
ஆனால் இன்றைக்கு நம்மில் பலரும் வாழும் கணத்தை இழந்து தவிக்கிறோம். நமக்குள் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்.
வயது முதிர்ந்த குருநாதர் ஒருவர் மரணப்படுக்கையில் கிடந்தார். இன்று மாலைக்குள் முக்தி பெற்றுவிடுவேன் என்று அவர் அறிவித்திருந்தார். ஆகவே, சீடர்களும் பக்தர்களும் அவரின் ஆசிரமத்தில் குழுமிவிட்டனர். நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. அந்த குருவோ எவரையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார்.
சற்று நேரத்தில் அவரின் பிரதான சீடன் சிறிய ஓலைப்பெட்டியுடன் வந்தான். அவனைக் கண்டதும் ``வந்துவிட்டாயா... வா... வா...’’ என்று ஆர்வத்துடன் வரவேற்றார் துறவி.
வந்தவன் சிறிய ஓலைப்பெட்டியில் இருந்த நாவல் கனிகளில் ஒன்றை எடுத்து குருவிடம் கொடுத்தான். எவ்வித நடுக்கமும் இன்றி அதைப் பெற்று வாயில் போட்டுச் சுவைக்க ஆரம்பித்தார் குரு. இந்தச் சூழலில் கண்ணீருடன் அருகில் நின்றிருந்த வேறொரு சீடன் அவரிடம் கேட்டான்.

``சுவாமி! இன்னும் சற்று நேரத்தில் எங்களையும் இந்த உலகையும் விட்டுப் பிரியப்போகிறீர்கள். என்றென்றும் நாங்கள் நினைவில் வைக்கும்படியாக ஓர் அறிவுரை வழங்குங்களேன்!’’
குரு புன்னகையுடன் ``அடடா, இந்த நாவல் பழம் எவ்வளவு அருமையான சுவையோடு உள்ளது!’’ என்று கூறியபடியே இறுதி மூச்சை விட்டார்.
`அந்தந்தக் கணத்தில் வாழுங்கள். கடந்துபோன நிமிடமும் வரப்போகும் நிமிடமும் நம் வசம் இல்லை. இன்று, இப்போது மட்டுமே நிஜம்’ என்பதுதான் அந்தக் குருநாதர் அவர்களுக்குச் சொல்லாமல் சொன்ன உபதேசம்.
ஆனால் இன்றைக்கு நம்மில் பலரும் வாழும் கணத்தை இழந்து தவிக்கிறோம். நமக்குள் இருப்பதை விட்டுவிட்டு, இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறோம்.
நண்பர்கள் இருவர் பாத யாத்திரை புறப்பட்டார்கள். இரவுப் பொழுது வந்தது. வழியில் மலையடிவாரத்தில் ஒரு குளத்துக்கு அருகிலுள்ள சத்திரத்தில் தங்கினார்கள். உணவு முடித்துப் படுத்தார்கள். மிக ரம்மியமான சூழல்தான் என்றாலும் அருகில் குளம் இருந்ததால், அந்த மையிருட்டு வேளையில் தவளைகளும் சில்வண்டுகளும் தொடர்ந்து சத்தம் எழுப்பிக்கொண்டே இருந்தன.

முதல் பயணியால் இதைச் சகிக்க முடியவில்லை. அவனுடைய தூக்கம் கெட்டது. புரண்டு புரண்டு படுத்துப் புலம்பிக்கொண்டிருந்தான். இரண்டாவது பயணி, ``நண்பனே, இரவு நேரம் என்றால் சில்வண்டுகளுக்கும் தவளைகளும் சத்தம் எழுப்பிக்கொண்டுதான் இருக்கும். அது அவற்றின் இயல்பு. அதை மாற்ற முடியாது. சத்தத்தைக் கவனிக்காதே. நிம்மதியாகத் தூங்கு’’ என்றபடியே, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டான்.
ஆனால், முதல் பயணியால் தூங்க முடியவில்லை. சில நிமிடங்கள் கழித்து எழுந்து உட்கார்ந்தவன், ‘`சேச்சே... இந்தச் சத்தத்தைக் கேட்டுக்கிட்டு என்னால் தூங்க முடியாதுப்பா’’ என்று முணுமுணுத்துவிட்டு சத்திரத்தின் வேறொரு பகுதிக்குச் சென்று படுத்தான். அங்கேயும் வேறு ஏதோவொரு சத்தம், அவனைத் தூங்க விடாமல் செய்தது. அங்கிருந்தும் வேறு இடத்துக்கு மாறினான். இப்படி அவன் படுக்கச் சென்ற இடமெல்லாம் வேறு வேறு சத்தங்கள் கிளம்பி வந்து அவனது நிம்மதியை இழக்கச் செய்தன. தூக்கம் என்பது முழுமையாகக் கெட்டுப்போனது!
அவனுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை?! அவன் அமைதியை வெளியே தேடியதால் வந்த வினை இது. இரண்டாமவனோ தனக்குள் அமைதியைக் கண்டான்; அற்புதமான உறக்கம் அவனுக்கு வாய்த்தது. நாமும் அமைதியை, ஆனந்தத்தை, நிம்மதியை நமக்குள் கண்டடைய வேண்டும். வாழ்வில் இன்பத்தின் ஊற்றுக்கண் நம்மிடமே உள்ளது!
`பாலைவனத்தில் குறிப்பிட்ட இடத்தில், எதிரில் தெரியும் மலையைப் பார்த்து நின்றால், உன் நிழல் விழும் இடத்துக்குக் கீழே பெரும் பொக்கிஷம் உள்ளதைக் கண்டடைவாய்’ என்று ஞானி ஒருவர் கூறிட, அதன்பொருட்டு ஒரு காலைப் பொழுதில் பாலைவனத்தை அடைந்தான் அந்த இளைஞன்.
குறிப்பிட்ட இடத்தில் எதிரில் தென்பட்ட மலையைப் பார்த்தபடி நின்றான். தரையில் மணலின் மீது அவனுடைய நிழல் நீண்டு மெல்லியதாக விழுந்தது. பொக்கிஷத்தைப் பெற அவன் தோண்ட ஆரம்பித்தான். நேரம் ஆக, ஆக சூரியன் மேலெழுந்துகொண்டிருந்தது. அவன் நிழல் சுருங்கிக்கொண்டே இருந்தது. அவனோ தோண்டிக்கொண்டே இருந்தான்.
நண்பகலில் அவன் நிழல் அவனின் காலடிக்குள் நுழைந்துகொண்டது. திடுமென நிழலைத் தேடியவன் நிழல் இல்லாததால் அழுது அரற்ற ஆரம்பித்தான். அப்போது அவ்வழியே முதியவர் ஒருவர் வந்தார். இளைஞனின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். அவனும் விவரித்தான். உடனே கடகடவெனச் சிரித்த முதியவர், ``நிழல் உன் காலுக்குக்கீழே இருக்கிறது. இப்போதுதான் பொக்கிஷம் இருக்கும் சரியான இடத்தைக் காட்டுகிறது. அது உனக்குள்ளே இருக்கிறது!’’ என்று கூறிச் சென்றார்.
உண்மைதானே... உயர்ந்த சிந்தனை, உன்னத உழைப்பு, நிகரற்ற தன்னம்பிக்கை இந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் நமக்குள் அல்லவா இருக்கின்றன. ஆனால் நாம் என்ன செய்கிறோம்? நம்மிடம் இருக்கும் குறைகளையே பெரும் பிரச்னைகளாகக் கண்டுகொண்டு பொக்கிஷங்களைக் காணத் தவறிவிடுகிறோம்!

நாற்காலியில் அமர்ந்தால் லெனினின் கால்கள் தரையைத் தொடாது. அந்த அளவுக்குக் குள்ளமானவர் அவர்.
இதை கவனித்த அவரின் நண்பர் ஒருவர், ‘‘நண்பரே, நாற்காலியில் அமரும்போது, கால்கள் தரையைத் தொடவில்லையே என்பதற்காக வருந்துகிறீர்களா?’’ என்று கேட்டார்.
உடனே லெனின் சொன்னார், ‘`கால்கள் தரையைத் தொட முடியாவிட்டால் என்ன? என் கைகள் வானத்தையே தொடும் வல்லமை கொண்டவை!’’
லெனினுக்கு மட்டுமா? உற்றுக் கவனித்தால் உங்களுக்குள்ளும் இத்தகைய நம்பிக்கை - தன்முனைப்பின் விதைகள் உண்டு. அவற்றை விருட்சமாக்கினால் வாழும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் உங்கள் வசம்தான். ஆகவே, நமக்குள் இருக்கும் நிறைகளைக் கவனிக்கப் பழகுவோம்.
கிராமத்து ஆசாமி ஒருவனுக்குத் தன் மனைவி குறித்து ஒரு மனக்குறை இருந்தது. அவள் குணவதி, அன்பானவள், அழகானவள், நன்றாகச் சமைப்பவளும்கூட. இருந்தாலும் கொஞ்சம் வெளி விவரம் புரியாத அப்பாவி.
ஆனால் அவளின் குணமோ, அழகோ கிராமவாசிக்குப் பெரிதாகத் தெரியவில்லை. `விவரம் இல்லாதவளாக இருக்கிறாளே’ என்பதுதான் உறுத்தியது. நிறைகளை விட்டுவிட்டு, குறையைப் பெரிதாக எண்ணி வருந்தினான். இதைப்பற்றி கடவுளிடமே கேட்டுவிட முடிவுசெய்தான். அவன் பக்திக்கு இரங்கி, ஒருநாள் கடவுளும் காட்சி கொடுத்தார். இவன் அவரிடம் கேட்டான்...
``கடவுளே என் மனைவியை அன்பானவளாகப் படைத்துவிட்டீரே ஏன்?’’
கடவுள் சொன்னார், ``அப்போதுதானே நீ அவளை நேசிப்பாய்!’’
``அவளை அழகாகப் படைத்தது ஏனோ?’’
``அப்போதுதானே நீ அவளை நேசிப்பாய்!’’
``ஏன் அவளை சமையற்கலையில் சிறந்தவளாகப் படைத்தீர்?’’
``அப்போதுதானே நீ அவளை நேசிப்பாய்!’’
நிறைவில், தான் கேட்க நினைத்த கேள்வியையும் கேட்டான்:
``எல்லாம் சரி... அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்துவிட்டீர்கள்?’’
கடவுள் நிதானமாக இப்படிப் பதில் சொன்னார், ``அப்போதுதானே அவள் உன்னை நேசிப்பாள்!’’