திருத்தலங்கள்
ஜோதிடம்
திருக்கதைகள்
Published:Updated:

‘கோலைக் கண்டால் குரங்கு ஆடும்!’ - பழநி தண்டபாணி பதிகம்

பழநி
பிரீமியம் ஸ்டோரி
News
பழநி

- இறையூர் அருணாசலம்

ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள் முருகனை மனத்தாலும், செயலாலும் எந்நாளும் தொழுத முருக பக்தர். முருகனையே சிந்தையில் வைத்த தவ ஞானியாகவும், கவி ஞானியாகவும், இசைஞானியாகவும் வாழ்ந்த பெருமகன் இவர். பழகுத் தமிழில் நல்ல பக்திப் பாடல்களைப் புனைந்ததுடன், புராணக் கதைகளை நல்லமுறையில் நாடகங்களாக மாற்றி, அதை நாட்டு மக்களிடையே பரப்பியவர். இதனால் இவர் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் என்று போற்றப்படுகிறார்.

‘கோலைக் கண்டால் குரங்கு ஆடும்!’ - பழநி தண்டபாணி பதிகம்

அழகு முருகனை அற்புத சந்த நயம் கொண்ட பாடல்களால் துதித்தவர்கள் அருணகிரி நாதரும் பழநி தண்டபாணி சுவாமிகளும். அந்த வழியில் இசையோடு கூடிய அற்புதப் பாடல்களால் முருகனைப் பாடியவர் சங்கரதாஸ் சுவாமிகள். அதற்கு அவர் பாடிய பழநி தண்டபாணி பதிகம் என்ற நூலே சாட்சி. மதியால் வித்தகர், மனத்தால் உத்தமர் என்ற பெருமை கொண்ட இவர் பழநியம்பதியின் முருகப்பெருமானை வியந்து துதிக்கும் அழகே அழகு. அவர் செய்த துதி விளக்கங்களைப் படிப்பதால், நமக்கும் பெரும் புண்ணியம் வாய்க்கும்.

அவர் பழநிப்பதியை எப்படிப் போற்றுகிறார் பாருங்கள்...

`முருகா! தாங்கள் நின்ற திருக்கோலமுடன் திகழும் தலம் பழநி. பிறவிப் பெரும் பிணியை நீக்கும் தலம் பழநி. சஞ்சீவி மூலிகைகள் எங்கும் பரவி வளர்ந்து கிடப்பதால் உயிர்களுக்கு அமுதமான காற்று வீசும் தலம் பழநி. ஆகவே, தாங்கள் வீற்றிருக்கும் அந்த பழநி மலையை நாடி வந்து, பக்தர்கள் தங்கள் திருவடியைப் பாடிப் பரவி வணங்குகிறார்கள். அவர்களுக்கு ஒப்பற்ற ஞானம் வழங்கி அருள் பாலிக்கிறீர்கள்' என்று நெகிழ்கிறார் சுவாமிகள்.

பழிநிப் பதிவாழ் பாலகுமாரனை சுவாமிகள் போற்றி வணங்கும் விதம் அற்புதம்:

`பழநி வாழ் பாலகுமாரா, தாங்கள் சாதாரண தெய்வமா? தங்கமயமாகப் பிரகாசிக்கும் இமயத்தின் அரசனான ஹிமவானின் செல்வப் புதல்வி அல்லவா தங்களின் தாயார்.

‘கோலைக் கண்டால் குரங்கு ஆடும்!’ - பழநி தண்டபாணி பதிகம்

எனவே மலைவளம் யாவும் உங்களுடையது. நவநிதி நாயகனும் அளகாபுரித் தலைவனும் அள்ள அள்ளக் குறையாத செல்வத்தின் அதிபதியுமான குபேரனின் திருத் தோழன் உங்கள் தந்தையார். அதனால் நவகோடி நிதியும் உங்களுக்குச் சொந்தம்.

இவை மட்டுமா? உங்களின் தாய்மாமன் கோவர்த்தன மலை யையேக் குடையாகக் கொண்டு பசுக்களைக் காத்த கருணையாளன். ஆக, ஆநிரைச் செல்வங்கள் யாவும் உங்களுடையது.

மாமன் மகிமைக்குச் சற்றும் குறையாதவள் தங்களின் மாமி. தங்கக் கலசங்களை ஏந்தி மங்கலக் காட்சி தரும் மகாலட்சுமி அன்றோ உங்கள் மாமி. அதனால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உங்களுடையன.

அதுமட்டுமா! வண்ணங்கள் பல கொண்ட எண்ணற்ற மலர்களைத் தொடுத்து மாலையாக அணிந்து கொண்ட இந்திரன் உமக்கு மாமனார். அவரின் தவச் செல்வியான தெய்வயானையை உமக்களித்து பேறு பெற்றார். அதனால் கற்பக மரமும், காமதேனுவும்கூட உங்களுடையவை.

ஆகவே, என்னப்பனே முருகா! தங்களுக்கு உரிய செல்வ வளங்கள் வரையில்லாதன; ஒப்புமை சொல்ல முடியாதன. ஆகவே, சகலருக்கும் வாழ்வு தரும் கலியுக தெய்வமாகத் திகழ்கிறீர்.

ஆயினும், செல்வங்களின் திரட்சியாக விளங்கும் தாங்கள், இந்தப் பழநியம்பதியில் மட்டும் ஒரு கௌபீனத்தைக் கட்டிக்கொண்டு இப்படி ஆண்டியாய்; அழகிய பண்டாரமாய் எளியோன் முன் திருக்காட்சி தருகிறீர்களே...காரணம் என்னவோ யார் அறிவார்!

‘கோலைக் கண்டால் குரங்கு ஆடும்!’ - பழநி தண்டபாணி பதிகம்

காண்பவர் வினைகள் எல்லாம் பொடிபட இப்படி ஆண்டியானீரோ? நிலையாமையே நிச்சயம் என்பதை இப்படிச் சொல்லாமல் சொல்கிறீரோ! பழமான உமக்கு அலங்காரங்கள் எதற்கு என்று இப்படி நின்றீரோ... எல்லாம் தங்கள் திருவுளம்...' எனும் பொருள்பட பாடிப் பரவுகிறார் ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகள்.

`பொன் மயக்குகிரி பெற்ற புதல்வியோ உன் அன்னையாம்...' என்ற பாடலில் மேற்கண்ட வேண்டுதல்களை எழுப்புகிறார் சுவாமிகள்.

கந்தனைச் சிந்தையிலும் செய லிலும் எந்நாளும் தொழுபவருக்கு ஒருநாளும் துன்பமில்லை; தரித்திரமில்லை என்பதே சுவாமிகளின் திருவாக்கு.

காலச் சந்தியில் பால வடிவ திருக்கோலம்; உச்சிக் காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம்; சாயரட்சையில் ராஜ அலங்காரம்; அர்த்த சாம காலத்தில் முதிய வடிவம் என பொழுதுக்கும் உருமாறும் பழநிவாழ் அரசனின் அழகே அழகு! அந்த அழகன் ஆண்டியாய் அருள்வதற்கான தத்துவ தாத்பர்யத்தை, சுவாமி கள் பாடிப் பரவும் விதமும் அழகுதான்!

அருள் சுரக்கும் பழநியின் அதிபதியை, பூசம் விழா காணும் இந்த தை மாதத்தில் தரிசிப்பதும் சிந்திப்பதும் மிகவும் சிறப்பு.

‘கோலைக் கண்டால் குரங்கு ஆடும்’ என்பது முதுமொழி. முருகப்பெருமானின் கையில் உள்ள கோலைக் (தண்டத்தை) காணும்போது, நம் மனக் குரங்கும் ஒழுங்காக நல்லொழுக்கப்படி ஆடும் என்பதே உள்கருத்து. நாமும், ஸ்ரீசங்கரதாஸ் சுவாமிகளின் வழியில் பழநி முருகப் பெருமானை தியானித்து துதித்து வழிபட்டு வரம்பெறுவோம்.

முருகா சரணம்!