Published:Updated:

உற்சாகம் பிறக்கும்.. வெற்றிக்கதவு திறக்கும்! சிம்ம ராசிக்கான 2021 ஆங்கிலப் புத்தாண்டு ராசிபலன்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிம்மம் புத்தாண்டு ராசிபலன்கள்
சிம்மம் புத்தாண்டு ராசிபலன்கள்

தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். மனதுக்குப் பிடித்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

துன்பத்திலும் துவளாமல் மன உறுதியோடு சிங்கத்தைப்போல எதிர்த்து நின்று பிரச்னைகளைப் போராடி வெற்றிபெறும் சிம்ம ராசி அன்பர்களே...

உங்களின் சுக ஸ்தானத்தில் சுக்கிர பகவான் அமர்ந்திருக்கும்போது இந்த புத்தாண்டு பிறப்பதால் வீடு கட்டும் வேலை விரைந்து முடியும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வி.ஐ.பி கள் அறிமுகமாவார்கள். வாழ்க்கைத்துணை வழியில் உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆனால் உங்களுக்கு 12 - ம் ராசியில் இந்த புத்தாண்டு பிறப்பதால் அலைச்சலும், திடீர் பயணங்களும், அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும். சுபச்செலவுகள் அதிகமாகும்.

புத்தாண்டு பலன்கள் 2021
புத்தாண்டு பலன்கள் 2021

குரு பகவான் அருளும் பலன்கள்

இந்த ஆண்டு ஏப்ரல் 5 - ம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 6 - ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் பழி, ஏமாற்றம், அலைச்சல், டென்ஷன், வேலைச்சுமை, செரிமானக் கோளாறு ஆகியன நீங்கும். பூர்வீகச் சொத்து சம்பந்தமாக வழக்குகள் வேண்டாம். என்னதான் திட்டமிட்டுச் செயல்பட்டாலும் அந்த காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்துதான் முடிக்க வேண்டி வரும்.

எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். குலதெய்வ கோயிலைப் புதுப்பிப்பீர்கள். விலை உயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனம் அவசியம். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியைக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் கொஞ்சம் கவனத்துடன் பழகுவது நல்லது.

ஆனால், ஏப்ரல் 6 - ம் தேதி முதல் செப்டம்பர் 14 - ம் தேதிவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீட்டில் நுழைவதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்து கிடந்தவர்கள் உற்சாகமாவார்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். பாதியிலேயே நின்றுபோன வேலைகள் முழுமையடையும்.

வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்னைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல பெண் அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். மனதுக்குப் பிடித்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சனி பகவான்
சனி பகவான்

ராகு - கேது

இந்த ஆண்டு முழுக்க கேது 4 - ம் வீட்டில் நிற்பதால் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்படுவது நல்லது. பூர்விகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். தாய்வழி உறவினர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். வீடு கட்ட முடிவெடுத்துவிட்டால் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

யாருக்கும் கடன் வாங்கித் தரவேண்டாம். அவ்வப்போது எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். மூட்டு வலி, ஒற்றை தலை வலி, இரத்த சோகை வரக்கூடும்.

ஆனால் 10 - ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எந்தப் பிரச்னை வந்தாலும் கண்டு அஞ்சாமல் பதிலடி கொடுக்கும் அளவிற்கு மன தைரியம் பிறக்கும். பிரபலங்கள், நாடாளுபவர்களின் உதவியுண்டு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சங்கடங்கள் தீர்ப்பார் சனிபகவான்

சனிபகவான் ராசிக்கு 6 - ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருக்கிறார். எனவே இந்தப் புத்தாண்டில் எத்தனை பிரச்னைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிக்கக் கூடிய மனோபலம் உங்களுக்குக் கிடைக்கும். வி.ஐ.பிகளும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஷேர் மூலம் பணம் வரும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வேற்றுமொழிக்காரர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றி மூலம் சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

பணம்
பணம்

வியாபாரிகள், உத்தியோகஸ்தர்களுக்கான சிறப்புப் பலன்கள்

வியாபாரிகளே!

சக வியாபாரிகளுடன் இருந்த பிரச்னைகள் விலகும். சனி 6 - ல் சாதகமாக இருப்பதால் அரசியல்வாதிகளின் உதவியால் கடையை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். வேலையாள்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்-. டெக்ஸ்டைல், மருந்து, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புதுக் கிளைகள் தொடங்குவீர்கள். கூட்டுத்தொழிலில் புது ஒப்பந்தங்கள் கூடி வரும்.

உத்தியோகஸ்தர்களே!

இதுவரை வீண் பழியும் மன உளைச்சலும் மட்டுமே எஞ்சியிருந்த நிலை மாறி எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவியுயர்வு, சம்பள உயர்வு தடையில்லாமல் கிடைக்கும். கேட்ட இடத்திற்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொண்டு வருவீர்கள். உங்களின் தனித்திறமையை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். மூத்த அதிகாரியிடமிருந்து அலுவலக ரகசியங்களைத் தெரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

இந்தப் புத்தாண்டின் தொடக்கம் உங்களைச் சிரமப்படுத்தினாலும் மையப் பகுதியும், இறுதிப் பகுதியும் சாதிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்:

உளுந்தூர் பேட்டைக்கு அருகில் பரிக்கல் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். மாற்றுத் திறனாளிக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு