Published:Updated:

சிவ மகுடம் -71

சிவ தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ தரிசனம்! ( ஓவியர் ஸ்யாம் )

மங்கையர்க்கரசியார் சரிதம்

சிவ மகுடம் -71

மங்கையர்க்கரசியார் சரிதம்

Published:Updated:
சிவ தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சிவ தரிசனம்! ( ஓவியர் ஸ்யாம் )

ஆலவாய்ப் பெருநகரை மையம் கொண்டு ஆடலரசனின் அருளாடல் ஆரம்பமானது. அடியவர்களை தன்பொருட்டு ஒருங்கிணைக்க சித்தம் கொண்டு விட்டது சிவம். அந்த இறைவர் வகுத்த விதிப்படி வினைகள் யாவும் தொடர்ந்தன.

பாண்டிமாதேவியாரின் கட்டளைப்படி கோச்செங்கணும், இளங் குமரனும் மதுரைக்குப் புறப்பட்டிருந்தனர். அதேநாள் இரவுப் பொழுதில் பேரமைச்சரின் ஆணைப்படி மாமதுரைக்குப் பயணித்த தென்னவன் திருமுகத்தானோ, ஆபத்தில் சிக்கி பெரும்பள்ளத்தில் வீழ்ந்துகிடந்தான்.

சிவ மகுடம் -71

றைச் சித்தப்படி பாண்டிய தேசத்து ராஜதானியிலும் அதைச் சுற்றியும் அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழத் தொடங்கியிருந்தன. பழையாறை மாளிகையில் தங்கியிருந்த பாண்டிமாதேவியாரின் சிந்தனைகளோ, இளங்குமரன் கூறிச் சென்றிருந்த சீர்காழிப் பிள்ளை மற்றும் வாகீசரின் அற்புதங்கள் குறித்த நினைவில் சுழன்றுகொண்டிருந்தன.

திருமறைக்காட்டில் திருஞானசம்பந்தர் திருக்கதவம் தாழிட்டுக் கொள்ளும்படி பாடினார் அல்லவா?

அதன் பிறகு என்ன நடந்திருக்கும்... சம்பந்தப் பிள்ளை இப்போது எங்கு உறைந்திருப்பார்... தமது அழைப்பிதழை தூதர்கள் இருவரும் அவரிடம் அளிக்கும்போது, அந்த அழைப்பை அவர் ஏற்பாரா... ஆலவாய்க்கு வருகை புரிவாரா... என்ற சிந்தனையில் ஆழ்ந்துவிட்டிருந்தார் மங்கையர்க்கரசி யார்.

அவரைப் போன்றே நமக்கும், திருமறைக்காட்டில் அடுத்து என்ன நடந்தது, இனி என்ன நிகழும் என்பதை அறிந்துகொள்ள ஆவல்தான்! ஆகவே, வாகீசரைத் தொடர்கிறோம்... வாருங்கள் திருமடத்துக்குள் திருநாவுக்கரசப் பெருமானை தரிசிக்கலாம்...

`திருச்சிற்றம்பலம்!’

வாகீசராம் திருநாவுக்கரசரின் வாய் மெள்ள முணுமுணுத்தது.விழியோரம் துளிர்த்த நீர்த்துளிகள் தாரையாய் வழிந்தது. நீர்த் திரையிட் டிருந்த அவரின் கண்மலர்கள் சாளரத்துக்கு வெளியே விண்ணில் தெரிந்த விண்மீன்களைப் பார்த்தன.

அந்த விண்மீன்களுக்கு ஊடே அழகிய பிறைச் சந்திரன்... அழகிய ஓவியம் ஒன்றின் ஆரம்பப்புள்ளி போல் தென்பட்டது. ஆம், அந்தச் சந்திர பிறையை முதலாகக் கொண்டு பேருருவம் ஒன்று தோன்றுவதாகத் தெரிந் தது நாவுக்கரசருக்கு. அந்த உருவம் முழுமை அடைந்தபோது, நாவரசர் மீண்டும் `திருச்சிற்றம்பலம்... திருச்சிற்றம்பலம்’ என்று குரல் கொடுத்தார். ஆம், அவருக்குள் எழுந்த எண்ண அலைகள் விண்ணில் பிறைசூடிய பெருமானின் திருவுருவையே காட்டியது.

`என் சிவமே... என் சிவமே’ என மீண்டும் முனகிய வாகீசர், மறைக் காட்டு வாயிலில் நிகழ்ந்த சம்பவத்தை மீண்டும் நினைத்துப் பார்த்தார்.

சதுரம்மறை தான் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டுறை மைந்தா
இதுநன்கு இறை வைத்தருள் செய்க எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

மாதுளைவண்ண இதழ் திறந்து, தேனொழுகும் தமிழால், கேட்பவர் சிந்தை மகிழும்படி சம்பந்தக் குழந்தை இந்தப் பதிகத்தைப் பாடியதுமே கோயிலின் திருக்கதவுகள் திருக்காப்பிட்டுக் கொண்டன.

சிலிர்த்தது ஊர்! திருநாவுக்கரசரும் மெய் சிலிர்த்தார். ஆனாலும் ஒருகணம் அவரின் மனம் துணுக்குறவே செய்தது.

தாம் பத்துப் பதிகங்கள் பாடியும் திறக்காத ஆலயக் கதவங்கள், கடைக் காப்பு பாடிய பின்னரே திறந்தன. ஆனால், பிள்ளை ஒரு பாடல் பாடியதுமே, அந்தப் பதிகத்துக்கு இசைந்து உடனே சாத்திக்கொண்டு விட்டன.

எனில், பிள்ளைக்கு வாய்த்த பக்குவம் இன்னும் தமக்கு வாய்க்க வில்லையோ. ஞானக் குழந்தைக்கு உடனே செவிசாய்த்த இறைவன், என் கோரிக்கையை ஏற்க காலம் தாழ்த்தியது ஏன்? முதல் பதிகத்தைப் பாடியதுமே ஈசன் தன் ஆலயத்தின் திருக்கதவை திறக்க அனுமதிக்காதது ஏன்?

பதிகத்தில் குறையா அல்லது என் பக்தியி லேயே குறையா... யாதும் அறியமுடியவில்லையே என்றெல்லாம் மருகினார். அதன்பொருட்டு மனம் தளர உடலும் தளர்வுற்றுச் சரிந்தது.

பிள்ளையோ தளிர்க்கரங்களால் நாவுக்கரசரின் தோளைப் பற்றி, அவர் விழுந்துவிடாதபடி தாங்கிக்கொண்டார். வாகீசரின் விழிவாசல் வழியே அவரின் அகத்துக்குள்ளும் நுழைந்து, சிந்தனை ஓட்டத்தையும் வாசித்தறிந்துவிட்டார் போலும்.

புன்னகையோடு அவரை ஆற்றுப்படுத்தினார்.

``அப்பர் பெருமானே! தாங்கள் கொண்டிருப் பது வீண் கவலை. இறைவன் தங்களுடைய அழகுத் தமிழ் பதிகத்தை முழுமை யாய்ச் செவிமடுத்து மகிழும் விருப்பினாலேயே காலம் தாழ்த்தியிருக்கிறார். ஆகவே, வருந்த வேண்டாம்’’ என்றார்.

அப்போதைக்கு மனம் தேறியவராய் காட்டிக்கொண்டாலும், அப்பரின் மனம் இன்னும் வருத்தத்தில் இருந்து மீளவில்லை. அதே சிந்தனையுடன் திருமடத்தில் இடமும் வலமுமாக புரண்டுகொண்டிருந்தவரின் விழிகள் அவரையும் மீறி மெள்ள மெள்ள மூடிக்கொண்டன.

அப்பரை உறக்கம் ஆட்கொண்டது. புறக் கண்கள் மூடிக் கொண்டதும் அகக்கண்கள் விழித்துகொண்டன. மனத் திரையில் அற்புதக் காட்சிகள் விரிந்தன.

சிவ மகுடம் -71

விண்முட்டி நிற்கும் பனிச் சிகரங்களைக் கண்டார். அதன் சாரலெங்கும் தாண்டவமாடும் கணங்களைக் கண்டார். சிரமேற் கரம் குவித்து நின்று தவம்புரியும் முனிகளைக் கண்டார். முதல் பிள்ளையைக் கண்டார்; முருகவேளையும் கண்டார். நந்தியைக் கண்டார் அவரையும் முந்தி ஈசனின் திருவடித் தொழும் அன்னையையும் கண்டார்.

அதோ... புலித்தோல் இடையுடுத்தி, விரிசடை யில் பிறைசூடி, வானோர் தொழுதிருக்க, கண்மலரால் தண்ணொளியைத் தந்தருளும் நாதனையும் கண்டார். காட்சி அவரின் அகத்தில் மட்டுமல்ல, அப்பரின் திருமுகத் திலும் மலர்ச்சியைக் கொடுத்தது.

மெள்ள வாகீசரை அழைத்தது சிவம்!

``நாவுக்கரசா! திருவாமூருக்கு வா...’’ என்று கட்டளையிட்டது.

ஆமாம் கனவில் கண்ட காட்சியை நிஜத்திலும் காட்டியருள, திருநாவுக்கரசரின் மனக்குறை நீங்கச் செய்ய சித்தம் கொண்டுவிட்ட பரமன் அவரைத் திருவாமூர் தலத்துக்கு வரும்படி பணித்தார்.

வாருங்கள் நாம் அவரை முந்திக்கொள்வோம்.

திருவாய்மூர்! மிக அற்புதமான திருத்தலம்.

திருவாரூர் - வேதாரண்யம் மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், திருநெல்லிக்கா எனும் பாடல்பெற்ற தலத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது இந்த ஊர்.

இங்கே திருவாய்மூர்நாதனாக நம் அப்பன் அருள்பாலிக்க, அம்பிகை உமையவளோ பாலினும் நன்மொழியம்மை எனும் திருப் பெயருடன் காட்சி தருகிறாள்.

நவகிரக தோஷம் போக்கும் ஊர் இது. இந்திரனின் மகன் ஜயந்தன் இந்தத் தலத்துக்கு வந்து சிவவழிபாடு செய்து அருள்பெற்றான்.

தான் மட்டும் அருள்பெற்றால் போதாது என்று கருதி, சித்திரை மாதம் முதல் வெள்ளிக் கிழமையில் இந்தத் தலத்துக்குச் சென்று வழிபடும் அன்பர்கள் அனைவரும் சிவனருள் பெற்று மகிழும் பாக்கியத்தையும் பெற்றுத் தந்திருக்கிறான்.

தலம், தீர்த்தம், மூர்த்தி ஆகிய மூன்றாலும் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது திருவாய்மூர். இந்தத் தலத்தின் பாபமேக பிரசண்ட தீர்த்தம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. நம்முடைய சகலபாவங்களையும் பொசுக்கும் வல்லமை பெற்றது இந்தத் தீர்த்தம்.

காசிக்கு நிகராகவும் ஒரு சிறப்பைப் பெற்றுத் திகழ்கிறது திருவாய்மூர். இங்கு எழுந் தருளியுள்ள பைரவ மூர்த்திகளே அதற்குக் காரணம். இவ்வளவு சிறப்புமிகுந்த தலத்துக்கு இறைவனே அழைக்கும்போது தாமதிப்பாரா திருநாவுக்கரசர்? உடனே புறப்பட்டுவிட்டார்.

இந்தச் செய்தியை திருஞானசம்பந்தரின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்கள் அடியார்கள். அந்த ஞானப்பிள்ளை சிந்தையில் ஆழ்ந்தது!

- மகுடம் சூடுவோம்...

அமாவாசை கோயில்!

`அமாவாசை கோயில்’ எனப்படும் சித்தேஸ்வரன் கோயில், சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில், கஞ்ச மலையில் அமைந்திருக்கிறது.

அமாவாசை அன்று, மூலிகை சக்திகள் நிறைந்த இங்குள்ள காந்த தீர்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்கு அருகில் உள்ள பரிகாரக் கிணற்றில் உப்பு, மிளகு ஆகியவற்றைப் போட்டு வழிபடுகிறார்கள். இப்படி மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்ய, அனைத்துவிதமான நோய்களும்... குறிப்பாக தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism