Election bannerElection banner
Published:Updated:

மகர ராசிக்கு இஷ்ட தெய்வ வழிபாடு மகத்துவம் அருளும்!

மீனாட்சி கல்யாணம்
மீனாட்சி கல்யாணம்

சனிப்பெயர்ச்சி மகர ராசி பரிகாரம்

மகரம்:

மகர ராசிக்கு இம்முறை ஜன்மச் சனி தொடங்குகிறது. எனினும் மகரம் சனிபகவானின் சொந்தவீடு. அதில் அவர் ஆட்சிபெற்று அமர்வதால் அதீத பயம் தேவையில்லை. நீங்கள் உங்களின் இஷ்டதெய்வத்தைச் சிக்கெனப் பற்றிக் கொள்ளுங்கள். அத்துடன் வாரம் ஒருமுறை குலதெய்வத்துக்குச் சர்க்கரைப் பொங்கல் படைத்து விளக்கேற்றி வழிபடுங்கள். பெரும்பாலான பிரச்னைகள் குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தின் திருவருளால் பனிபோல் கரைந்து விடும். உங்கள் மனத்தில் புதுத் தெம்பு பிறக்கும். சனிக்கிழமைகளில் எள் முடிச்சு தீபம் ஏற்றி சனிபகவானை வழிபடுங்கள்; பாதிப்புகள் அகன்று; மகிழ்ச்சி பெருகும்.

உத்திராட நட்சத்திரத்தின் 2,3,4 ஆகிய பாதங்கள் மகர ராசியில் வருகிறது. மகர ராசியில் சனி பகவான் ஜன்மச் சனியாக அமர்கிறார். மகர ராசி சனிபகவானின் சொந்த வீடு. அங்கே அவர் ஆட்சி பலம் பெற்று அமர்கிறார். ஜன்ம குருவும் நீசமடைந்திருக்கிறார். அதனால் வழக்கமாகப் பிற ராசிகளுக்கு நட்சத்திரங்களுக்கு ஜன்ம சனி ஏற்படுத்தும் பாதிப்புகள் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு ஏற்படாது. உத்திராட நட்சத்திரத்தின் அதிதேவதை விநாயகப்பெருமான். சனியின் தொல்லைகளை வென்றவர் கணநாதர் என்பதால், கணபதி வழிபாடு செய்துவருவதும் சிவாலய தரிசனம் செய்துவருவதும் உத்திராட நட்சத்திரக்காரர்களுக்குச் சிறந்த பரிகாரமாக அமையும்.

திருவோணம்: திருவோண நட்சத்திரக்காரர்களின் சொந்த ராசியிலேயே சனி பகவான் அமைவதால் காரியங்களில் தடங்கல்கள், அவப்பெயர்கள், பண விரயம் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் சனிபகவானின் சொந்தவீடாகவே இவர்களின் ராசி அமைவதால் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும். மேலும் திருவோண நட்சத்திரம் மகா விஷ்ணுவுக்குரியது. எனவே திருவோண விரதம் மற்றும் ஏகாதசி விரதம் இருப்பது இவர்களுக்கான மிகச்சிறந்த பரிகாரமாகும். பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும் விஷ்ணு சகஸ்ரநாமப் பாராயணம் செய்வதும் இவர்களுக்கு மிகச்சிறந்த பரிகாரமாக அமையும். ‘ஓம் நமோ நாராயணா’ எனும் மந்திரத்தைத் தினமும் காலையும் மாலையும் 108 முறை சொல்லிவந்தால், நன்மைகள் மிகுதியாகும்.

அவிட்டம்: அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் மகர ராசியிலும் அடுத்த இரண்டு பாதங்கள் கும்ப ராசியிலும் வரும். இதில் மகர ராசிக்கு ஜன்மச் சனியும் கும்ப ராசிக்கு ஏழரைச் சனியின் தொடக்கமாகவும் இந்தப் பெயர்ச்சி அமைகிறது. அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு இதுவரை இருந்த சிக்கல்கள் பலவற்றிலிருந்து கொஞ்சம் விடுதலை கிடைத்தாலும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவைபடும். மகர ராசி சனி பகவானின் சொந்தவீடு என்பதாலும் ஆட்சிபலம் பெற்று அமர்வதாலும் வழக்கமாக ஜன்மச் சனி கொடுக்கும் பாதிப்புகளைக் கொடுக்க மாட்டார். அதே வேளையில் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் எச்சரிக்கை உணர்வோடு செயல்பட வேண்டியதும் அவசியம். யாரையும் நம்பி எதையும் பேசுவதையோ பொறுப்பை ஒப்படைப்பதையோ தவிர்க்கவேண்டும். கோயில்களுக்கு தானம் செய்வது. சொந்த ஊரில் இருக்கும் கோயில்களில் வழிபாடுகள் நடைபெற உதவுவது, கோயில்களில் விளக்கேற்ற எண்ணெய் தானம் செய்வது ஆகியவை இவர்களுக்கான முக்கிய பரிகாரங்களாகும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு