் பயத்தை நீக்கி நன்மையே செய்யும்.

அடுத்த கட்டுரைக்கு