Published:Updated:

மகர ராசிப் பெண்களுக்கான சனிப்பெயர்ச்சி சிறப்புப் பலன்கள்!

சனிபகவான்
சனிபகவான்

கட்டுக்கடங்காத செலவு, அவமானம், மன உளைச்சல், அடுக்கடுக்காகப் பிரச்னைகள் ஆகியனவற்றைச் சந்தித்தீர்கள். அந்த நிலை மாறும். குடும்பத்தில் இனி கூச்சல் குழப்பங்கள் விலகும்.

தெளிந்த சிந்தனையும் தொலை நோக்குப் பார்வையும் கொண்ட மகர ராசிப் பெண்களே... இதுவரை உங்கள் ராசிக்குப் பன்னிரண்டிலே அமர்ந்து கொண்டு பணத்தை வரவிடாமல் தடுத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலத்தில் உங்கள் ராசிக்குள்ளேயே ஜன்ம சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார்.

கட்டுக்கடங்காத செலவு, அவமானம், மன உளைச்சல், அடுக்கடுக்காகப் பிரச்னைகள் ஆகியனவற்றைச் சந்தித்தீர்கள். அந்த நிலை மாறும். குடும்பத்தில் இனி கூச்சல் குழப்பங்கள் விலகும். தண்ணீரும் தாமரை இலையுமாய் ஒட்டாமல் இருந்த கணவன் - மனைவிக்குள் இணக்கமான சூழ்நிலை உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். எதிலும் தெள்ளத்தெளிவாக முடிவெடுக்க முடியாமல் ஒருவிதத் தயக்கத்துடன் இருந்த நிலை மாறும்.

சனிப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி

உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள், அல்லாதவர்கள் யாரென்பதை உடனே புரிந்து கொள்வீர்கள். ஏதேனும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டீர்களே... இனி உடல்நிலை சீராகும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. அலைபாய்ந்த மனசில் இனி நிம்மதி கிடைக்கும். உடல் அசதியாக இருந்தும், தூங்க முடியாமல் தவித்தீர்களே... இனி தூக்கம் வரும். கவலை தோய்ந்த முகத்துடன் இருந்த கணவர் இனி உற்சாகம் அடைவார். அதிக வட்டிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாகத் தந்து முடிப்பீர்கள்.

எதிர்பாராத பண வரவு இனி உண்டு. ஆனால் எடுத்து வைக்க முடியாது. செலவுகள் வரும். ஜன்ம சனி என்பதால் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியமாக இருக்க வேண்டாம். மெடிக்ளைம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காரசார மற்றும் அசைவ உணவுகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. நாக்கைக் கொஞ்சம் கட்டுங்கள். கணவர்வழியில் கொஞ்சம் அலைச்சலும், செலவும் இருக்கும். நீங்கள் பெருந்தன்மையாக நடந்து கொண்டாலும் உறவினர்களால் தொந்தரவுகள் இருக்கத்தான் செய்யும். சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கௌரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்யோகத்தில் மரியாதைக் கூடும். சிலர் சுயத் தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

மகரம்
மகரம்

வியாபாரம் செய்யும் பெண்களுக்குத் தொட்டதெல்லாம் நட்டத்தில் போய் நின்ற நிலை மாறி லாபமும் விருத்தியும் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தக்கூடக் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கணவரின் அரவணைப்பால் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். சந்தை நிலவரம் அறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வேலையாள்கள் அவ்வப்போது உங்களை ஏமாற்ற முயற்சி செய்வார்கள். கனிவாகப் பேசி கறாராக நடந்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் பொருட்களை வாங்கி வைப்பீர்கள். உங்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். வேற்று மொழி பேசுபவர் - வெளிநாட்டினர் மூலம் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.

உத்தியோகம் பார்க்கும் பெண்களுக்கு... உங்களை வெறுத்த மேலதிகாரி இனி வலிய வந்து பேசுவார். உங்களின் கடின உழைப்புக்காகப் பதவியுயர்வு, சம்பள உயர்வெல்லாம் உண்டு. குறைகூறிக் கொண்டிருந்த சக ஊழியர்களும் உங்களுக்காகப் பரிந்து பேசுவார். அலுவலக விஷயங்களை வெளியிடவேண்டாம். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறைப் பெண்கள், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். யாரையும் குறை சொல்லிப் பேசாதீர்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும்.

இந்த சனி மாற்றம் சங்கடங்கள், சவால்களில் வெற்றியையும், தருவதுடன் அடிப்படை வசதி வாய்ப்புகளை அதிகப் படுத்துவதாகவும் அமையும்.

அடுத்த கட்டுரைக்கு