Published:Updated:

பாத சனி ஆனார் பகவான்... இனி தனுசுக்கு சாதகமா? - தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்!

தனுசு ராசி... சனிப்பெயர்ச்சி
தனுசு ராசி... சனிப்பெயர்ச்சி

இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவிதக் கவலையில் ஆழ்ந்திருந்தார் அல்லவா இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மனசாட்சிக்கு பயந்து நடந்து மற்றவர்களுக்கும் உதவக்கூடிய தனுசு ராசி அன்பவர்களே... இதுவரை உங்கள் ராசிக்குள் ஜன்மச் சனியாக அமர்ந்து குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்து எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் அலையவைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார்.

இனி வற்றிய பணப்பை நிரம்பும். அலைப்பாய்ந்த மனசு இனி அமைதியாகும். அவசரப்பட்டு முடிவுகளெடுத்து சில பிரச்னைகளில் சிக்கித் தவித்தீர்களே... இனி அனுபவப்பூர்வமாக யோசிப்பீர்கள்.

கிரகம்
கிரகம்

இதுவரை எதிர்மறை எண்ணங்களால் மன உளைச்சலுக்கு ஆளானீர்கள். சிலர் உங்களை அசிங்கப்படுத்தினார்கள். பலரையும் நம்பி ஏமாந்தீர்கள். யாருமே தன்னை மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டீர்கள். கல்யாணம், காதுகுத்து போன்ற விசேஷங்களில் சிலர் உங்களை அலட்சியப்படுத்தினார்கள். இனி இவையெல்லாம் மாறும். உங்களைக் கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த இனம்புரியாத பயம் விலகும். எப்போதும் தலை வலி, காது வலி, வயிற்று வலி என வலியைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தவர்கள், சாப்பாட்டுக்கு முன், பின் என்று பல்வேறு மருத்து, மாத்திரைகளை உட்கொள்ள நேர்கிறதே என்று வருத்தப்பட்டவர்கள், இனி ஆசுவாசமாவீர்கள். உங்களின் உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். இனி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவி எப்போது பார்த்தாலும் எதையோ யோசித்தபடி ஒருவிதக் கவலையில் ஆழ்ந்திருந்தார் அல்லவா இனி முகமலர்ச்சியுடன் உற்சாகம் அடைவார்.

என்றாலும் பாதச்சனியாக வருவதால் கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னைகளும், மனஸ்தாபங்களும் வந்து நீங்கும். கொஞ்சம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். வெளிப்படையாகப் பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்தவரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிகம் உரிமையுடன் பேசிப் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சனி பகவான்
சனி பகவான்

29.3.2023 முதல் 24.8.2023 வரை சனிபகவான் அதிசாரத்தில் 03 - ம் வீடான கும்ப ராசியில் சென்று அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்டுச் சில காரியங்களை முடிப்பீர்கள். இக்காலக்கட்டத்தில் கெடு பலன்கள் குறைந்து யோக பலன்கள் அதிகரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு