கட்டுரைகள்
Published:Updated:

மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?

மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?
பிரீமியம் ஸ்டோரி
News
மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?

ஒரு நாள், காலை நேரத்தில் புத்தரை தரிசித்த ஒருவர் அவரிடம், ‘கடவுள் இருக்கிறார் அல்லவா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்றார் புத்தர். மதியம் ஒருவர் வந்தார்.

இந்த முறை இரண்டு புதிர்களோடு தொடங்கலாமா?

முதல் புதிர்: `அ’, `ஆ’ என்று இருவர். `அ என் அண்ணன்’ என்கிறார் ஆ. ஆனால், `ஆ என் தம்பியில்லை’ என்கிறார் அ. எனில், `ஆ’ என்பவர் `அ’ என்பவருக்கு என்ன உறவுமுறை?

இரண்டாவது புதிர்: சில ஆடுகள் ஏகாந்தமான சாலையில் சென்று கொண்டிருக்கின்றன. ஒரு ஆட்டுக்குப் பின்னால் இரண்டு ஆடுகளும், ஒரு ஆட்டுக்கு முன்னால் இரண்டு ஆடுகளும், ஒரு ஆடு நடுவிலும் சென்று கொண்டிருக்கிறது. எனில், இந்த வரிசையை அமைக்க மிகக் குறைவாக எத்தனை ஆடுகள் தேவைப்படும்?

இந்தப் புதிர்களுக்கான பதில்களைத் தெரிந்துகொண்டு காத்திருங்கள்! காரண விளக்கத்தை முடிவில் பார்க்கலாம்.

ஒருமுறை, மிதிலையின் அரசன் ஜனகரின் அரண்மனைக்கு யாக்ஞவல்கியர் வருகை புரிந்தார். ஞானத்தில் சிறந்த அவரிடம் ஜனகரின் அவையில் இருந்த கார்கி எனும் மாதரசி விவாதப் போர் நிகழ்த்தினாள்.

``மகரிஷியே... ஒளி எங்கிருந்து வருகிறது?’’ என்று கேட்டாள் கார்கி.

‘`சூரியனிடமிருந்து!’’ என்று பதில் தந்தார் யாக்ஞவல்கியர்.

‘`சூரியன் இல்லாதபோது?’’

‘`சந்திரனிடமிருந்து ஒளி கிடைக்கும்!’’

‘`சூரிய-சந்திரர் இல்லாத வேளைகளில்?’’

‘`தாரகைகள் ஒளி தரும் அல்லவா?’’

‘`விண்ணில் தாரகைகளும் புலப்படாத நிலையில்?’’

‘`நெருப்பின் மூலம் ஒளியைப் பெறலாமே!’’

‘`நெருப்பும் இல்லாதபோது?’’

‘`பேசும் பேச்சிலிருந்து வரும்.’’

‘`பேச்சற்றுப் போகும்போது எங்கிருந்து ஒளி வரும்?’’

கார்கியின் இந்தக் கேள்விக்கு அற்புதமான ஒரு பதிலைத் தந்தார் ஞாக்ஞவல்கியர். ‘`பெண்ணே, எந்த ஒளியும் இல்லாதபோது அவரவர் ஆன்ம ஒளி வழிகாட்டும்!’’ என்றார்.

உண்மைதான்! கண்ண பரமாத்மாவும் `‘எப்போதெல்லாம் மனம் வழி புலப்படாமல் நிலையற்று அலைகிறதோ, அப்போது மனத்தை ஆத்மாவின் வசத்தில் நிலைநிறுத்த வேண்டும்’’ என்றே போதிக்கிறார்.

அப்படியான ஆத்ம பலத்தை, ஆன்ம ஒளியை ஒவ்வொருவருக்குள்ளும் பெருகியோடச் செய்யும் அற்புத சாதனங்கள் தியானமும் பிரார்த்தனையும். தியானம் சிந்தையை ஒருமுகப்படுத்தும்; பிரார்த்தனை நமக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்து நம் சிந்தையைப் பலப்படுத்தும். சிந்தனை செழிக்கும்போது புதிய தேடல் உருவாகும். தேடல் நிலையே நம் துறையில் நம்மைப் பெரும் சாதனையாளன் ஆக்கும்.

ஒரு நாள், காலை நேரத்தில் புத்தரை தரிசித்த ஒருவர் அவரிடம், ‘கடவுள் இருக்கிறார் அல்லவா?’ என்று கேட்டார். ‘இல்லை’ என்றார் புத்தர். மதியம் ஒருவர் வந்தார். ‘கடவுள் இல்லைதானே?’ என்று கேட்டார். புத்தரோ ‘இருக்கிறார்’ என்று பதில் சொன்னார்.

மாலையில் ஒருவர் வந்தார். ‘கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை!’ என்றார். உடனே புத்தர், ‘நீ சரியான கேள்வியைக் கேட்கிறாய்’ என்றார்.

மூன்று தருணங்களிலும் புத்தரின் அருகிலேயே இருந்த அவரின் சீடர் ஒருவர், புத்தரின் இந்தப் பதில்களால் குழம்பினார். இரவில் புத்தரிடம் அவர், ‘நீங்கள் ஒரே கேள்விக்கு மூன்று விதமான பதில்களைச் சொன்னீர்களே... ஏன்?’ என்று கேட்டார்.

`காலையில் வந்தவர், ‘கடவுள் இருக்கிறார்’ என்று ஏற்கெனவே முடிவு செய்துகொண்டு வந்து, என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டார். எனவே ‘இல்லை’ என்று பதில் சொன்னேன். அதனால் அவர் சுயமாகத் தேடத் தொடங்குவார்.

மதியம் வந்தவர், ‘கடவுள் இல்லை’ என்று முடிவுசெய்துவிட்டு என்னிடம் வந்து கேட்டார். அவரிடம் ‘இருக்கிறார்’ என்று சொன்னால்தான் தானாகத் தேடலைத் தொடங்குவார். மூன்றாம் நபரோ, ஏற்கெனவே தேடிக்கொண்டிருக்கிறார். எனவே, அவர் பார்வை சரியானது என்றேன்’ என விளக்கினார்.

மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?

பிரார்த்தனை, தியானம் போன்ற சாதனங்களால் சிந்தை செழிப்புற்றவர், சரியான தேடலைத் தாமாகவே தொடங்கிவிடும் சமர்த்தராக இருப்பார்; அவர் சுயம்புவானவர். இப்படியானவர்கள் ஒவ்வொன்றையும் புதிய கோணத்தில் அணுகுவார்கள்; மாற்றி யோசிப்பார்கள்.

வாழ்க்கை, தொழில் எதுவாக இருப்பினும் வரும் பிரச்னைகளை எளிதில் எதிர்கொள்ளவும் அவற்றுக்கு நல்ல தீர்வுகளைக் காணவும், முன்னேற்றத்தை நோக்கி நகரவும் ஒருவருக்கு மாற்றுச் சிந்தனை அவசியம். ஒவ்வொரு விஷயத்தையும் புதியதொரு பார்வையில் அணுகும் ஆற்றல் அது.

தரையில் கிழித்த கோட்டினை அதைத் தொடாமல் சிறியதாக்கிக் காட்டிய பீர்பாலின் சூட்சுமம் போன்று வட்டத்துக்கு வெளியே சிந்திக்கும் வல்லமை பெற்றவர்கள், எதையும் எளிதில் சாதித்துக் காட்டுவார்கள்.

பாதுஷா ஒருவரின் அவைக்கு விருந்தினராகச் சென்றார் அப்பாஜி. அதுவரையிலும் அப்பாஜி பாதுஷாவை நேரில் பார்த்ததில்லை. இவரின் புத்திக்கூர்மையைச் சோதிக்க விரும்பினார் பாதுஷா. ஆகவே காவலாளி ஒருவருக்கு பாதுஷா வேஷமிட்டு அரியணையில் அமரச் செய்தார். தான் காவலாளியின் வேடத்தில் அருகில் பணிவுடன் நின்று கொண்டார்.

அப்பாஜி அவைக்குள் நுழைந்தார்.அவையில் இருப்பவர்களை ஒருமுறை நோட்டமிட்டார். நேராக காவலாளி வேடத்தில் நின்றிருந்த பாதுஷாவின் அருகில் சென்று பணிந்து வணக்கம் தெரிவித்தார். பாதுஷா திகைத்தார். ``எப்படி என்னைச் சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?’’

மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?

``அவைக்குள் நுழைந்ததும் எல்லோரையும் கவனித்தேன். அவர்களின் பார்வை அரியணையில் வீற்றிருக்கும் நபரின் மீது இல்லை. எல்லோரும் காவலாளி வேடத்தில் இருக்கும் தங்களையே பயபக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதே கணித்துவிட்டேன் தாங்கள்தான் பாதுஷா... தங்களின் விளையாட்டே இது என்று!’’ அப்பாஜி இப்படிக் கூறியதும் அவரைக் கட்டியணைத்துப் பாராட்டினார் பாதுஷா. மாற்றி யோசித்தலும் புதிய கோணத்தில் அணுகும் கலையும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

எவருக்கும் எதுவும் தராத கஞ்சமகாபிரபு ஒருவர் இருந்தார். ஒருமுறை பெருமழை பொழிந்து ஆற்றில் வெள்ளம் அதிகமாக ஓடியது. கஞ்சப் பேர்வழி தோணிக்கோ, படகுக்கோ காசு கொடுக்கத் தயங்கி, இறங்கி நீந்துவது என்று முடிவு செய்தார். எதிர்பாராத விதமாக வெள்ளம் அவரை அடித்துச் சென்றது.

சிலர் அவரைக் காப்பாற்றும் முனைப்புடன் கரையில் நின்றபடி ``கையைக் கொடுங்கள்... கையைக் கொடுங்கள்...’’ என்று கத்தினார்கள்; கதறினார்கள். ஆனால், கஞ்சமகா பிரவுவோ அவர்களின் கூப்பாட்டைச் சட்டை

செய்ததாகத் தோன்றவில்லை. நீரின் போக்கில் போய்க்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் `தற்கொலை எண்ணத்தில் இருக்கிறாரோ’ என்றுகூட எண்ணத் தோன்றியது கரையில் நின்றிருந்தவர்களுக்கு.

ஆனால் ஒருவர் மட்டும் அவரைத் தொடர்ந்து கரையோரமாக ஓடினார். கொஞ்ச தூரத்தில் தோதான இடம் வந்ததும் ஏதோ கூவினார்; கையை நீட்டினார். இப்போது அந்தக் கஞ்சன் அவரின் கையைப் பற்றிக்கொண்டார். காப்பாற்றிக் கரை சேர்க்கப்பட்டார்.

மற்றவர்களுக்குத் திகைப்பு. `அவர் ஏதோ சொன்னதும் கையைப் பிடித்துக்கொண்டாரே... எப்படி?’ என்று. வேறொன்றும் இல்லை... அந்தப் புண்ணியவான் கொஞ்சம் மாற்றி யோசித்தார்... அவ்வளவுதான்! எச்சில் கையால் காகத்தை விரட்டவும் தயங்கும் கஞ்ச பிரபுவிடம் போய் `கையைக் கொடு... கையைக் கொடு...’ என்றால் எப்படிக் கொடுப்பார். அவருக்குத்தான் `கொடு’ என்ற வார்த்தையே பிடிக்காதே. ஆகவே, தமது கையை நீட்டி `இந்தாரும் இதைப் பிடித்துக்கொள்ளும்’ என்று இவர் கூறவும் அவரும் பிடித்துக்கொண்டாராம்!

மாற்றி யோசிப்பதில் நீங்கள் எப்படி?

வேடிக்கைக் கதைதான். ஆனாலும் இக்கட்டான தருணத்தில் மாற்றி யோசிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் கதை அல்லவா?

சரி, இனி புதிருக்கு வருவோம். முதல் புதிருக்கு `தங்கை’ என்ற பதிலை நீங்கள் கண்டுபிடித்திருந்தால், ஒரு பிரச்னைக்கு சட்டென்று நல்ல தீர்வைச் சொல்லிவிடும் சாமர்த்தியசாலி நீங்கள்தான்.

இரண்டாவது புதிருக்கு எல்லோரையும் போன்று `ஐந்து ஆடுகள்’ என்று நீங்கள் பதிலளித்தால்... சாரி... நீங்கள் உங்கள் சிந்தையை இன்னும் கூர்தீட்ட வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புத்தக வாசிப்பு, யோகா, தியானம் என்று உங்களை மேம்படுத்துங்கள். புதிரில் சொல்லப்பட்ட வரிசையை அமைக்க மூன்று ஆடுகள் இருந்தாலே போதுமானது அல்லவா?!

இதே பதிலைத்தான் நீங்களும் நினைத்

திருந்தீர்கள் எனில், வாழ்த்துகள்... மாற்றி யோசிப்பதில் நீங்களும் சமர்த்தர்தான்!