கட்டுரைகள்
Published:Updated:

`மனதுக்கு மூன்று மருந்து!’

`மனதுக்கு மூன்று மருந்து!’
பிரீமியம் ஸ்டோரி
News
`மனதுக்கு மூன்று மருந்து!’

``கவனமாக எடுத்துச் செல். கீழே போட்டு உடைத்தாய் என்றால் தண்டனை கிடைக்கும்’’ என்றார்.

அடர்ந்த காடு அது. பகைவர்களால் துரத்தப்பட்டுக் கொண்டிருந்தான் ஒருவன். அவர்களிடம் சிக்கிக்கொண்டால், அவன் உயிர் தப்பிப்பது கடினம். காலனின் தூதர்களைப் போன்று அவர்கள் தங்களின் குதிரைகளில் துரத்திவர, மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான் அந்த மனிதன்.

குதிரைகளின் குளம்படி ஓசை, அவனுக்கு இடியோசை போன்று இருந்தது. வனப்புறத்தில் ஓடிக்கொண்டிருந்தவன் அவனையும் அறியாமல், அருகிலிருந்த மலைப்பாதையில் ஓடத் தொடங்கினான். அவர்களும் விடாமல் துரத்தினார்கள்.

இதோ மலை விளிம்புக்கே வந்துவிட்டான். இனி ஓடுவதற்குப் பாதை இல்லை. அதல பாதாளமே தெரிந்தது. அதேநேரம் குதிரைகளின் கனைப்பொலியும் மிக அருகில் கேட்டது. `வேறு வழியில்லை; குதித்துவிட வேண்டியதுதான்’ என்று கருதியவன் குதித்துவிட்டான். நல்லவேளையாக மரக்கிளை ஒன்று கைகளில் அகப்பட பிடித்துக்கொண்டான். ஆனாலும் ஆபத்து முற்றிலும் நீங்கிவிடவில்லை. இவன் தரையில் குதித்தால் கடித்துக்குதறிவிட, அங்கே இரண்டு சிங்கங்கள் காத்திருந்தன.

`மனதுக்கு மூன்று மருந்து!’

மேலே நோக்கினான்... அங்கே வில்லில் நாணேற்றி, இவனை நோக்கி அம்பு தொடுக்கக் குறிபார்த்துக்கொண்டிருந்தார்கள் பகை வர்கள். அதேநேரம் மரக்கிளையில் ஏதோ நெளிவது போன்று தெரிந்தது. சந்தேகமே இல்லை... அதுவொரு விஷப்பாம்புதான்.

இப்படியான ஆபத்துகளால் அவன் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த தருணத்தில் மரத்தில் கூடுகட்டியிருந்த தேன்கூட்டிலிருந்து வழிந்த ஒரு சொட்டுத் தேன் அவன் வாயில் விழ, அதன் தித்திப்பைச் சுவைத்தவன் `ஆஹா...’ என்றானாம்!

இப்படித்தான் நம்மில் பலரும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தற்காலிக சந்தோஷத்தில் திளைத்துப்போகிறோம்; கேளிக்கைகளில் மனம் லயித்துவிடுகிறோம். தவறான பழக்கவழக்கங்களுக்கும் சிலர் ஆளாகிவிடுகிறார்கள்.

கேளிக்கைகளைச் சிலர் பிரச்னைகளை மறப்பதற்கான மருந்தாகக் கருதுகிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள்... மது, புகைப் பழக்கம் போன்றவற்றால் `மைண்ட் ரிலாக்ஸ் ஆகிடும்’ என்று காரணம் சொல்வார்கள். தவறான போக்கு இது. இந்த நிலை உங்களை மேன்மேலும் சிக்கல்களுக்கு ஆளாக்குமே தவிர, ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தீர்வைத் தேடித் தராது.

மேற்படிப்போ, செய்யும் தொழிலோ, பணியோ... நாம் எந்தச் செயலைச் செய்தாலும் அதில் சிரத்தையுடன் மனதைச் செலுத்தி, முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யவேண்டும். கேளிக்கைகள் சிரத்தையை நீர்த்துப்போகச் செய்துவிடும். நம் சிந்தனையைச் சிதறடித்துவிடும்.

`மனதுக்கு மூன்று மருந்து!’

துல்லியத் தன்மையுடன் இலக்கை வென்றடைய நம் எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயணிப்பது மிக மிக அவசியம். எண்ணத்தில் ஒன்றிருக்க, சொல்லும் செயலும் வேறொன்றை வெளிப்படுத்தினால், தோல்விகளே பரிசாகக் கிடைக்கும். வீண் கேளிக்கைகளும் வேண்டாத பழக்கவழக்கங்களும் மேற்காணும் மூன்றையும் வெவ்வேறு பாதைகளிலேயே பயணிக்க வைத்துவிடும்.

எனில், பிரச்னைகளாலும் வேலைப்பளுவாலும் சஞ்சலம் கொள்ளும் - சோர்வடையும் மனதுக்கு மருந்துதான் என்ன?

‘எப்போதெல்லாம் மனம் நிலையற்று அலைகிறதோ, அப்போது மனதை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’ என்று கீதையில் வழிகாட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா. இதற்கு தியானம், யோகா போன்ற சாதனங்கள் உதவும். ஆனால், இவற்றைக் கடைப்பிடிப்பது எல்லோருக்கும் சாத்தியமா?

வைராக்கியத்துடன் கடைப்பிடிக்கத் தொடங்கினால், எதுவும் சாத்தியமே!

ஒருவேளை `இந்தப் பயிற்சிகள் எல்லாம் நமக்குச் சாத்தியம் இல்லை... கடினம்’ என்று தோன்றுகிறதா? எனில், உங்களுக்காகவே மூன்று எளிய வழிகளைச் சொல்லித் தந்துள்ளனர் பெரியோர்கள்.

முதலாவது, தினமும் இரவில் படுக்கச்செல்லுமுன் உங்கள் மனதோடு பத்து நிமிடங்களேனும் அளவளாவுங்கள். அந்தத் தினத்தில் நீங்கள் செய்த காரியங்கள், மேற்கொண்ட முயற்சிகள், நடவடிக்கைகள் யாவும் சரியானவைதானா? அலுவலரிடம் கோபித்துக்கொண்டேனே... அதிகாரியிடம் முரண்பட்டேனே... என் வாடிக்கையாளரைக் கடிந்துகொண்டேனே... இவை சரிதானா என்று மனதிடம் கேளுங்கள்.

`மனதுக்கு மூன்று மருந்து!’

மாலைக்குமேல் உணர்ந்த சோர்வுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று மனதிடமே விசாரியுங்கள். வீட்டுக்கான கடமைகளில் என் தரப்பில் ஏதேனும் குறைகள் உண்டா என்று விவாதம் நிகழ்த்துங்கள்... மெள்ள மெள்ள மனதின் குரல் உள்ளுக்குள் ஒலிக்கும். உங்கள் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்; பல பிரச்னைகளுக்கான தீர்வும் புலப்படும். ஒருவகையில் தியானத்தின் ஆரம்ப நிலையும் இதுதான்!

இரண்டாவது வழி... நீங்கள் கைக்கொண்டிருக்கும் முயற்சி அல்லது வேலையில் சோர்வோ மனத்தளர்ச்சியோ ஏற்படும் நேரங்களில், வேறொரு சிறு வேலையைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கவனம் செலுத்துங்கள். அந்தச் சிறிய வேலையை முடிக்கும்போது உங்களுக்கு ஏற்பட்டிருந்த மனத்தளர்ச்சியும் சோர்வும் விடைபெற்றிருப்பதை உணர்வீர்கள். பிறகு உற்சாகத்தோடு பழைய வேலையில் கவனம் செலுத்தலாம்.

மூன்றாவது வழி எல்லோருக்கும் தெரிந்ததுதான்... புத்தகங்கள் வாசித்தல்! பிரச்னைகளால் அழுத்தப்படும் தருணங்களில் சிந்தனைப் புலன்கள் ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்கும். அப்படியான தருணங்களில் அவற்றுக்குப் புதுவித மலர்ச்சியைத் தரும் சூட்சுமம், உங்களுக்குப் பிடித்த புத்தகங்களுக்கு நிச்சயம் உண்டு!

இப்படியாக நம் மனதை மலர்ச்சியாக வைத்துக்கொள்ளும்போது, நம் சிந்தனை சிறக்கும்; செயல்கள் வெற்றியைச் சந்திக்கும். எவ்விதப் பிரச்னைகளையும் எளிதில் கையாளும் வல்லமை பிறக்கும்; ஜென் குரு இக்கியு என்பவரைப்போல!

ஜென்குரு இக்கியு இளைய பருவத்தில் ஒரு மடத்தில் சீடராக இருந்தபோது நிகழ்ந்த சம்பவம் இது.

தேநீர்க் கோப்பை ஒன்றைச் சுமந்தபடி வந்தார் இக்கியு. வாயிற்படியில் கால் தவறி, கோப்பை நழுவி விழுந்து உடைந்துபோனது. தேநீர் தரையெங்கும் சிந்திப் பரவியது. சக சீடர்கள் இக்கியுவைக் கேலி செய்தார்கள். `குருவுக்கான தேநீர் அது. அவர் கோபம் கொள்வார். அவரின் தண்டனைக்கு ஆளாகப்போகிறாய்’ என்று பயமுறுத்தவும் செய்தார்கள்.

இக்கியு சலனப்படவில்லை; வருத்தம் கொள்ளவில்லை. நிலைமையைச் சமாளிக்க இயலும் என்ற நம்பிக்கையும் தைரியமும் அவரிடம் இருந்தது. குருவிடம் சென்றார். ஒரு கேள்வியை முன்வைத்தார்.

``மரணத்தை எவரும் விரும்புவதில்லை. ஆனால், விரும்பாத ஒன்றை அவர்கள் கட்டாயம் ஏற்கும்படி ஆகிறதே... ஏன் அப்படி... எனக்குப் புரியவில்லையே?’’ என்று கேட்டார்.

``மரணம் திணிக்கப்பட்டதாக இருந்தால் தான் அது கட்டாயம் ஆகும். அது திணிக்கப்பட்டதல்ல. பிறப்பைப் போலவே இறப்பும் இயல்பான விஷயம். பிறந்தவர் ஒருநாள் இறப்பது நியதி. அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை’’ என்றார் குரு.

உடனே இக்கியு சொன்னார்: ``மிகச் சரி... உங்களுடைய தேநீர்க் கோப்பை இப்போது தவிர்க்கமுடியாமல் செத்துப்போனது.

வருத்தப்படாதீர்கள்!’’

தேநீர்க் கோப்பை என்றதும் வேறொரு கதையும் நினைவுக்கு வருகிறது. அவரும் ஒரு ஜென் குரு. சீடரிடம் கோப்பை ஒன்றைக் கையளித்தவர், ``கவனமாக எடுத்துச் செல். கீழே போட்டு உடைத்தாய் என்றால் தண்டனை கிடைக்கும்’’ என்றார்.

``சீடனும் மிகக் கவனமாகக் கையாளுவேன்’’ என்றான். ஆனால் அவன் நகருமுன் அவன் தலையில் ஓங்கிக் குட்டினார் குரு.

சீடனுக்கு வலி பொறுக்கவில்லை. தலையைத் தடவிக்கொண்டே கேட்டான்... ``நான்தான் கோப்பையை உடைக்கவில்லையே. பிறகு ஏன் குட்டினீர்கள்?’’

ஜென் குரு சொன்னார், ``உடைத்தபிறகு குட்டி என்ன பயன்?!’’