Election bannerElection banner
Published:Updated:

மேஷ ராசியினருக்கு சிவாலய தரிசனம் நன்மைகள் தரும்!

சிவ தரிசனம்
சிவ தரிசனம்

சனிப்பெயர்ச்சி பரிகாரம் மேஷம்

மேஷம் ராசியினருக்கு

சிவாலய தரிசனம் நன்மை பயக்கும்

மேஷ ராசி அன்பர்களுக்கு இந்தச் சனிப்பெயர்ச்சி, பெரும்பாலும் யோக பலன்களைத் தருவதாகவே அமையவுள்ளது. இந்த ராசிக் காரர்கள் தினமும் கோளறு பதிகம் படித்து வழிபடுவது மிகவும் சிறப்பு. அதேபோல் அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று, அங்குள்ள நவகிரகங்களில் சனி பகவானுக்கு எள்முடிச்சு தீபம் ஏற்றிவைத்து வழிபடவும். அதன் மூலம் கிரக பாதிப்புகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

இனி இந்த ராசியைச் சேர்ந்த நட்சத்திரக்காரர்களுக்கான பரிகாரங்களைத் தனித்தனியே தெரிந்துகொள்வோம்.

அசுவினி: சனி பகவான் ஒரு ராசியிலிருந்து 4, 7, 10 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்தைக் கண்டகச் சனி என்கிறோம். இந்த அடிப்படையில் மேஷ ராசியில் உள்ள அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் ஆகிய நட்சத்திரக் காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குகிறது. கண்டகச் சனி, செயல்களில் மந்தமான பலன்களைத் தருவார் என்பதால் கூடுதலான முயற்சி தேவைப்படும் காலகட்டம் இது.

அசுவினி நட்சத்திரம் நட்சத்திரங்களில் முதலானது. இவர்கள் முழுமுதற்கடவுளான விநாயகப்பெருமானை வழிபடுவதே சிறந்த பரிகாரம். வாரம் ஒருமுறையாவது அருகில் இருக்கும் விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். சிரமமான வேலைகளைச் சுருக்கமாக முடித்துக்கொடுக்கும் தெய்வம் விநாயகப்பெருமான் என்பதால் கண்டகச் சனியால் விளையும் பாதிப்புகளை நீக்கி அருள் வழங்குவார். விநாயகருக்கு அறுகம்புல்லைச் சமர்ப்பித்துத் தினமும் வழிபடுவதன் மூலம் நற்பலன்களை அதிகரிக்க முடியும். ஏழுமுறை தோப்புக்கரணமும் ஏழுமுறை பிரதட்சிணமும் செய்வதன் மூலம் சனிபகவானின் பார்வையால் உண்டாகும் கெடுபலன்கள் நீங்கி நற்பலன்கள் அதிகரிக்கும்.

பரணி: பரணி நட்சத்திரக்காரர்களுக்கு கண்டகச் சனி தொடங்குவதால் எதிலும் முன்னெச்சரிக்கை அவசியம். பரணி நட்சத்திரம் தேவி துர்கைக்கு உரியது. இவர்கள் எப்போதும் அம்பிகை வழிபாடு செய்வது அற்புதமான பலன்களைத் தரும். இவர்களுக்கு, இந்தச் சனிப்பெயர்ச்சிக்கான பிரத்யேக பரிகாரமாக ஐயப்பன் வழிபாட்டைச் சொல்லலாம். சனிக்கிழமைகளில் மாலை வேளையில் ஐயப்ப சாமிக்கு பானகம் நிவேதனம் செய்துவழிபடுவதன் மூலம் கஷ்டங்கள் தீரும். செயல்களில் வேகம் பிறக்கும். வெள்ளிக்கிழமைகளில் துர்கையை வழிபடுவதும் நல்லது.

கிருத்திகை: கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை அக்னி பகவான். சிவபெருமானையும் அவரின் அம்சமான முருகப்பெருமானையும் கிருத்திகை விரதமிருந்து வழிபட்டு வரும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வாழ்வில்

ஏற்றங்களையும் நல்ல மாற்றங்களையும் அடைவர். கிருத்திகை நட்சத்திரத்தின் 1 -ம் பாதம் மேஷ ராசியில் வருகிறது. மற்ற பாதங்கள் ரிஷப ராசியாகிவிடுகின்றன. எனவே கிருத்திகை 1-ம் பாதத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே கண்டகச் சனி. இவர்கள் கூடுதலாக சிவ வழிபாடு செய்வதே சிறந்த பரிகாரமாகும். ‘நமசிவாய’ என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலமும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிவாலய தரிசனம் செய்வதன் மூலமும் கண்டகச் சனியின் பாதிப்புகளை முற்றிலும் தவிர்க்கலாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு