கட்டுரைகள்
Published:Updated:

அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!

அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!

`எல்லாம் அவன் பார்த்துப்பான்’ என்று சும்மா இருப்பது சோம்பேறிகளின் செயல். பக்த மார்க்கண்டேயன், சாவித்ரி போன்றோர், தங்களின் கதியை நினைத்து விதியை நொந்துகொள்ளவில்லை;

நண்பர்கள் இருவர் நீண்ட பயணத்தில் இருந்தார்கள். வழியில் ஒரு வனப்பகுதி. ஒற்றையடிப் பாதை. பாதியில் களைத்துப்போனார்கள். கடும்பசி வயிற்றைக் கிள்ளியது. வழியில் எதுவும் கிடைக்கவில்லை. `கடவுளே! ஏதேனும் உணவுக்கு வழிகாட்டு!’ ஒருவன் வேண்டிக்கொண்டான். மற்றவனுக்கும் இப்படியான பிரார்த்தனை ஒப்புதலாகவே இருந்தது.

காரணம், சுற்றிலும் இருள் சூழ்ந்த அந்த இடத்தில் கடவுளைத் தவிர உதவிக்கு வேறு யாரும் இல்லை! மிகச் சோர்வுடன் மேலும் கொஞ்ச தூரம் அவர்கள் பயணித்திருப்பார்கள். எதிரில் முதியவர் ஒருவர் எதிர்ப்பட்டார். கைவிளக்கால் வெளிச்சம் பாய்ச்சி, இவர்கள் பயணிகள் என்பதை அனுமானித்துக் கொண்டார்.

முகத்தைப் பார்த்ததுமே நிலைமையைப் புரிந்துகொண்டவர், ‘‘என்ன... பசியா?’’ என்று கேட்டார். இருவரும் பரிதாபமாக, `ஆம்’ என்று தலையசைத்தார்கள்.

‘‘சரி வாங்க... நான் ஒரு ஏற்பாடு பண்ணுறேன்!’’ என்றவர், இருவரையும் அருகிலிருக்கும் ஒரு கட்டடத்துக்கு அழைத்துச் சென்றார். உள்ளே இரண்டு தனித்தனி அறைகள்.

``இது என் வீடுதான். நீங்கள் இருவரும் இரண்டு அறைகளில் தங்கிக்கொள்ளலாம். உங்கள் பசியைப் போக்கிக்கொள்ளலாம். நான் இரவுக் காவலுக்குச் செல்கிறேன். காலையில் சந்திக்கிறேன்’’ என்று கூறிச் சென்றார்.

மறு நாள் விடிந்தது. பெரியவர் வந்தார். முதல் அறைக் கதவைத் திறந்தார். அங்கே இருந்தவன் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறைக் கதவைத் திறந்தார். அவனோ வயிற்றில் ஈரத் துணியைச் சுற்றிக்கொண்டு பசியோடு உட்கார்ந்திருந்தான்.

முதியவரைக் கண்டதும், ``இப்படி ஏமாற்றிவிட்டீர்களே....’’ என்று கோபத்துடன் இரைந்தான்.

‘‘இருவருக்கும் ஒரே மாதிரி அறைதான் ஒதுக்கினேன்... உன்னோடு வந்தவன் நிம்மதியாகத் தூங்குகிறானே... நீ சாப்பிடவில்லையா?’’

‘‘இங்கே சாப்பிட ஏதுமில்லையே...’’

‘‘அவன் மட்டும் எப்படிச் சாப்பிட்டான்?’’

‘‘தெரியலையே...’’

‘‘வா... கேட்போம்!’’

இருவரும் சென்று விசாரித்தார்கள். அவன் சொன்னான், ‘‘இங்கே வந்து பார்த்தேன்... சமையலுக்கு வேண்டிய எல்லாம் இருந்தது. சமைத்தேன். சாப்பிட்டேன்!’’

பட்டினியோடு இருந்தவனிடம் முதியவர் சொன்னார்... ‘‘கேட்டாயா? உனது அறையிலும் எல்லாம் இருந்தன. நீ சமைக்கவில்லை... ஆகவே சாப்பிடவில்லை!’’

அவன் அசடு வழிந்தான். ‘‘ஹி! ஹி! நான் சாப்பாடு ரெடியா இருக்கும் என்று பார்த்தேன்!’’ என்று சொல்லி வயிற்றைத் தடவிக்கொண்டான்.

சட்டென்று முதியவர் மறைந்துவிட, ஓர் அசரீரி மட்டும் கேட்டது. ‘‘மனிதர்களே! உங்களிடம் சாவியைக் கொடுக்க வேண்டியது எனது வேலை. சமைக்க வேண்டியது உங்கள் வேலை!’’

`எல்லாம் அவன் பார்த்துப்பான்’ என்று சும்மா இருப்பது சோம்பேறிகளின் செயல். பக்த மார்க்கண்டேயன், சாவித்ரி போன்றோர், தங்களின் கதியை நினைத்து விதியை நொந்துகொள்ளவில்லை; முயற்சி எனும் ஆயுதத்தை ஏந்தி விதியை வென்றார்கள். இரண்டு இறக்கைகளையும் அசைத்தால்தான் பறவை பறக்க இயலும். நமக்கும் இரண்டு இறக்கைகள் துணைக்கு உண்டு. ஒன்று தெய்வ நம்பிக்கை; மற்றொன்று முயற்சி.

அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!

மேற்காணும் கதையில் வருவதுபோல், இறைவன் நமக்கான வாய்ப்புகளை நம்மைச் சுற்றிலும் வாரியிறைத்திருக்கிறான். ஆனால், நாம்தான் அவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்வதே இல்லை.

வெற்றிபெற்ற ஆன்றோர்களின் வாழ்க்கைப் பக்கத்தைப் புரட்டினால், அவர்கள் விடாமுயற்சியுடன் சாதித்திருப்பதை அறிய முடியும். வாய்ப்பைத் தேடுவதில் மட்டுமல்ல, புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் அவர்கள் சளைத்ததில்லை என்பது தெரியவரும்.

அமெரிக்கா முதலான மேலை நாடுகளில் நிறத்தால் இன பேதமும் வெறுப்பும் உச்சத்தில் இருந்த காலம்.

ஒருமுறை, புக்கர் வாஷிங்டன் என்ற ஆப்ரோ அமெரிக்க இனத் தலைவர் தென்கரோலினா மாகாணத்தில் பிரசங்கம் செய்யவேண்டி இருந்தது. ரிக்‌ஷாக்காரர் ஒருவரை அழைத்து, குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டுக்கொண்டார்.

‘‘கறுப்பினத்தவருக்கு நான் வண்டி ஓட்டுவதில்லை’’ என்று அந்த ரிக்‌ஷாக்காரர் மறுக்க, ‘‘அப்படியென்றால் சரி... நான் உன்னை வைத்து வண்டி ஓட்டுகிறேன்’’ என்று கூறி அவனை உள்ளே உட்கார வைத்து, அவரே வண்டியைச் செலுத்தினார். `குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும்’ என்பதுதான் அவரது லட்சியம். முட்டுக்கட்டைகளால் அவர் சோர்ந்துபோக வில்லை.

அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!

சாமானியர்கள் தோல்விக்குக் காரணம் தேடிக்கொண்டிருப்பார்கள். சாதனையாளர்களோ தோல்வி தரும் படிப்பினைகளை, தங்களின் வெற்றிக்குக் காரணமாக்கிக் கொள்வார்கள். படிப்பு, வேலை, பிசினஸ் எதுவாக இருந்தாலும் நம் இலக்கை அடை வதற்கான வெற்றிப் பயணத்துக்குத் தொடர் முயற்சிகள் மிக அவசியம்.

`இடைவிடாமல் வேலை செய்’ என்று போதிக்கும் சுவாமி விவேகானந்தர், இளைஞர்களுக்கு வேறொரு முக்கியமான உபதேசத்தையும் தந்துள்ளார். `சுதந்திரத்தின் மூலமாகச் செயல்புரியுங்கள். அன்பின் வழியாக வேலை செய்யுங்கள்!’ என்கிறார்.

ஆம்! சுயநலத்துடன் செய்யும் வேலை, அடிமைகளின் மனோபாவத்துடன் இருக்கும். விளைவுகள் முழுமையான ஆனந்தத்தைத் தராது. அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டு வரும்.

`அமைதியும், ஆராய்ந்து தெளியும் குணமும், குளிர்ந்த சிந்தனையும், மிகுந்த கருணையும், அன்பும் உடையவன்தான் உலகுக்கு நன்மை செய்கிறான்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

வெற்றியின் பயணத்தில் விட்டுக்கொடுத்தலும், சில நேரம் பணிந்து போதலும், பிறரால் தாழ்த்தப்படும்போது மனம் தளராமையும் அவசியம். அன்புடன் கலந்த செயல்பாடுகள் இந்தப் பண்புகளுக்கு இடம்கொடுக்கும்.

அன்பின் செயலால் ஆனந்தம் பெறுங்கள்!

மனவேற்றுமையால் பிரச்னைகளைப் பெரிதாக்கி, நல்லமுறையில் சென்றுகொண்டிருந்த கூட்டுத்தொழிலையே நிறுத்திவிடும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் நண்பர்கள் இருவர். ஒருநாள் அவர்களைத் தேடி சொந்த ஊர்ப் பெரியவர் ஒருவர் வந்தார்.

இருவரையும் அருகில் அழைத்தார். ‘‘இப்போது நமக்குள் ஒரு போட்டி. நீங்கள் ஜெயித்துவிட்டால், உங்கள் இஷ்டப்படி பிரிந்துவிடுங்கள். தொழிலையும் முடக்கிப்

போட்டுவிடுங்கள். நான் ஜெயித்துவிட்டால், நான் சொல்கிறபடி நீங்கள் கேட்க வேண்டும்!’’ என்றார். இருவரும் ஒப்புக்கொண்டார்கள்.

இரண்டடி நீளமுள்ள மெல்லிய நூலைக் கொண்டுவரச் சொன்னார் பெரியவர். கொண்டு வந்தார்கள். ஒருமுனையைத் தான் பிடித்துக்கொண்டார். ‘‘மறுமுனையைச் சேர்ந்து இழுத்து, இந்த நூலை அறுத்துவிட வேண்டும். அவ்வளவுதான்!’’ என்றார்.

இருவரும் சம்மதித்தார்கள். இழுக்க ஆரம்பித்தார்கள். இந்தப் பக்கம் நின்ற பெரியவரோ, அவர்கள் இழுக்க இழுக்க அந்தப் பக்கம் நகர்ந்து போய்க்கொண்டே இருந்தார். அவர்கள் சுற்றி சுற்றி வந்தார்கள். இவரும் கூடவே சுற்றிச் சுற்றி வந்தார். அப்புறம் எப்படி நூல் அறுபடும்?!

நண்பர்கள் இருவரும் தோல்வியை ஒப்புக்கொண்டார்கள். பெரியவர் சொன்னார், ‘‘இவ்வளவுதான் வாழ்க்கை. விட்டுக் கொடுக்கத் தெரிந்தால், உறவு அறுந்துபோகாது!’’

முன்னேறும் முனைப்புடன் பொதுநலன் கலந்த அன்பும் கூடிய செயல்பாடுகள் இத்தகைய பண்புகளையும், பரிசாகத் தொடர் வெற்றிகளையும் பெற்றுத் தரும்.