Election bannerElection banner
Published:Updated:

தனுசு ராசியினரே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்!

பொங்கு சனீஸ்வரர்
பொங்கு சனீஸ்வரர்

சனிப் பெயர்ச்சி தனுசு ராசிபரிகாரம்

தனுசு:

இந்தச் சனிப்பெயர்ச்சியில் குறிப்பிட்ட சில காலங்களில் கணவன் மனைவிக் குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும்; கடன் குறித்த வீண் சஞ்சலங்கள் ஏற்படலாம். நீங்கள் திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக் காடு தலத்தில் அருளும் பொங்கு சனீஸ்வரரை ஒருமுறை வழிபட்டு வாருங்கள்; மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுங்கள்; துன்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.

மூலம்: தனுசு ராசி, மூல நட்சத்திரக் காரர்களுக்கு ஜன்மத்தில் இருந்த சனிபகவான் பெயர்ந்து இரண்டாம் இடத்தில் அமர்கிறார். பாதச்சனி என்று சொல்லப்படும் இந்த இரண்டாம் இடத்தில் மகர ராசியில் சனிபகவான் ஆட்சிபலம் பெற்று அமர்கிறார். இதனால் இதுவரை இருந்த இக்கட்டுகளிலிருந்து சிறு விடுதலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த பல காரியங்கள் செயல்பாட்டுக்கு வரும். பொருள் வரவில் இருந்த தட்டுப்பாடு நீடிக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கை தேவைப்படும் காலகட்டமிது. மூல நட்சத்திரக்காரர்கள் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சங்கடங்கள் விலகும். இவர்களுக்கான முக்கியமான பரிகாரம் கிழங்கு தானம். கிழங்குவகைகளை அடிக்கடி தானம் கொடுப்பது நல்ல பலன்களைத் தரும் என்கிறது சாஸ்திரம். வாய்ப்பிருந்தால் ஒருமுறை திருப்பட்டூர் சென்று பிரம்மனை தரிசித்துவிட்டு வருவதும் நல்லது.

பூராடம்: வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எல்லாம் போராடி வெல்பவர்கள் பூராட நட்சத்திரக் காரர்கள். பூராட நட்சத்திரக்காரர்களின் அதிதேவதை வருணபகவான். இந்தச் சனிப்பெயர்ச்சி உங்கள் வாழ்வில் இதுவரை இருந்த பல பிரச்னைகளிலிருந்து விடுவிக்கும். என்றாலும் தொழில் முதலீடுகளில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் கண்டிப்பு காட்டாமல் விட்டுக்கொடுத்துப் போகவேண்டியது அவசியம். இவர்களின் ராசிக்கு இரண்டாம் இடத்தில் நீசமான குருவோடு சனிபகவான் இணைகிறார். இதனால் கெடுபலன்கள் குறையும். மேலும் நற்பலன்கள் அதிகரிக்க மகான்களின் அதிஷ்டானங்கள், ஜீவசமாதிகள் ஆகியவற்றை தரிசனம் செய்வது நல்லது. குரு தரிசனமும் ஆசியும் துன்பங்களை நீக்கி இன்பங்களை வழங்கும். மேலும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர் சாத்தி வழிபடுவது ஆகச்சிறந்த பரிகாரமாக அமையும்.

உத்திராடம்: உத்திராட நட்சத்திரத்தின் முதல் பாதம் தனுசு ராசியிலும் பிற பாதங்கள் மகர ராசியிலும் வரும். தனுசு ராசிக்கு இரண்டாம் இடத்திலும் மகர ராசிக்கு ஜன்மத்திலும் சனி அமர்கிறார். எனவே முதல் பாதம் உத்திராட நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் சூரிய வழிபாடு செய்வது மிகவும் நன்மை தரும். சிவ வழிபாடும் அவசியம். சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் ( குறைந்தது ஆறு என்ற எண்ணிக்கையில்) அபிஷேகம் செய்து வந்தால் சிவன் குளிர்ந்து நன்மைகள் அருள்வார். அதனால் சனிபகவானால் உண்டாகும் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். பாதச் சனி பொங்கு சனியாக மாறி நற்பலன்கள் அளிக்கும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு