சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

தீபம் போற்றி... திருவே போற்றி!

16 வகை தீபங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
16 வகை தீபங்கள்

பூசை. அருண வசந்தன்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

ஒளி வழிபாட்டின் உன்னத அடையாளங்கள் தீப விளக்குகள். தீபத்தை, `தீபலட்சுமி’ என்கின்றன ஞான நூல்கள். ஞானியரோ தமது அஞ்ஞானத்தை அகற்றும் `ஞான விளக்கு’ என்றே இறையைப் புகழ்கின்றனர். `வையம் தகளியா வார்கடலே நெய்யாக, வெய்ய கதிரோன் விளக்காக...’ என்பது ஆழ்வார் பாசுரம். ஆக, தத்துவம், வழிபாடு, பிரார்த்தனை, கதைகள் என ஆன்மிகத்தில் பெரும்பங்கு வகிப்பவை விளக்குகள். அவற்றைப் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் உங்களுக்காக...

தீபம் போற்றி... திருவே போற்றி!

ஆலய விளக்குகள்

அகல் விளக்குகள், நிலை விளக்குகள், கிளை விளக்குகள், விருட்ச தீபம், தூங்கா விளக்குகள், குத்து விளக்குகள், நெடுநிலை விளக்குகள், சர விளக்குகள், தூண்டாமணி விளக்குகள் ஆகியவை ஆலயங்களில் பயன்படுத்தப்படும் விளக்குகள்.

ஈசான்ய தீபம்

சிவாலயங்களில் சிவலிங்கத்துக்குப் பின்புறம் சுவரில் ஒரு தீபம் அமைக்கப்பட்டிருக்கும். இது, ஸ்வாமிக்கு முன்புறம் ஏற்றப்பட்டுள்ள தீபங்களால் பின்புறம் ஏற்படும் நிழலைத் தடுத்து, அப்பகுதியில் ஒளியூட்டும். இது இறைவனின் மேல்நோக்கிய முகமான ஈசான்யத்தை உணர்த்துவதாக இருக்கிறது என்பார்கள் ஆன்மிக ஆன்றோர்கள்.

பாவை விளக்கு

ஆலயங்களில் பணிபுரிந்த பெண்கள் கோயில்களில் விளக்கேற்றுவதைப் பெரும்பேறாகக் கருதினர். தாம் விளக்கேந்தி நின்று பணிபுரிவதைக் குறிக்கும் வகையில், தங்களைப் போன்றே உருவங்களைச் செய்து ஆலயத்தில் நிலைப்படுத்தினர். இவையே பாவை விளக்குகள்.

தன் அணுக்கியான பரவை நாச்சியாரின் விருப்பப்படி திருவாரூர் பூங்கோயிலைக் கற்றளியாக்கினான் ராஜேந்திர சோழன். கோயில் குடமுழுக்கின்போது பரவையாருடன் தேரில் ஏறி பவனி வந்தான். தியாகேசரைப் பணிந்தான். இவர்கள் இருவரும் நின்று தியாகேசரைத் தொழுததன் நினைவாக, இரண்டு பாவை விளக்குகள் இங்கே நிலைப்படுத்தப்பட்டனவாம். இவை `நின்ற இடம் தெரியும் குத்துவிளக்குகள்’ என்று அழைக்கப்பட்டன.

தீபம் போற்றி... திருவே போற்றி!

தோரண தீபங்கள்

மங்கல நாள்களில் ஆலயங்களின் வாயில் நிலைகளின் இருபுறமும், மேல் உத்தரத்திலும் தோரணமாக விளக்குகள் அமைக்கும் வழக்கம் உண்டு. இவற்றையே தோரண தீபங்கள் என்பார்கள். இவற்றைச் சர விளக்குகள் என்றும் அழைப்பர். விளக்கழகால் பெயர்பெற்ற தலம் திருமறைக்காடு. இங்கே ஏழு இடங்களில் தோரண தீபங்கள் உண்டு. முதல் தீப மாலைக்கு `லிங்க தோரணம்’ என்றே பெயர்.

தீபமாலை

இறைவனின் திருவுருவத்துக்கு முன்பாக அரைசட்ட வடிவில் சட்டத்தைப் பொருத்தி, அதில் வரிசையாக விளக்கேற்றுவர். மாலை போன்று திகழும் இந்த அமைப்பை `தீபமாலை’ என்பார்கள். ஸ்வாமிக்குப் பின்புறமும் இவ்வாறு அமைப்பது உண்டு.

16 வகை தீபங்கள்

காரண ஆகமம், 16 வகை பூஜையின் அங்கங்களை விளக்குகிறது. அவற்றில் ஒன்று தூப, தீபம் சமர்ப்பித்தல். இதையொட்டி 16 வகை தீபங்கள் விளக்கப்படுகின்றன. அவை: புஷ்ப தீபம், புருஷாமிருக தீபம், நாக தீபம், கஜ தீபம், வியாக்ர தீபம், ஹம்ச தீபம், வாஜ்ய தீபம், ஸிம்ஹ தீபம், சூல தீபம், துவஜ தீபம், ரிஷப தீபம், பிரம்ம தீபம், குக்குட தீபம், கூர்ம தீபம், ஸ்ருக் தீபம், சக்தி தீபம்.

(இவற்றில் சில இங்கே...)

தீபம் போற்றி... திருவே போற்றி!

மண்டை விளக்குகள்

மாவிளக்கு, எலுமிச்சை தீபம் போன்று பிரார்த்தனை வகை விளக்குகளில் ஒன்று இது. தூய மண்சட்டியைக் கழுவிக் காயவைத்து, அரிசி மாவுடன் நாட்டுச்சர்க்கரையைக் கலந்து அதில் இடுவார்கள். மையத்தில் குழி செய்து நெய்யூற்றி தீபம் ஏற்றுவர். இதை ஆராதித்து தலையில் சுமந்தபடி வலம் வந்து வழிபடுவர். இதற்கு `மண்டை விளக்கெடுத்தல்’ எனப் பெயர்.

ஜலதீபங்கள்

ஓடும் நீரில் விளக்குகளை ஏற்றி மிதக்கவிடுவார்கள். இதை `ஜலதீபங்கள்’ என்பர். ஆடிப்பெருக்கின்போது, ஓலைகளால் சிறு சப்பரங்கள் போன்று செய்து, அதில் தீபங்களை ஏற்றிவைத்து, காவிரியில் மிதக்கவிடும் வழக்கம் உண்டு. காசியில் தினமும் கங்கைக்கு ஆராதனை நிகழும். அப்போது அன்பர்கள் ஜலதீபம் விடுவார்கள்.

படங்கள் உதவி : விளக்கு கடை, போரூர்,சென்னை.