Published:Updated:

ஆட்சிபலம் பெறும் ராசிஅதிபதி... மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே... இனி நிம்மதி பிறக்கும். பிரச்னையால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தன் கருத்தில் உறுதியாகவும் அதே வேளையில் மனசாட்சிக்கு பயந்தும் நடக்கும் மகர ராசி அன்பர்களே... இதுவரை உங்கள் ராசிக்கு 12 - ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசிக்குள்ளேயே வந்து ஜன்ம சனியாக அமர்கிறார். ஜன்ம சனி என்ன செய்யப் போகிறதோ... என்றெல்லாம் புலம்பித்தவிக்காதீர்கள். உங்களின் ராசிநாதனான சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் அனைத்து வசதிகளை அள்ளித்தருவார். பணவரவையும் அதிகரிப்பார்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

பதுங்கி வாழ்ந்த நீங்கள், இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டீர்களே! ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களைக் கூடப் பல முறை அலைந்து முடித்தீர்களே... இழப்புகளும், அவமானங்களும் உங்களை துரத்தியதே... இனி நிம்மதி பிறக்கும். பிரச்னையால் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். ஜன்ம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பு போல் நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் எட்டிப்பார்க்கும். உடல் பருமனாக வாய்ப்பிருக்கிறது. எனவே எண்ணெயில் வறுத்த,பொறித்த மற்றும் கொழுப்புச் சத்து அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதிக நீர் பருகுங்கள். காய்கறி, பழவகைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்து போகும். மனைவிவழியில் செலவுகள் வரும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். இளைய சகோதரரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

நீண்ட நாள் பிரார்த்தனைகளைக் குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பணப்பற்றாக்குறையால் வீடு கட்டும் பணி பாதியிலேயே நின்றுபோனதே, இனி வங்கிக் கடனுதவியால் முழுமையாகக் கட்டி முடிப்பீர்கள். உங்களின் சொந்த விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் அவசரம் வேண்டாம். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். பிள்ளைகளிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மை, அலட்சியப் போக்கு மாறும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மகளுக்கு இதோ, அதோ என்று தள்ளிப்போய் கொண்டிருந்த கல்யாணம் விரைவில் நடக்கும். புது வீடு, மனை வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிவிட்டு சந்தையில் புதிதாக அறிமுகம் செய்த வண்டியை வாங்குவீர்கள்.

சனி கிரகம்
சனி கிரகம்

29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 02ம் வீடான கும்ப ராசியில் சென்று பாதச்சனியாக அமர்வதால் இக்காலக்கட்டத்தில் யாரையும் நம்பி எந்த முடிவும் எடுக்காதீர்கள். பணம் கொடுக்கல் - வாங்கலில் எச்சரிக்கையாக இருங்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். யாருக்கும் கேரண்டர் கையெழுத்திட வேண்டாம். உறவினர்கள், நண்பர்களில் சிலர் உங்களைக் குறைக் கூறுவார்கள். பெற்றோரின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள்.

சனிபகவானின் இந்தப் பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு நல்லதொரு மாற்றத்தைத் தருவதாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு