கட்டுரைகள்
Published:Updated:

`உள்ளே வெளியே!’

`உள்ளே வெளியே!’
பிரீமியம் ஸ்டோரி
News
`உள்ளே வெளியே!’

இப்போது துறவி புன்னகைத்தபடி சொன்னார். ``இந்தக் குடுவை உங்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. பெரிய கற்கள் உங்கள் முக்கியமான பெரிய விருப்பங்கள், லட்சியங்களைக் குறிப்பவை

ஆசை மட்டும் இல்லையென்றால் புதியன எதுவும் தோன்றியிருக்காது. மனிதன் வேட்டையில் இறங்கியதும், பின்னர் காடு களைந்ததும், கழனி கண்டதும், நாடு அடைந்ததும் ஆசை எனும் விருப்பத்தால் அல்லவா? ‘`ஆசை மட்டும் இல்லையெனில், ‘அசத்’திலிருந்து ‘சத்’ வந்திருக்க முடியாது; இருளில் இருந்து ஒளிக்கு வந்திருக்க முடியாது’’ என்கின்றன ஞானநூல்கள். முன் தோன்றியது எது என்று ஆய்ந்தறிந்து சொல்லும் ரிக் வேதம், ‘மூச்சுக்கும் முன்னால் தோன்றியது காமம்’ எனும் முடிவுக்கு வருகிறது. காமம் என்றால் ஆசை - விருப்பம்.

ஒருவன் அவநம்பிக்கையைத் தவிர்த்து தன்னுள் நம்பிக்கையை விதைக்கவும் அவன் விருப்பமே காரணமாகிறது எனலாம். விருப்பமே ஒரு வினைக்கு அடித்தளம் இடுகிறது என்பதில் ஐயம் இல்லை. ஆனால் நம்முடைய அந்த விருப்பங்கள் எப்படி இருக்க வேண்டும்? மிக மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும்.

`உள்ளே வெளியே!’

ஞானத்தில் சிறந்த துறவி அவர். ஒருநாள் உபதேச நேரம். மரத்தடியில் தான் அமர்ந்திருந்த திண்ணையில், காலியான மரக்குடுவை ஒன்றை வைத்திருந்தார். அதற்கான காரணத்தை அறியும் ஆவலுடன், சீடர்கள் அவருக்கு எதிரில் அமர்ந்திருந்தார்கள்.

துறவி, கற்களை எடுத்துக் குடுவைக்குள் போட ஆரம்பித்தார். குடுவை நிரம்பியதும் ``இந்தப் பானை எப்படியுள்ளது?’’ என்று கேட்டார். ``நிரம்பியுள்ளது’’ என்றார்கள் சீடர்கள்.

உடனே, முன்பு போட்டவற்றைவிட அளவில் சிறிய கூழாங்கற்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குடுவைக்குள் போட்டுக் குலுக்கினார். ஏற்கெனவே போடப்பட்டிருந்த பெரிய கற்களின் இடுக்குகளில் கூழாங்கற்கள் அடைக்கலமாகியிருந்தன. இன்னொரு கூழாங்கல்லைப் போட முடியாத அளவுக்குக் குடுவை நிரம்பியது.

‘`இப்போது இந்தக் குடுவை நிரம்பிவிட்டதா?’’ என்று அவர் கேட்க, ‘`முழுவதுமாக நிரம்பிவிட்டது’’ என்றனர் சீடர்கள்.

துறவியானவர், அடுத்து ஒரு காரியம் செய்தார். அருகில் தரையில் இருந்து மணலை அள்ளி குடுவைக்குள் போட ஆரம்பித்தார். பின்னர் குடுவையை மீண்டும் அவர் குலுக்கிவிட, மணல் எல்லா இடைவெளிகளிலும் சென்று நிறைந்தது.

‘`இப்போது ஜாடி எப்படியுள்ளது?’’

‘`கொஞ்சமும் இடமில்லாமல் நிரம்பிவிட்டது!’’ என்றனர் சீடர்கள்.

இப்போது துறவி புன்னகைத்தபடி சொன்னார். ``இந்தக் குடுவை உங்களின் வாழ்வைப் பிரதிபலிக்கிறது. பெரிய கற்கள் உங்கள் முக்கியமான பெரிய விருப்பங்கள், லட்சியங்களைக் குறிப்பவை. கூழாங்கற்களோ அவசியமான சிறிய சிறிய ஆசைகளைக் குறிப்பவை. மணலோ அநாவசியமான விருப்பங்கள். நீங்கள் முதலில் குடுவையை மணலால் நிரப்பிவிட்டால், பிறகு அதில் கற்களுக்கும் கூழாங்கற்களுக்கும் இடமிருக்காது’’ என்றார்.

அப்படித்தான், நிலையற்ற தற்காலிக இன்பத்தைத் தரும் சிறு சிறு ஆசைகளால், அவற்றை அடைவதற்கான முனைப்புகளால் உங்கள் வாழ்க்கையை நிரப்பிக்கொண்டால், அத்தியாவசிய ஆசைகள் மற்றும் பெரிய விருப்பங்களுக்கு இடம் இல்லாமலேயே போய்விடும்!

`உள்ளே வெளியே!’

கிரேக்கத்தின் சிந்தனையாளர் சாக்ரட்டீஸ், தினமும் கடைத் தெருவுக்குச் சென்று, ஒவ்வொரு கடையிலும் உள்ள பொருள்களை உற்றுப்பார்ப்பார். ஆனால், எதையும் வாங்கியதில்லை. ஒரு நாள் கடைக்காரன் ஒருவன், ‘ஒரு நாளும் ஒரு பொருளும் நீங்கள் வாங்கி நான் பார்த்ததில்லை. பிறகு ஏன் தினமும் வருகிறீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு, ‘எவ்வளவு பொருள்கள் இல்லாமல் நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று அறிந்து கொள்ளவே அன்றாடம் வருகிறேன்’ என்றார் சாக்ரட்டீஸ்.

ஆம், ஞானிகளின் விருப்பமெல்லாம் பெரிய லட்சியங்களை நோக்கியே இருக்கும். நீங்கள் உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் சின்னச் சின்ன இலக்குகளுக்காகச் செலவழித்தால், பெரிய நோக்கங்களுக்கு இடம் இல்லாமலே போய்விடும்.

இங்ஙனம், உயர்ந்த விருப்பங்கள் உயர்ந்த செயல்களைத் தோற்றுவிக்கும் என்றால், அந்தச் செயல்கள் உன்னத வெற்றியைப் பெற உதவுவது, அனுபவம். அனுபவமே நமக்கான சத்குரு.

நண்பர்கள் இருவர் வேட்டையாடுவதில் விருப்பம் உள்ளவர்கள். ஒரு நாள், சிறிய விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வேட்டையில் நான்கு காட்டுப்பன்றிகள் கிடைத்தன. அவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டனர்.

விமான ஓட்டுநர் சொன்னார், ‘`ஐயா, நான்கு பன்றிகளின் எடையையும் இந்தச் சிறிய விமானம் தாங்காது. வேண்டுமானால் இரண்டை ஏற்றிக்கொள்ளலாம்!’’ என்றார்.

உடனே இளைஞர்கள், ‘`கடந்த மாதமும் எங்களுக்கு இதே போல் நான்கு காட்டுப்

பன்றிகள் கிடைத்தன. அப்போது எங்களுடன் வந்த விமான ஓட்டுநர், நான்கையும் ஏற்றிக் கொள்ள சம்மதித்தாரே!’’ என்றனர்.

‘`ஓ... அப்படியென்றால் சரி! இப்போதும் ஏற்றிக்கொள்ளுங்கள்’’ என்றார் ஓட்டுநர். இளைஞர்கள், காட்டுப்பன்றிகளை ஏற்றிக் கொண்டனர். புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, பாரம் தாங்காமல் தடுமாறிய விமானம், வயல்வெளியில் விழுந்தது.

உள்ளே இருந்து வேட்டைக்கார நண்பர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்தனர். ஒருவன் கேட்டான் ‘`இப்ப நாம எந்த இடத்துல விழுந்திருக்கோம்?’’

`உள்ளே வெளியே!’

அடுத்தவன் பதில் சொன்னான் ‘`போன மாசம் விழுந்தோமே... அதுக்குப் பக்கத்து வயல்லதான்!’’

அனுபவங்கள் நமக்குப் பாடமாக வேண்டும். இல்லையெனில், இப்படித்தான் அடிக்கடி விழவேண்டியிருக்கும்!

சிலருடைய அனுபவங்கள் விநோதமானவை. நண்பர்கள் இருவர் நடைப்பயணமாகக் காட்டுவழியே சென்றுகொண்டிருந்தார்கள். மலையடிவாரத்து அருகில் பெரிய கரடி ஒன்று எதிர்ப்பட்டது. அவ்வளவுதான்... மரம் ஏறும் அனுபவம் உள்ள ஒருவன், சட்டென்று அருகிலிருந்த மரத்தில் ஏறிக்கொண்டான். மற்றவனுக்கோ மரம் ஏறிப் பழக்கமோ, அனுபவமோ இல்லை. ஆகவே அவன் அருகிலிருந்த குகைக்குள் நுழைந்துவிட்டான். கரடி மரத்தடிக்கு வந்து படுத்துக்கொண்டது.

இரண்டு - மூன்று நிமிடங்கள் கழிந்திருக்கும் குகைக்குள் சென்றவன், மெள்ள வெளியே தலையை நீட்டி எட்டிப்பார்த்தான். கரடி நகரவில்லை; மீண்டும் உள்ளே சென்றுவிட்டான். அடுத்தும் இரண்டே நிமிடங்களில் வெளியே வந்து எட்டிப்பார்த்தான். கரடி அங்கேயே படுத்திருந்தது. உள்ளே சென்றுவிட்டான்.

அதன் பிறகும் சில நிமிடங்களிலேயே மூன்றாவது முறையாக வெளியே எட்டிப் பார்த்தான். இப்போது மரத்தில் இருந்தவனுக்கு ஆத்திரம் வந்தது; கத்தினான்:

``அடேய்! ஒரேடியாக கரடி போனதும் வெளியே வந்து தொலையேன். அதுக்குள்ள என்ன அவசரம்?’’

இதற்குக் குகைக்காரன் பதில் சொன்னான்: ``நானும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா என்ன பன்றது... உள்ளேயும் ஒரு கரடி இருக்குதே!’’

உயர்ந்த நோக்கங்கள், மேலான அனுபவங்கள் இல்லாதவர்களுக்கு வாழ்க்கை உள்ளே, வெளியே எனப் போராட்டமாகவே கழியும்!