Published:Updated:

மீனராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

மீனம்
மீனம்

மீனராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

தன் பொருளை விட்டுக்கொடுக்காமலும் பிறர்பொருளுக்கு ஆசைப்படாமலும் இருப்பதை வைத்துக்கொண்டு வாழத்தெரிந்த மீன ராசிப் பெண்களே...

இதுவரை 10 - ம் வீட்டில் நின்ற சனிபகவான் 27.12.2020 முதல் 19.12.2023 வரை லாப வீட்டில் அமர்ந்து உங்களை ஆளப்போகிறார். தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் இதுவரை இருந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தார். கடினமாக உழைத்தும் அதற்கான பலனேதுமில்லாமல் போனது. குடும்பத்தில் பணம் தண்ணீராய் செலவானது. பல பிரச்னைகளையும் நினைத்து அவ்வப்போது சோர்ந்து போனீர்கள். இனி குடும்ப வருமானத்தை உயர்த்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். தாயாருக்கு இருந்த நோயெல்லாம் விலகும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணி இனி முழுமையடையும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

கணவர் உங்களின் தியாகத்தைப் புரிந்து கொள்வார். அந்நியோன்யம் அதிகரிக்கும். பல காரியங்கள் முதல் முயற்சியிலேயே முடியும். சொத்து வாங்குவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். உறவினர்கள், தோழிகளுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள். சனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். சனிபகவான் உங்களின் 8- ம் வீட்டை பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

வியாபாரம் செய்யும் பெண்கள், இதுவரை சிலரின் தவறான அறிவுரையால் தடுமாறினீர்கள். அந்த அவலநிலையெல்லாம் மாறும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை. அடிக்கடி விடுமுறையில் சென்று வேலையாள்கள் உங்களை நிலை குலைய வைத்தவர்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கூட்டுத்தொழிலில் தொந்தரவு கொடுத்த பங்குதாரர்களை மாற்றிவிட்டுப் புதியவர்களை சேர்ப்பீர்கள்.

சனி பகவான்
சனி பகவான்

உத்தியோகம் பார்க்கும் பெண்கள் இதுவரை மற்றவர்களின் வேலைகளையும் சேர்த்து பார்த்தீர்கள். இரவு பகலாக உழைத்தும் பலனில்லாமல் வேறு சிலருக்குத்தான் பதவி உயர்வு கிட்டியது. இவையெல்லாம் இனி மாறும். இழந்த சலுகைகளைக் கேட்டுப் பெறுவீர்கள். உங்கள் திறமையை அறிந்துகொண்ட மேலதிகாரி பதவியுயர்வு, சம்பள உயர்வு தருவார். கலைத்துறைப் பெண்களை அலைக்கழித்த நிறுவனமே புது வாய்ப்பு கொடுக்கும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். வரவேண்டிய சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும். உங்கள் படைப்புகள் பெரிதும் பேசப்படும். இந்த சனி மாற்றம் உங்களை வெளியுலகுக்கு அழைத்து வருவதுடன், புதிய தொடர்புகளையும், வசதி வாய்ப்பையும் அதிகப்படுத்துவதாக அமையும்.

அடுத்த கட்டுரைக்கு