Published:Updated:

ரிஷப ராசியினர் பிள்ளையாரை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்

பிள்ளையார்
பிள்ளையார்

சனிப்பெயர்ச்சி ராசிபரிகாரம் - ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்தச் சனி பெயர்ச்சியில், 29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 10-ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்கிறார். இக்காலக்கட்டத்தில் உத்தியோகத்தில் வேலைச்சுமை, ஏமாற்றம் வந்துபோகும்.

பிள்ளையார் பெருமானை சிக்கென்று பிடித்துக்கொள்ளுங்கள். சதுர்த்தி தினங்களில் அவரை தரிசிப்பதும் வழிபடுவதும் நன்று. இயன்றால் ஒருமுறை திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரையும் சனிபகவானையும் தரிசித்து வாருங்கள்; இன்னல்கள், தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.

கிருத்திகை 2, 3, 4 ம் பாதங்களைச் சேர்ந்த நட்சத்திரக்காரர்களுக்குச் சனிபகவான் ராசி மண்டலத்தில் 9-ம் வீட்டில் அமர்கிறார். ஏற்கெனவே இருந்த அஷ்டமச் சனியை விட இந்த இடம் மிகுந்த நற்பலன்களைத் தரும் இடம்தான் என்றாலும் செயல்களில் மிகுந்த கவனமும் எச்சரிக்கையும் தேவைப்படும் காலம். ஒருமுறை திருவண்ணாமலை சென்று அக்னி ரூபனான அருணாசலேஸ்வரரை வழிபட்டு வருவது நல்லது.

ரோகிணி: ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசிக்காரர்களுக்கு ராசியின் 9-ம் இடத்தில் சனிபகவான் அமைவது இதுவரை இருந்த கஷ்டங்களிலிருந்து விடிவு காலத்தைத் தருவதாக இருந்தாலும் வாகனப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையென்றால் அதிகப்படியான செலவுகளும் சிறு விபத்துகளும் ஏற்படலாம். ரோகிணி நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை பிரம்மன். வாய்ப்பிருப்பவர்கள் ஒருமுறை திருப்பட்டூர் சென்று வழிபாடு செய்வது, அதிகபலன்கள் தரும். விசேஷமாக இவர்கள் செவ்வாய், வெள்ளி ஆகிய நாள்களில் துர்கை அம்மனை வழிபடுவதும் ஞாயிற்றுக்கிழமை ராகுகாலத்தில் துர்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வதும் மிகவும் நன்மை பயக்கும் பரிகாரங்களாகும். துர்கை சடுதியில் வந்து சங்கடங்கள் தீர்ப்பவள் என்பதால், ஓடிவந்து உங்கள் துன்பங்கள் தீர்த்து நற்பலன்களை அதிகப்படுத்துவாள் என்பதில் சந்தேகமில்லை.

மிருகசீரிடம்: சந்திரபகவானை அதிதேவதையாகக் கொண்ட மிருகசீரிட நட்சத்திரம் 1, 2 பாதங்கள் கொண்டு ரிஷப ராசியைச் சேர்ந்தவர்களுக்கு, ராசிக்கு 9-ம் இடத்தில் சனிபகவான் அமர்வது சிறப்பான அமைப்பாகும். இவர்களுக்கு இது நாள் வரையில் இருந்துவந்த பணக்கஷ்டங்கள் தீரும். புதிய வாய்ப்புகள் உருவாகும். என்றாலும் இவர்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தில் உரிய கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த நட்சத்திரக்காரர்கள் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோர் இணைந்திருப்பதுபோன்ற படத்தினை வைத்து வழிபாடு செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அம்பிகையைத் தொடர்ந்து வழிபாடு செய்துவந்தால் குடும்பத்தில் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு