Published:Updated:

சிவமகுடம் -72

அப்பர் சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பர் சுவாமிகள்

மங்கையர்க்கரசியார் சரிதம்!

சிவமகுடம் -72

மங்கையர்க்கரசியார் சரிதம்!

Published:Updated:
அப்பர் சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
அப்பர் சுவாமிகள்

பால் நிலவு பாதையெங்கும் வஞ்சகமின்றி தண்ணொளியைப் பொலிந்து கொண்டிருந்தது. முன்னதாக அந்திப் பொழுதில் பெய்த சிறுமழையில் நனைந்திருந்த தாவர ஜன்மங்கள், தத்தமது இலைதழைகளில் சிறுதுளிகளாய் நீரைத் தேக்கி வைத்திருந்தன.

அந்த நீர்த்துளிகளில் நிலவின் கிரணங்கள் விழுந்து பிரதிபலிக்க, அந்தப் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் ஆயிரமாயிரம் நிலாக்களைக் கண்டான் தென்னவன் திருமுகத்தான். வெள்ளை நிறத்துடன் இதழ் விரித்து மணம் பரப்பும் இரவுப் பூக்கள், பார்ப்பதற்கு மண்ணில் உதித்த சிறு தாரகைகளாகத் தோன்றின. ஆனாலும் அவற்றையெல்லாம் அனுபவிக்கவோ ரசிக்கவோ இடம்கொடுக்கவில்லை, அவன் மனம்! காரணம் அவன் திருமேனியில் ஆங்காங்கே ஏற்பட்டிருந்த ரணங்களால் உண்டான வலி!

சிவமகுடம் -72

புயல் வேகத்தில் அவனுடைய புரவி பாய்ந்து கொண்டிருந்த வேளையில், விருட்சம் ஒன்றை நெருங்கும் தருணத்தில் நிகழ்ந்தது அந்த விபத்து... இல்லையில்லை... கொடும் தாக்குதல் என்றே சொல்லவேண்டும்!

திடுமென கட்டறுந்து விடுபட்டது போன்று பெரும் விசையுடன் வந்த கிளையொன்று மோதியதால், தென்னவனும் அவன் புரவியும் நிலைகுலைந்து வீழ்ந்தார்கள்.

பிறகு, தென்னவன் திருமுகத்தான் கண் விழித்தபோது, மரக்கிளை ஒன்றில் ஊசலாடிக் கொண்டிருந்தான். மலைச் சரிவில் மேலும் சரிந்து விழுந்துவிடாதபடி மரக்கிளை ஒன்றால் தடுக்கப்பட்டிருந்தான். அவன் ஆடை அந்தக் கிளையில் சிக்கிக்கொண்டிருந்தபடியால், தான் பிழைத்துக்கொண்டதையும் அங்கு இந்த நிலையில் ஊசலாடிக் கொண்டிருப்பதையும் உணர்ந்தான். சட்டென்று கிளையைப் பற்றிக் கொண்டவன், பிரயத்தனத்துடன் சரிவிலிருந்து மீண்டு வந்தான்.

மேனியின் சிராய்ப்புகள் வெளிப்புறத்தில் எரிச்சலைத் தந்தன என்றால், அவனுடைய அகத்திலோ... தனக்கு இப்படியோர் ஆபத்தை ஏற்படுத்திய பாதகரின் செயலால் உண்டான தகிப்பு அதிகமாய் இருந்தது.

இங்ஙனம் விபத்தும் மயக்கமும் ஏற்படுத்திய தாமதத்தின் அளவை அவனால் யூகித்து அறிய இயலவில்லை. ஆயினும் எதிரிகள் முந்திக்கொண்டிருப்பார்கள் என்பதை மட்டும் உறுதியாய் அனுமானிக்க முடிந்தது அவனால்.

புரவி இல்லை. இனி நடந்துதான் செல்ல வேண்டும். நிலவின் ஒளி சிறு பாதையொன்றை அவனுக்குப் புலப்படுத்த அதன் வழியே நகர்ந்துகொண்டிருந்தான். அதேவேளையில் `அடுத்து என்ன செய்வது?’ என்ற சிந்தனையும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு தனக்குத் தானே அவன் நடத்திய மந்திராலோசனையின் நிறைவில் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.

``அதுதான் சரி...’’ என்று மேலும் கீழுமாக தலையை அசைத்து, முணுமுணுத்துக் கொண்டவன், நடைவேகத்தை இயன்ற வரையிலும் துரிதப்படுத்தினான்.

அதேநேரம், வெகு அருகில் தளர்வு நடை போட்டு வரும் புரவி ஒன்றின் குளம்படி ஓசை கேட்க, தென்னவன் திருமுகத்தானின் முகத்தில் மலர்ச்சி.

வருவது தனது புரவியாகத்தான் இருக்கும் என்ற உற்சாகத்துடன், ஓசை வரும் திசையை நோக்கி விரைந்தான். ஆனால் அவன் கணிப்புப் பொய்யாகிப் போனது. பேருருவம் ஒன்றைச் சுமந்தபடி எதிர்ப்புற திருப்பத்திலிருந்து வெளிப்பட்டது, அந்தப் புதிய புரவி.

இவனை அணுகியதும் புரவியிலிருந்து லாகவமாக தரையில் குதித்ததோடு, முகக் கவசத்தை நீக்கி தன் திருமுகத்தையும் காட்டிச் சிரித்தது அந்தப் பேருருவம்.

அந்த முகத்தை நெருக்கத்தில் கண்ட தென்னவன் மிகப் பெரிதாக அதிர்ந்தான்!

சிவமகுடம் -72

தே இரவுப் பொழுதில் திருவாய்மூர் நோக்கிச் செல்லும் அந்தப் பாதையில், அப்பர் பெருமானையும் ஓர் உருவம் வழிநடத்திச் சென்றது. ஆனால், அந்த உருவத்தை நெருங் கவோ, அதன் திருமுகத்தைப் பார்க்கவோ வாகீசரால் இயலவில்லை.

ஓர் அரசனைப் போன்று கம்பீர நடை போட்டு உருவம் முன்னே செல்ல, தன்னால் இயன்றவரையிலும் வேகம் காட்டி நடந்து, அதைப் பின்தொடர்ந்தார் திருநாவுக்கரசப் பெருமான்.

ஆமாம்! முன்னிரவுப் பொழுதில் புலித்தோல் இடையுடுத்திய பெருமான் - பிறைசூடிய நாதன் தந்த காட்சியால் பெரும் பரவசத்துக்கு ஆளாகியிருந்தார் திருநாவுக்கரசர். அத்துடன் குரலொன்றும் ஒலிக்கக் கேட்டார்.

``நாவுக்கரசா! திருவாய்மூருக்கு வா...’’ என்று கட்டளையிட்டது அந்தக் குரல்.

சட்டென்று எழுந்துவிட்ட வாகீசர், அப்போதே புறப்பட்டுவிட்டார். `அழைத்தது என் சிவமேதான்’ என்று உறுதிகொண்டவர், மடத்தை விட்டு வெளியேறினார்.

ஊர் எல்லையில் இரண்டு மூன்று பாதைகள். அதில் திருவாய்மூர் தலத்துக்குச் செல்லு பாதை எது? தெரியாமல் திகைத்தார்!

அப்போது, சட்டென்று தோன்றிய ஒரு பேரொளி விழிகூசச் செய்தது. அதனால் அவரின் இமைகள் ஒரு கணம் மூடித் திறக்க, பேரொளி மங்கி சற்று தூரத்தில் ஓர் உருவமாய் தென்பட்டது. அந்த உருவம் `எம்மைப் பின் தொடர்க’ என்பது போல் சைகை காட்டிச் செல்வதும் புலப்பட்டது. தன்னையும் அறியாமல் பின் தொடர்ந்தார் வாகீசர்.

சிவமகுடம் -72

டையப்போகும் இலக்கு மிகப் பெரியது எனில், அதற்கான பயணமும் தூரமும் ஒரு பொருட்டல்ல அல்லவா? வாகீசரின் உள்ளமும் அப்படியான துடிப்புடன் அவரை உந்தித் தள்ளியது.

`நெஞ்சமே! நாமும் நம் பிறப்பும் மெய்யன்று. நிலைபெற்று உய்ய வேண்டும் என எண்ணுவாய் எனில், எம்பிரான் உறையும் சிவாலயத்தை நாள்தோறும் நாடிச் செல். பொழுது புலருமுன் திருஅலகு கொண்டு தூய்மை செய்து, மெழுகித் திருத்தொண்டு செய். பூமாலை சூட்டிப் பாமாலையாலும் இறைவனைப் பாடி வணங்கு. பக்திப் பெருக்கால் ஆனந்தக் கூத்தாடு. அரனே வாழ்க, ஐயனே வாழ்க என்ற ஓதிக் கூவு’

அடிக்கடி தன் நெஞ்சத்துக்கு வாகீசர் இடும் கட்டளை இதுவாகத்தான் இருக்கும். இப்போதும் அப்படியே! சிவச் சிந்தையோடு, சிவக் கட்டளையை நிறைவேற்ற விரைந்தார்.

முன்னே செல்வது இறைவனே என்று உள்ளம் உரைக்க, இறையின் திருமுகத்தைக் கண்டு விடும் உந்து தலோடு நடந்தார் அப்பர். திருவாய்மூர் எல்லையை அடைந் தார். ஆனால்...அதற்குமேல் அந்த உருவத்தினனைக் காணாமல் மீண்டும் திகைத்து நின்றார். அங்கே, எல்லையில் ஒரு சத்திரம் இருந்தது.

`ஒருவேளை இங்கே நுழைந்திருப்பாரோ’ என்ற எண்ணத்தில் உள்ளே சென்றார். திண்ணையில் இளைஞன் ஒருவன் உறக்கத்தில் இருந் தான். மெள்ள குரல் கொடுத்து அவனை உசுப்பினார் வாகீசர். அவனும் கண் விழித்தான்!

காரணம் இன்றி காரியம் இல்லை என்பார்கள் பெரியோர்கள். உண்மைதான்... உண்மை தத்துவத்தை உலகுக்குப் புரியவைக்க, அதற்குக் கருவிகளாகித் திகழும் அற்புதர்களின் மாண்பை உலகுக்கு எடுத்துச் சொல்ல, எத்தனையோ காரியங்களை நடத்துகிறது இறை. அதில் ஒன்று அன்று திருவாய்மூரில் நடக்கத் தொடங்கியிருந்தது.

நாவுக்கரசர் திருவாய்மூருக்கு வந்துசேர, அவரைத் தொடர்ந்து ஞானப்பிள்ளையும் வந்து சேர்ந்தது. இறைவனைக் கண்டது.

தளிரிள வளரென உமைபாடத்
தாள மிடவோர் கழல்வீசிக்
கிளரிள மணியர வரையார்த்
தாடும் வேடக் கிறிமையார்
விளரிள முலையவர்க் கருள்நல்கி
வெண்ணீ றணிந்தோர் சென்னியின்மேல்
வளரிள மதியமொ டிவராணீர்
வாய்மூ ரடிகள் வருவாரே...


- எனத் தொடங்கி, மனதார வணங்கி வாயாரப் பாடித் தொழுதது. தான் கண்ட காட்சியை அப்பருக்கும் காட்டிக் கொடுத்தது!

- மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism