Published:Updated:

அஷ்டமத்தில் சனி... மிதுன ராசிக்காரர்களுக்கான பிரத்யேக சனிப்பெயர்ச்சி பலன்கள்!

மிதுனம்
மிதுனம்

இதுவரை 7 ம் வீட்டில் அமர்ந்து பலன் தந்துகொண்டிருந்த சனிபகவான் இப்போது 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார். வழக்கமாக அஷ்டமத்து சனி என்றால் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமே தவிர பயம் கொள்ளத் தேவையில்லை.

பழகியவர்களிடம் மனம்விட்டு பேசுகிற மிதுன ராசி அன்பர்களே... ஒரு போதும் மதியாதார் வாசலை மிதிக்கமாட்டீர்கள். அப்படிப்பட்ட வைராக்கியம் கொண்ட உங்களின் ராசிக்கு இதுவரை 7 ம் வீட்டில் அமர்ந்து பலன் தந்துகொண்டிருந்த சனிபகவான் இப்போது 8 ம் வீட்டில் சென்று அமர்கிறார். வழக்கமாக அஷ்டமத்து சனி என்றால் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமே தவிர பயம் கொள்ளத் தேவையில்லை. காரணம் சனிபகவான் மிதுன ராசியின் நட்புகிரகம் என்பதால் பெரும் துன்பங்கள் ஏற்படாதவாறு சனிபகவான் உங்களைக் காத்தருள்வார்.

சனிபகவான்
சனிபகவான்

வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துப் பேச வேண்டாம். குடும்பத்தில் கணவன் - மனைவிக்குள் பிரச்னையை ஏற்படுத்திப் பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள். உஷாராக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்க்கப்பாருங்கள். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். முன்பின் அறியாதவர்களிடம் அநாவசியப் பேச்சை தவிர்க்கப்பாருங்கள். வங்கிக் காசோலைகளை கவனமாக கையாளுங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும் போது சட்ட ஆலோசகரைக் கலந்து முடிவெடுப்பது நல்லது.

நேரம் தவறி சாப்பிட வேண்டாம். பிள்ளைகளின் பிடிவாதம் சில நேரங்களில் கோபத்தின் உச்சிக்கே கொண்டு போகும். மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்திற்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களாக இருந்தாலும் அவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். பழைய கடன் பிரச்னைகள் அவ்வப்போது மனசை வாட்டும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

வர வேண்டிய பூர்விகச் சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். சிலர் உங்கள் முன் புகழ்ந்து பேசிவிட்டு பின்னாடி இகழ்ந்து பேசுவார்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். விசேஷங்களில் சிலர் உங்களுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். திடீர் பயணங்களும் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். கர்ப்பிணி, நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் குறைப்பட்டுக் கொள்வார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கப்பாருங்கள். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மருத்துவக் காப்பீட்டைப் புதுபித்துக்கொள்ளுங்கள்.

29.03.2023 முதல் 24.08.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 9 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் அனைத்து பிரச்சனைகளும் விலகும்.

சனிபகவான் 8 ல் அமர்ந்தாலும் அவரது பார்வை பலன்களும் நட்சத்திர சஞ்சாரமும் சாதகமாக உள்ளன. எனவே கவலைப்பட வேண்டாம். போராடி வென்று சாதிக்கும் நேரமாக இந்த சனிப்பெயர்ச்சி அமையும்.

அடுத்த கட்டுரைக்கு