Published:Updated:

விருச்சிக ராசிக்கு திருமகள் வழிபாடு லட்சுமிகடாட்சம் அருளும்!

மகாலட்சுமி
மகாலட்சுமி

சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசி பரிகாரம்

உங்கள் ராசிக்கு இந்தச் சனிப்பெயர்ச்சியில் சனிபகவானின் அதிசார காலத்திலும் 11.05.2021 முதல் 26.09.2021 வரையிலான காலகட்டத்திலும் ஓய்வெடுக்க முடியாதபடி அதிகம் உழைக்கவேண்டி வரும். டென்ஷன், மன உளைச்சல், மறைமுக பகைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சிலருக்குச் செலவுகளும் அதிகரிக்கலாம். அருகிலுள்ள பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று, அங்கு அருள்பாலிக்கும் மகாலட்சுமி தாயாரை அனுதினமும் வழிபடுங்கள். கோயில் பணிகளுக்கு இயன்ற உதவியைச் செய்யுங்கள்; தடைகள் நீங்கும்.

விசாக நட்சத்திரம் 4 ம் பாதம் விருச்சிக ராசியில் வருகிறது. இந்தப் பாதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராசிக்கு மூன்றில் சனிபகவான் அமர்கிறார். இது மிகவும் நல்ல அமைப்பாகும். தடைகள் நீங்கி வெற்றிகள் அதிகரிக்கும். செல்வ வளம் சேரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விசாக நட்சத்திரக்காரர்கள் வெள்ளிக் கிழமைகளில் சுக்ர ஹோரையில் மகாலட்சுமி வழிபாடு செய்வது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

அனுஷம்: மகாலட்சுமியை அதிதேவதையாகக் கொண்ட நட்சத்திரம் அனுஷம். மகான் மகாபெரியவா அவதரித்ததும் அனுஷத்தில்தான். அனுஷ நட்சத்திரக்காரர்களின் விருச்சிக ராசிக்கு இதுவரை இருந்த ஏழரைச் சனி விலகுகிறது. சனிபகவான் மூன்றாம் இடமான மகரத்தில் பெயர்ச்சியாகிறார். இது மிகவும் யோகமான அமைப்பாகும். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடைபெறும். தொழிலில் இருந்த மந்த நிலை மாறும். முடிவெடுக்க முடியாமலும் வாக்குக்கொடுத்து நிறைவேற்ற முடியாமலும் இருந்த அனுஷ நட்சத்திரக்காரர்கள் இப்போது சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள். தீர்க்கமாக முடிவெடுத்து வெற்றிபெறுவார்கள்.

அனுஷ நட்சத்திரக்காரர்கள் தான தர்மங்கள் செய்வதால் நற்பலன்கள் கிடைக்கும். வேதம் கற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தன தான்ய அபிவிருத்தியைப் பெறலாம். மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வது, கனகதாரா ஸ்தோத்திரப் பாராயணம் செய்வது ஆகியன நன்மைகளை வாரி வழங்கும்.

கேட்டை: கேட்டை நட்சத்திரத்தின் அதிதேவதை இந்திரன். இந்திரன் தேவலோக ராஜன். இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்கு ராஜயோகம் ஏற்படும். புதிய வீடு, வாகன யோகங்கள் வாய்க்கும். நல்ல வேலை, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் ஆகியன கூடும். விருச்சிக ராசியைப் பொறுத்தவரை சந்திரன் நீசமடையும் ராசி இது என்பதால் மனவலிமை குறைவாகக் காணப்படும் ராசி. எனவே மனவலிமை அதிகரிக்க துர்கையை வழிபடுவது மிகவும் அவசியம். ராகு கால வேளைகளில் துர்கையை நினைத்து வீட்டிலேயே விளக்கேற்றி வணங்கிவந்தால் மனவலிமை அதிகரிப்பதோடு பகைவர்களை வெல்லும் வலிமையும் அதிகரிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு