திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சிந்தனை விருந்து: பட்டுத்துணியும் பாரதியும்!

மகாகவி பாரதியார்
பிரீமியம் ஸ்டோரி
News
மகாகவி பாரதியார்

குழந்தைகளுக்கு நல்ல சட்டை இல்லை; எனக்கும் ரவிக்கைக்குத் துணி வேண்டும். நல்ல இமிடேஷன் சில்க் வாங்கி வாருங்கள்

பக்தியில் திளைப்பவர்களுக்கு `பகவத் ஸ்மரணை’ இருக்கும். சதா `ராமா...’, `ஈஸ்வரா...’ என்று இறைசிந்தனை யாகவே இருப்பார்கள். உண்மையான தேச பக்தியில் ஊறியவர்களும் அப்படித்தான். தேசப்பற்று அவர்களின் ஒவ்வோர் அணுவிலும் நிறைந்துபோயிருக்கும். அதற்கு மகாகவி பாரதியைப்போல் வேறோர் உதாரணம் சொல்ல முடியாது.

சிந்தனை விருந்து: பட்டுத்துணியும் பாரதியும்!

`இமிடேஷன் சில்க்’ எனப்படும் செயற்கைப் பட்டு இந்தியாவில் பிரபலமாகியிருந்த காலம். `பளபள’வென்று இருக்கும்; மெருகு குலையாது.

ஒருநாள் பாரதியிடம் செல்லம்மாள் 15 ரூபாய் கொடுத் தார். ``குழந்தைகளுக்கு நல்ல சட்டை இல்லை; எனக்கும் ரவிக்கைக்குத் துணி வேண்டும். நல்ல இமிடேஷன் சில்க் வாங்கி வாருங்கள்’’ என்றார். பாரதியும் ``ஆகட்டும்’’ என்றார்; கிளம்பிச் சென்றார். இரவு 8 மணிக்கு வீடு திரும்பினார். தன் கையிலிருந்த சிறு பொட்டலத்தை மகள் தங்கம்மாளிடம் கொடுத்தார்.

``என்ன இன்று துணி வாங்க சௌகரியப்படவில்லையோ?’’ கேட்டார் செல்லம்மாள்.

``தங்கம்மாளிடம் கொடுத்தேனே...’’

தங்கம்மாளும் செல்லம்மாளும் அந்தப் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தார்கள். உள்ளே ஒரு காஞ்சிபுரம் ஜரிகைக் கொட்டடித் துண்டு இருந்தது. ``சில்க் எங்கே?’’ செல்லம்மாள் கேட்க, ``வாங்கவில்லை. இந்த ரவிக்கைத் துண்டு உனக்குப் பிடிக்கவில்லையா?’’ என்று திருப்பிக் கேட்டார் பாரதி.

``நன்றாக இருக்கிறது. விலை அதிகமாக இருக்குமே...’’

``அதைப்பற்றி உனக்கென்ன கவலை? சரக்குக்கு ஏற்ற விலை. தவிரவும் நாட்டுத்துணி. எதிலும் `இமிடேட்’ செய்தது எனக்குப் பிடிக்காது. நம் 15 ரூபாய் சீனாக்காரனுக்குப் போவதைவிட, நம் காஞ்சிபுரம் வியாபாரிக்குப் போய்ச் சேருவது நல்லது அல்லவா?’’ என்றார் பாரதி.

இந்தச் சம்பவம் அமுதசுரபி வெளியீடாக, பாரதியின் பேத்தி விஜய பாரதி தொகுத்திருக்கும் `தங்கம்மாளின் படைப்புகள்’ நூலில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

செல்லாமாள் பாரதியின் மனப் பக்குவம் அத்தனை இல்லத்தரசி களுக்கும் வாய்ப்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு சரியான பதில் தரும் கணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மனைவி சொன்னார்: ``ஏங்க... நேத்து ராத்திரி நீங்க ஒரு பெரிய நகைக்கடையில எனக்கு வைர கம்மல் வாங்கித் தர்ற மாதிரி கனவு கண்டேங்க...’’

கணவன் சொன்னான்: ``ஆமாமா. எனக்கும் அந்தக் கனவு வந்துச்சு. உன் அப்பாகூட பில்லுக்குப் பணம் கொடுத்துக்கிட்டிருந்தாரே...’’