கட்டுரைகள்
Published:Updated:

நான் ஒரு முட்டாளுங்க!

நான் ஒரு முட்டாளுங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
நான் ஒரு முட்டாளுங்க!

நம்மிடத்திலும் சக மனிதர்களிடத்திலும்தான் கடவுள் உறைந்திருக்கிறார். சற்று விலகி நின்று கவனித்தால், அந்த இறைத்தன்மையை தெளிவாக உணர முடியும்

பெரும் சமுத்திரத்தில் வசித்த சிறிய மீன் ஒன்றுக்கு, சமுத்திரம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள விருப்பம் பிறந்தது. நண்பர்களான சக மீன்களிடமும் விசாரித்தது. எவருக்கும் அது பற்றிய விவரம் தெரியவில்லை அல்லது சொல்லத் தெரியவில்லை.

சில நாள்கள் கழித்து பெரிய மீன் ஒன்று எதிரே வந்தது. பார்ப்பதற்கு அனுபவம் மிகுந்ததாகத் தெரியவே அந்த மீனிடம், ‘‘சமுத்திரம் எங்கே இருக்கிறது?’’ எனக் கேட்டது சிறிய மீன்.

சற்றே யோசித்த பெரிய மீன், ``நீ அங்கேதான் பிறந்தாய்; அங்கேதான் வளர்கிறாய்; அங்கேதான் மறையப்போகிறாய்’’ என்றது. இந்த பதில் திருப்தி அளிக்கவில்லை. ஆகவே, ``சரி... அது எங்கே இருக்கிறது?’’ எனக் கேட்டது. பெரிய மீனோ இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் நழுவிவிட்டது.

மீண்டும் சில நாள்கள் கழித்து, எதிர்பாராதவிதமாகக் கரையின் அருகில் வந்துவிட்டது சிறிய மீன். பெரிய அலை ஒன்றின் வீச்சில் கரையில் வந்து விழுந்தது. இப்போது அந்த மீனின் கேள்விக்கு பதில் கிடைத்தது... `இதுவரை நான் தேடிய சமுத்திரம் என் கண்ணெதிரில் தெரிகிறது.’

வேறோர் உண்மையும் புலப்பட்டது அந்த மீனுக்கு. ஆம்... `இருக்கிற வரையில் நாம் இருக்கிற இடம் நமக்கு எப்படித் தெரியும்... விலகி வெளியே வந்தால்தான் அதன் மகத்துவம் புலப்படும்’ என்பதுதான் அது!

கடவுள் குறித்த புரிதலும் அப்படித்தான். `அகம் பிரம்மாஸ்மி’ என்கின்றன ஞானநூல்கள். நம்மிடத்திலும் சக மனிதர்களிடத்திலும்தான் கடவுள் உறைந்திருக்கிறார். சற்று விலகி நின்று கவனித்தால், அந்த இறைத்தன்மையை தெளிவாக உணர முடியும். நாம் விலகுவது மட்டுமல்ல `நான்’ எனும் அகம்பாவமும் முற்றிலும் விலகவேண்டும்.

Iசுக முனிவர்
Iசுக முனிவர்

தன்னை உணர்ந்தவனே முழுமையானவன் என்பது அறிஞர்களின் வாக்கு. தான் யார், தன் நிலை என்ன, தகுதி என்ன என்பதை அறிந்துகொள்பவனிடத்தில் `நான்’ எனும் அகம்பாவம் இருப்பதில்லை என்கின்றன ஞான நூல்கள்.

சுகமகரிஷி பிரம்ம ஞானத்தைப் பெற விரும்பினார். தனது விருப்பத்தைத் தந்தை வியாசரிடம் தெரிவித்தார். ‘ஜனகரிடம் சென்றால் பிரம்ம ஞானம் கைகூடும்’ என்று வழிகாட்டினார் வியாசர். சுகமகரிஷி ஜனகரின் அரண்மனையை அடைந்தார்.

வாயில் காப்பாளனிடம், ``நான் சுக மகரிஷி வந்திருக்கிறேன் என்று மன்னனிடம் சொல்’’ என்றார். அவனும் ஜனகரிடம் சென்று விவரம் தெரிவித்தான். உடனே ஜனகர், ``உடன் வந்திருக்கும் இருவரையும் விலக்கிவிட்டு அவரை மட்டும் தனியே வரச் சொல்’’ என்று காவலனிடம் சொல்லி அனுப்பினார்.

காவலன் வாயிலுக்கு வந்து சுகமகரிஷியிடம் ஜனகர் கூறியதைச் சொன்னான். உடனே சுக மகரிஷி, ``நான் சுகன் வந்திருக்கிறேன் என்று சொல்லிப் பார்’’ என்றார்.

மீண்டும் ஜனகரிடம் வந்த காவலன் விஷயத்தைச் சொன்னான். ஜனகரோ புன்னகையோடு, ``உடன் வந்த இருவரில் ஒருவன் இன்னமும் அவருடன் இருக்கிறானே’’ என்று கூறி அனுப்பினார். இதை வாயில் காவலன் சொன்னதும் சுகர் புரிந்துகொண்டார். மன்னனிடம் தானே நேரில் செல்கிறேன் என்று அனுமதி பெற்று உள்ளே சென்றார். இவரைப் பார்த்ததும் ஜனகர், ``தங்களைத் தனியாக அல்லவா வரச் சொன்னேன்...’’ என்றார். உடனே சுகர் பணிவுடன் சொன்னார்... ``ஆம் மன்னா... சுகன் வந்திருக்கிறேன்’’ என்றார்.

`நான்’ எனும் செருக்கு காலியாகும் இடத்தில் பிரம்மம் தாமாகவே நிரம்பிவிடும் என்பதே ஜனகர் சுகருக்குப் போதித்த விஷயம்.

முழுமையானவர்கள் எப்போதும் தங்களை வெறுமையான பாத்திரமாகவே வைத்துக்கொள்வார்கள். அப்போதுதான் `ஞானம்’ எனும் அமிர்தம் தடையின்றி தமக்குள் நிரம்பும் என்பது அவர்களின் கணக்கு.

Iகாளிதாசன்
Iகாளிதாசன்

காளிதாசன் மகாகவி; பெரும் படைப்பாளி. காதலுக்கு ஒரு நாடகம் - `அபிஞ்ஞான சாகுந்தலம்’; நாட்டியத்துக்கு - `மாளவிகாக்னி மித்திரம்’; நிருத்தத்துக்கு - `விக்ரமோர் வசியம்.’ முருகப்பெருமானைச் சிறப்பிக்க, `குமாரசம்பவம்’; சூர்ய வம்சத்துப் பரம்பரையின் பெருமையைச் சொல்ல, `ரகுவம்சம்’; பருவகாலங்களின் சிறப்புகளை விவரிக்க, `ரிது சம்ஹாரம்’; பிரிந்த காதலர்களைத் தேற்ற, `மேகதூதம்’... இப்படிச் சிறப்புமிக்க காவியங்களைப் படைத்தவர், காளிதாசன்.

ஒருநாள் அவர் வயல்வெளி வழியே நடந்துகொண்டிருந்தார். பயணக் களைப்பால் அவருக்கு தாகம் மேலிட்டது. சுற்றுமுற்றும் பார்த்தார். அருகிலுள்ள கிணற்றில் பெண்ணொருத்தி தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தாள். இவர் அவளிடம் சென்று தாகம் தணிக்க, தண்ணீர் வேண்டினார்.

தருவதாகச் சொன்ன அவள், ``தாங்கள் யாரென்று தெரியாமல் எப்படி உதவுவது... தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளலாமே...’’ என்றாள்.

இந்த இடத்தில் காளிதாசனின் உள்ளத்தில் சற்று கர்வம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். `சாதாரணப் பெண்ணான இவளிடம் நாம் யாரென்று சொல்ல வேண்டுமா என்ன’ எனும் எண்ணம் தலைதூக்கியது. ஆகவே, ``நான் ஒரு பயணி என்று வைத்துக்கொள்ளேன்’’ என்றார்.

அந்தப் பெண்மணியோ, ``உலகில் இருவர் மட்டுமே பயணிகள். சூரிய, சந்திரர்தான் அவர்கள். அவ்விருவர் மட்டுமே இரவும் பகலெனப் பயணிப்பவர்கள்’’ என்றாள்.

அவளின் சாதுர்யம் காளிதாசனைக் கவர்ந்தது. அவர், ``சரி, என்னை விருந்தினர் என்று கருதலாமே...’’ என்றார்.

உடனே அவள், ``விருந்தாளிகளும் இருவர் மட்டுமே உண்டு. இளமையும் செல்வமும். இருவரும் விருந்தினர்போல் வந்துவிட்டு விலகிவிடுவார்கள்’’ என்றாள்.

நான் ஒரு முட்டாளுங்க!

இப்போது காளிதாசனுக்குள் சற்று எரிச்சல் ஏற்பட்டுவிட்டது. ``நான் மிகவும் பொறுமைசாலி’’ என்றார்.

இப்போது அந்தப் பெண் சிரித்தாள். ``இந்த உலகில் மரம், பூமி இருவர் மட்டுமே பொறுமைசாலி. அகழ்வாரையும் தாங்கும் நிலம்; கல்லால் அடித்தாலும் கனிகளைக் கொட்டிக்கொடுக்கும் மரம்’’ என்றாள். காளிதாசன் விடவில்லை. ``நான் ஒரு பிடிவாதக்காரன் என்று வைத்துக்கொள்’’ என்றார்.

பெண்ணும் தொடர்ந்தாள்... ``பிடிவாதக் காரர்களும் உலகில் இருவர் மட்டுமே உண்டு. நகமும் முடியும்தான் அவர்கள். வேண்டாம் என்று அகற்றினாலும் பிடிவாதத்துடன் வளர்ந்துகொண்டே இருப்பவர்கள் அவர்கள்தான்.’’

காளிதாசன் சற்று கோபத்துக்கு ஆளானார். ஆகவே, ``பெண்ணே! நான் ஒரு முட்டாள்... போதுமா?’’ என்றார்.

இப்போது அந்தப் பெண் வாய்விட்டே சிரித்துவிட்டாள். பிறகு சொன்னாள்: ``ஐயனே... முட்டாள்களும் இருவர் மட்டுமே உண்டு. ஒருவன் ஆளத் தெரியாத அரசன்; மற்றொருவன் அவனுக்குத் துதிபாடும் அமைச்சன்’’ என்றாள்.

அவள் சாதாரணமானவள் அல்ல என்பதை காளிதாசன் புரிந்துகொண்டார். கர்வத்தால் அவளைத் தவறாக எடைபோட்டுவிட்டோம் என்பது புரிந்தது. பணிந்து வணங்கினார். மீண்டும் அவர் நிமிர்ந்தபோது அந்தப் பெண் அங்கே இல்லை; சாட்சாத் கலைவாணிதேவியே நின்றிருந்தாள். ஆம்! கண்களில் நீர் பெருக, கர்வத்தைத் தொலைத்து, தெய்வத்தை தரிசித்தார் கவி காளிதாசன்!