Published:Updated:

மறு ஜன்மம் கொடுத்தாள் மாதா புவனேஸ்வரி!

அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா

வி.ஐ.பி ஆன்மிகம் - அர்ச்சனா

மறு ஜன்மம் கொடுத்தாள் மாதா புவனேஸ்வரி!

வி.ஐ.பி ஆன்மிகம் - அர்ச்சனா

Published:Updated:
அர்ச்சனா
பிரீமியம் ஸ்டோரி
News
அர்ச்சனா

அன்று வளர்பிறை சஷ்டி, கார்த்திகை நட்சத்திரம். மாசிச் செவ்வாயும் கூட. காலை வேளை... சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் நெடிதுயர்ந்த அபார்ட்மென்ட் ஒன்றில் 15-வது மாடி. நுழைவாயிலிலேயே பிள்ளையார் சுழி போட்டு வரவேற்றது பிள்ளையாரேதான்!

மறு ஜன்மம் கொடுத்தாள் 
மாதா புவனேஸ்வரி!

வீட்டின் ஒவ்வோர் அங்குலத்திலும் விதம்விதமான கணேச மூர்த்தங்கள். தொலைக்காட்சி, எஃப்.எம்.ரேடியோ தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல், திரைப்படங்களிலும் புகழ்பெற்று வரும் விஜே அர்ச்சனாவின் இனிய இல்லம்தான் அது.

மலர் மாலைகளும், ஊதுபத்தியுமாக பக்தி மணம் கமழ்ந்தது அர்ச்சனாவின் பூஜை அறையில். நடுநாயகமாக மெகா சைஸில் எழிலோவியமாய் புவனேஸ்வரி அம்மன். இடது புறம் சிம்ம வாகனத்தில் வைஷ்ணவி தேவி. வலது புறம் மலேசியா பத்துமலை முருகன். சுற்றிலும் மகா பெரியவர் மற்றும் பிற தெய்வங்கள். இன்னும் ஷீர்டி பாபா, லிங்க பைரவி என்று தெய்விகமாக இருந்தது அந்த இடம்.

அர்ச்சனாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். சும்மாவே ‘கடகட’வென பாப்கார்ன் போலப் பொரிந்து தள்ளுவார். அவருக்கு மிகவும் பிடித்த பூஜை அறையைப் பற்றிப் பேசுவதென்றால் கேட்கவா வேண்டும்!

“எங்க வீட்டில் ரொம்ப ஸ்பெஷலான இடம்னு பார்த்தால் இந்தப் பூஜை அறைதான். நாம ரொம்ப சௌக்கியமாக இருந்தாலும், ரொம்ப சந்தோஷமாக இருந்தாலும், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’ன்னு நமக்குச் சங்கடமான தருணமா இருந்தாலும், சண்டை போடுறதுன்னாலும் நன்றி சொல்லும் தருணமாக இருந்தாலும் அதிகமாக நான் இருக்கக் கூடிய இடம் இதுதான். தினமும் அதிகாலை அஞ்சரை மணிக்கு ரேடியோவுக்கு வேலைக்குக் கிளம்பும்போது, எல்லாரும் தூங்கிக்கிட்டிருப்பாங்க. அப்போ ‘நான் வர்றேன்மா’ன்னு ‘பை’ சொல்லிட்டுப் போறது இந்த அம்மாவுக்குத்தான்” என்று புவனேஸ்வரி அம்மனைச் சுட்டிக்காட்டுகிறார் அர்ச்சனா.

“அது மட்டுமில்ல... நாம என்ன மாதிரி உணர்வில் இருந்தாலும் நாம் சொல்ற விஷயத்தை எந்தவொரு அபிப்பிராயமும் இல்லாமல் ‘சொல்லு நான் கேட்டுக்கறேன்’னு கேட்கக் கூடியவங்க இவங்கதான். சின்ன வயசிலிருந்தே நான் மனசு விட்டுப் பேசுற ஃப்ரெண்ட்ஸும் இவங்கதான். சொல்லப்போனா என் அம்மா வயிற்றில் நான் இருக்கும் போதே பக்தி அறிமுகமாயிடுச்சு. அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்து ஏழு நாட்களிலேயே இறந்துடுச்சாம். அதுக்கப்புறம் எந்தக் குழந்தையும் தங்காம கலைஞ்சிடுச்சு. பிறகுதான் நான் உருவானேன்.

எங்க பாட்டி முண்டகக்கண்ணி அம்மனின் தீவிர பக்தை. நான் வயித்தில் இருக்கறப்போ, முண்டகக்கண்ணி அம்மன் கோயிலுக்கு வாரா வாரம் போய், ‘இந்தக் குழந்தையாவது தங்கணும்; இந்தக் குழந்தை நல்லபடியா பிறந்தால், உனக்குத்தான் சொந்தம்’னு வேண்டிக்கிட்டாங்க. அதனால, பிறந்ததுமே என்னைத் தூக்கிட்டுப் போனது அந்தக் கோயிலுக்குத்தான். நான் அங்கேதான் வளர்ந்தேன்னே சொல்லலாம்” பிரேக் போடாமல் போகிறது அர்ச்சனாவின் அருவிப் பேச்சு.

மறு ஜன்மம் கொடுத்தாள் 
மாதா புவனேஸ்வரி!

“முண்டகக்கண்ணி அம்மன் கோயில் தவிர நீங்க விரும்பிப் போகும் மற்ற கோயில்கள்?”

“முனீஸ்வரன் கோயில். சைக்கிள்லேருந்து பெரிய கார் வரைக்கும் நாம எந்த வண்டி வாங்கினாலும் ‘அப்பா... சாமி... இந்த வண்டி உனக்குத்தான்’னு சொல்லி நாம கும்பிடுற கடவுள் முனீஸ்வரர்தான். நம்ம பயணங்களையும் நம்மையும் நல்லபடியாகப் பார்த்துக்கும் காவல் தெய்வம் அவர். அப்புறம் எங்க பாட்டி குடும்பத்தின் குலதெய்வம் பம்மல் சூர்ய அம்மன். ‘எப்பவுமே நம்மகூட நிப்பாங்க காப்பாத்துவாங்க’ன்னு நம்பிக்கை தர்ற - சின்ன வயசிலிருந்து என் கூடவே வரும் என் டார்லிங்ஸ் இவங்க மூணு பேரும்தான்!”

“இஷ்ட தெய்வம் எது?”

“அப்படின்னு எந்தத் தெய்வத்தையும் சொல்லத் தெரியல. ஆனால் நான் ரொம்ப அதிகமாக ‘கனெக்ட்’ ஆகக் கூடிய தெய்வம் என்றால் அது மலேசியாவில் இருக்கும் பத்து மலை முருகன்தான். நான் பத்து கேவ்ஸ் போயிருந்தபோது, மேலே ஏறி முருகனைப் பார்த்துட்டு அதுக்கு அடுத்த லேயருக்குப் போனபோது ஏதோ ஒரு வெற்றிடத்தை எனக்குள் உணர்ந்தேன். மேலே போய் சாமியைக் கும்பிட்டுவிட்டு வெளியே வர்றப்ப, அந்தப் பெரிய குகையில் மேலிருந்து வரும் சூரிய கதிர்களின் வெளிச்சத்தில் நான் நிற்கிறேன்... அப்போதிலிருந்து அந்த முருகனுடன் எனக்கு ஒரு பிணைப்பு உண்டானது. அன்னிக்கு நான் அந்த முருகனை அங்கிருந்து கூட்டிட்டு வந்தேன். இதோ இவர்தான்.. இம்போர்டட் இஷ்ட தெய்வம்!” முருகனைக் காண்பித்து, முகம் மலரச் சிரிக்கிறார்.

மறு ஜன்மம் கொடுத்தாள் 
மாதா புவனேஸ்வரி!

“குரு வழிபாடு உண்டா?”

“எப்போதுமே என் குரு மகா பெரியவர்தான். கடம் உமாசங்கர் அடிக்கடி `நீயும் விருச்சிகம். பெரியவாளுடைய அனுக்கிரகம் கண்டிப்பாக உனக்கு இருக்கு. அதனால் அவரை வச்சு கும்பிடு’ன்னு சொல்வார். பெரியவா படத்தை இங்கே வச்சப்போ, இந்த பூஜை அலமாரி கதவில் ஒரு பாதம் இருந்தது. என்னைப் பொறுத்தவரைக்கும் அதை மகா பெரியவரின் பாதமாகவே நினைச்சுக் கும்பிட்டேன். அவருடைய அனுகிரகம் எனக்குப் பரிபூரணமாக இருப்பதன் அடையாளம்தான் அந்தப் பாதம். மகா பெரியவா கத்துக்கொடுக்கும் ஒரு விஷயம் பொறுமை. நான் அதைக் கடைப்பிடிக்கிறேன். எவ்வளவு கோபம் வந்தாலும் சிரிச்சுக்கிட்டே போற பக்குவத்தை அவர் கொடுத்திருக்கார்.”

“உங்கள் வீட்டு புவனேஸ்வரி மிக மிக அழகு... பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல...!”

“இந்தப் பச்சைச் சேலை அழகி இங்கே வந்ததுக்குப் பின்னே ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கு. முதன் முதலில் நான் பூஜையில் வச்சது எங்க பாட்டி எனக்குக் கொடுத்த தஞ்சாவூர் ஓவியம் லக்ஷ்மி படம்தான். அதுக்கப்புறம் பெரியதா ஒரு படம் வைக்கணும்னு ஒரு ஆசை. கிடைக்கவேயில்லை. ஒரு நாள் சேத்துப்பட்டில் இருக்கும் கடைக்குப் போயிருந்தோம். எங்க வீட்டுக்கு ஒரு ஊஞ்சல் ஆர்டர் செய்திருந்தோம். அதுக்காக போயிருந்தபோது, இந்தப் படத்தைப் பார்த்தேன்.

யு.எஸ்.ஸுக்கு அனுப்புறதுக்காக பார்சல் பண்ணி வெச்சிருந்தாங்க. முகம் மட்டும் கவர் பண்ணாமல் இருந்தது. ‘அப்பா... என்ன ஆழகா இருக்கிறாள் இந்த அம்மன்’னு பேசிக்கிட்டே நாங்க பில்லிங் கவுன்டர் போய்ட்டோம். கரெக்டா அந்தச் சமயத்துல ஒரு போன் வருது கடைக்காரருக்கு. அவர் பேசிட்டுச் சொல்றார்... ‘மேடம்.. அந்த யு.எஸ். கிளையன்ட்டுக்கு வேற படம் அங்கேயே கிடைச்சிடுச்சாம். நீங்க வேணும்னா இதை எடுத்துக்குங்க!’ என்றார்.

எனக்கு எப்படி இருக்கும்! ஒரு நிமிஷம் யோசிச்சேன்... ஊஞ்சலா, இந்த அம்மனான்னு. இந்த அம்மன் வந்தாலே வரவேண்டிய எல்லா விஷயங்களும் தானாக வந்துடும்னு இந்த வீட்டுக்காக முதன் முதலில் நான் வாங்கியது இந்த அம்மாதான். பூரணமாக இருப்பாங்க. அவ்வளவு அழகு, அமைதி, ஆறுதல், அடைக்கலம்... எல்லாம் இந்த அம்மாவிடம் இருக்கும்! எங்க வீட்டுக்கு யார் வந்தாலும் அவங்க என்ன மன நிலையில் இருந்தாலும், இந்த இடத்துக்கு வந்தால் மனசு லேசாகி அமைதி ஆயிடுவாங்க!”

“உங்க வாழ்வில் இறைவன் நிகழ்த்திய அற்புதம்..?”

“என்னுடைய இந்த மறு பிறப்பே தெய்வம் நிகழ்த்திய அற்புதம்தான். போன வருஷம் எனக்கு மூளையில் நடந்த சர்ஜரி... அதிலிருந்து பிழைச்சு வந்தது கற்பனைக்குப் அப்பாற்பட்ட விஷயம். அந்த வருஷம் ரொம்பக் கடுமையானது. மாமனார், மாமியார், கணவர் எல்லாருக்கும் கோவிட். அது முடிந்து கொஞ்சம் நிமிர்ந்த வேளை... என்னுடைய 39-வது பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடி முடிச்சேன்.

மூக்கிலிருந்து ரத்தம். 105 டிகிரி காய்ச்சல். டாக்டர் உடனே மூளையில் ஒரு சர்ஜரி பண்ணனும்னு சொல்றார். மண்டையோட்டைத் திறந்து செய்யவேண்டிய சர்ஜரின்னு சொன்னதும் நான் வேண்டாம்னு சொல்லிட்டேன். எவ்வளவு நாள் இருக்கேனோ இருந்துட்டுப் போறேன்னு சொன்னேன். கடைசியா டாக்டர் மூக்கு வழியாக சர்ஜரி பண்ணிப் பார்க்கலாம்னு சொன்னார். எங்க இண்டஸ்ட்ரியில் இருக்கும் பெண்கள் எல்லோருக்குமே அழகாக இருக்கணும், அழகைப் பாதுகாக்கணும்னு எண்ணம் கட்டாயம் இருக்கும். நான் போய் மண்டையை எல்லாம் உடைச்சு ஆபரேஷன் பண்ணிட்டு... அப்பப்பா... நினைச்சுப்பார்க்கவே முடியல.

‘அதெல்லாம் உனக்கு ஒண்ணுமே ஆகாதுடி. நீ பாரேன்... மூக்கு வழியாக ஆபரேஷன் பண்ணிட்டு பத்து நாள்தான்... நீ சீக்கிரம் வந்திடுவே’ன்னு சொல்லி அனுப்பினாங்க இந்த அம்மா எல்லாம். அதேமாதிரி ஆபரேஷன் நல்லபடியாக முடிஞ்சு, 18 நாட்களில் வீட்டுக்கு வந்து, ஒன்றரை மாசத்தில் திரும்ப வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அதுக்குக் காரணம் இவங்கதான்.

நான் மூச்சு விடும் ஒவ்வொரு தருணமுமே இறைவனுக்கு நன்றி சொல்லும் தருணம்தான். என்னைப் போல ஒரு நோயிலிருந்து மீண்டு வந்தவங்களுக்குத்தான் அந்தப் பிறவியின் அர்த்தம் புரியும். எனக்கும் என் மகளுக்கும் அது நடந்திருக்கு. நாங்க ரெண்டு பேருமே மிகப் பெரிய உடல் நலப் பிரச்னையைத் தாண்டி வந்திருக்கோம்.

என் பாதையில் முள் இருக்கும். ஆனால் அது காலில் குத்தும்போது அதை எடுத்துப் போட்டுட்டு எப்படி முன்னால் போகணும்கிறதுக்கான தைரியம் கொடுப்பது இந்த அன்னையர்தான்! இவங்களுக்குத்தான் ஒவ்வொரு தருணமும் நன்றி சொல்வேன்.. கொடுத்தாலும் கொடுக்கலன்னாலும் இவங்கதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்! தே ஆர் ஆல்வேய்ஸ் தேர் ஃபார் மீ! ஓகேவா?” என்று அன்னை புவனேஸ்வரியை நோக்கி இரு கட்டைவிரல்களையும் உயர்த்திக் காண்பித்துப் புன்னகைக்கிறார் அர்ச்சனா.

தன் வேதனை, வெற்றி, வாழ்க்கை என எல்லாவற்றையும் அந்த அன்னையருக்கு அர்ச்சனா சமர்ப்பித்த அந்த நிமிடம் உணர்வு பூர்வமானது! அவர் சொல்வது போன்று. இறையருள் எப்போதும் அவருக்குத் துணையிருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism