கடகம்:

கடக ராசியினருக்கு 29.03.2023 முதல் 24.08.2023 வரை, சனி அதிசாரத்தில் 8-ம் வீடான கும்ப ராசியில் அமர்வதால், இனந்தெரியாத கவலை, பொருள் இழப்பு முதலானவை வந்து செல்ல வாய்ப்பு உண்டு. வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுங்கள். நவகிரகச் சந்நிதியில் வலம் வந்து வேண்டிக்கொள்ளுங்கள்; முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் 4-ம் பாதம் கடக ராசியில் வரும் என்பதால் கண்டகச் சனி தொடங்குகிறது. நீங்கள் சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதன் மூலம் சகலவிதமான நன்மைகளையும் பெறலாம்.

பூசம்: பூச நட்சத்திரம் கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு 7-ம் வீட்டில் சனி பகவான் பிரவேசிப்பதால், கண்டகச் சனி தொடங்குகிறது. எனவே இந்த நட்சத்திரக் காரர்கள், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். செயல்களில் சின்னச் சின்னத் தடைகள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் தேவை. குருபகவானை அதிதேவதையாகக் கொண்ட பூச நட்சத்திரக்காரர்ளுக்கு அடுத்த ஓராண்டுக்கு குருபகவானின் பார்வை கிடைப்பது மிகவும் நல்ல விஷயமாகும். அதேபோன்று பூசம் சனி பகவானின் நட்சத்திரம் என்பதால் ஆட்சி பலம் பெற்று அமரும் சனிபகவானால் பெரிய தீமைகள் எதுவும் நடைபெறாது. இவர்கள் தினமும் ஐயப்பசாமியை தியானிப்பது நற்பலன்களைத் தரும். தினமும் விளக்கேற்றி சரணகோஷம் சொல்லி வழிபட்டால் நன்மைகள் கூடும். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் சிவாலய தரிசனம் செய்வதும் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல ஒரு பரிகாரமாகும்.

ஆயில்யம்: கடக ராசி, ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு 7-ம் வீட்டில் சனி அமர்வதால் வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் அடிக்கடி ஏற்படும். நண்பர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கிப் பொருளை இழக்க நேரிடும். எனவே பேராசைப் படாமல், இருப்பதை வைத்து வாழப்பழகிக் கொள்ள வேண்டிய காலகட்டம் இது. இந்த நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை ஆதிசேஷனான சர்ப்ப தெய்வம். இவர்கள் சுப்ரமண்ய சுவாமியை வழிபட வேண்டியது அவசியம். தினமும்வேலையைத் தொடங்கும் முன், ‘ஓம் சரவண பவாய நமஹ’ என்று 18 முறை சொல்லித் தொடங்குவதன் மூலம் தொடங்கும் வேலைகள் நல்லபடியாக முடியும். ஆறுமுகக் கடவுளின் சந்நிதி இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி நிலவும். பகைவர்களால் உண்டாகும் தொல்லைகளும் நீங்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு