மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 46

அன்பே தவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம்

ஒவ்வொரு மனித வாழ்விலும் திருப்புமுனை உண்டு. நம் வாழ்விலும் அது நிகழ்ந்தது. நமது சின்னஞ்சிறு வயதில் மகாசன்னிதானம் மதுரைக்கு எழுந்தருளும்போது, சில வேளைகளில் வணங்கி ஆசிபெற்றதுண்டு!

வாழ்க்கைச் சக்கரம் சுழல்கிறது. துறவு வாழ்வில் 25 ஆண்டுக்கால நிறைவு. 54 ஆண்டுகள் வாழ்க்கைப் பயணம் நிறைவுற்று, 55ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் பயணம். எப்போதும் பிறந்தநாளை நாம் சிந்திப்பதில்லை. மரம் மண்ணோடு உறவுகொண்டு மலர்களை, காய்களை, கனிகளைத் தருவதுபோல; மழை எந்த உயிரினத்தையும், எவரையும் விலக்காமல் எல்லோருக்காகவும் பொழிவதுபோல; காற்று தன் கடமையைக் கணப்பொழுதும் நிறுத்தாததைப்போல; எப்போதும் எதற்கும் சலனப்படாமல் பூமிப்பந்து தன் சுழற்சியைத் தொடர்வதைப்போல... மனித வாழ்க்கைப் பயணம் இயக்கம் சார்ந்தது. இரைப்பை நிறைய உண்பதும், இமைகள் மூடி உறங்குவதும், வாழ்வின் முதற்கடமை ஆகிவிட்டநிலையில், வாழ்வின் கடமைகளை, பணிகளைப் பற்றிச் சிந்திக்க அவகாசம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கிறது?

அன்பே தவம் - 46

ஒவ்வொரு மனித வாழ்விலும் திருப்புமுனை உண்டு. நம் வாழ்விலும் அது நிகழ்ந்தது. நமது சின்னஞ்சிறு வயதில் மகாசன்னிதானம் மதுரைக்கு எழுந்தருளும்போது, சில வேளைகளில் வணங்கி ஆசிபெற்றதுண்டு!

`தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல்தானே!’ என்கிறது திருமந்திரம். குரு-சீடர் உறவு எல்லா உறவுகளிலும் மேம்பட்டது. ஸ்ரீலஸ்ரீ தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் (தவத்திரு குன்றக்குடி அடிகள் பெருமான்) நம்மை ஆட்கொண்ட வரலாற்றை எழுதிக்காட்ட வார்த்தைகள் இல்லை.

சுமார் 33 ஆண்டுகளுக்கு முன்னர் (1985ஆம் ஆண்டில்) குன்றக்குடித் திருமடத்தின் மேல் மாடியில் மகாசன்னிதானத்தை தரிசனம் செய்தோம். முதல் சந்திப்பு. படித்து, பட்டம் பெற்ற கையோடு திருவடிகளில் விழுந்து வணங்கி, திருநீற்றுப் பிரசாதம் பெற்று ஆசிபெற்றோம். மகாசன்னிதானத்தின் ஆழமான பார்வை நம்மை ஊடுருவியது. அமைதிப்பார்வை, அன்புப்பார்வை, அருட்பார்வை. சிறிது மெளனம். நம் மேனி சிலிர்த்தது. சில கேள்விகளால் நம்மை விசாரித்தார்கள். விடை சொன்னோம். வணங்கி விடைபெற்றோம்.

பிறகு… மகாசன்னிதானத்தின் உரைகளை, தூர நின்று ஏகலைவனைப் போலக் கேட்பதும், தொலைபேசி வழி உத்தரவுகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதும் நம் வாழ்க்கை ஆயிற்று. மண்டைக்காடு மதக் கலவரத்தீயை மகாசன்னிதானம் அணைத்த பிறகு, `மனிதநேய மகாத்மா’ என்று நாம் எழுதிய கவிதை, நம்மால் தொடங்கப்பெற்ற `மணமலர்’ என்ற இதழில் வெளியானது.

`காந்தியடிகள் காலம்

புத்தரின் காலம் என்பதைப்போல,

அடிகளின் காலம்

என்பதை வரலாறு வாசிக்கும்!’ என்று நிறைவு பெற்றது அந்தக் கவிதை.

அந்தக் கவிதையை மகாசன்னிதானம் கடைசிவரை வாசிக்கும் வாய்ப்பு இல்லை.

அன்பே தவம் - 46

03.09.1989 அன்று, சிவகங்கையில் தயாரிக்கப்படும் பிரியதர்ஷினி டி.வி உட்பட, குன்றக்குடியில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருள்களையும் விற்பனை செய்ய `குன்றக்குடி சிறப்பங்காடி’ என்ற பெயரில் மதுரையில் ஒரு மையத்தை மகாசன்னிதானம் குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார்கள். நாம் சுருக்கமாக வரவேற்புரை ஆற்றினோம். பொதுவிழாவில் நமது கன்னிப்பேச்சு. மகாசன்னிதானம் கேட்ட நம் முதல் பேச்சும் அதுதான். நமது வரவேற்புரையை மகாசன்னிதானம் ஆழமாக கவனித்தார்கள். வாழ்த்துரை வழங்கிய அனைவரும் நம்மைப் பாராட்டினார்கள்.

`இனி வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போன அம்மா, ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கோயிலில் வெளிச்சமாக ஒளிர்கிறார். வானத்திலிருந்து மழைத்தூறல்கள் மலர்களாகத் தூவின.

திருவருட் பேரவையின் நல்லிணக்க அமைதி ஊர்வலம் மதுரையில் நடந்தது. இந்தப் பணிக்காக மூன்று நாள்கள் மகாசன்னிதானம் மதுரையில் முகாமிட்டார்கள். விழி அசைத்தும், விரல் அசைத்தும் இட்ட பணிகள் அனைத்தையும் நிறைவேற்றினோம்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், நெல்லையிலிருந்து குன்றக்குடிக்கு வரும் வழியில் மதுரையில் மகாசன்னி தானத்தின் திடீர்த் தங்கல். நமக்கு அவசர அழைப்பு. தங்குமனையில் காலை 10 மணிக்குத் தொடங்கிய உரையாடல் இரவு 9 மணிவரை நீடித்தது. மாலை பொதுக்கூட்டத்துக்கு உடன் அழைத்துச் சென்றார்கள்.

``சிறிய வட்டத்தைவிட்டு வெளியே வா! உலகம் பெரியது. உனக்காகப் பணிகள் காத்திருக்கின்றன!’’ - மகாசன்னிதானத்தின் அழைப்பு.

குரு மகாசன்னிதானத்துடன்
குரு மகாசன்னிதானத்துடன்

``பெரிய பணிகளை ஏற்றுச் செய்கிற வலிமை என்னிடம் இல்லையே...’’ என்று தாள்பணிந்து மறுத்தோம்.

``உன்னை என்னால் மாற்றிவிட முடியும்’’ என்றார்கள். நாம் மௌனமாக இருந்தோம்.

சில மாதங்கள் கழித்து, அலுவலகப் பணி நிமித்தம் குன்றக்குடி சென்றோம். அன்று மகாசன்னிதானத்தின் ஞானபீட நாள் என்பது அங்கு சென்றபோது தான் தெரிந்தது.

ஏராளமான அறிஞர்கள், சான்றோர்கள் திரளாக வந்திருந்தார்கள். நாம் வந்ததறிந்து, நம்மை மகாசன்னிதானம் திருமடத்தின் மேல்மாடிக்கு உடனே வரும்படி உத்தரவு. மகாசன்னிதானத்தைக் கண்டு, விழுந்து வணங்கி ஆசிபெற்றோம்.

``இன்றிலிருந்து, இப்போதிருந்து திருமடத்தில் இருந்துவிடலாம்.’’ மகாசன்னிதானத்தின் உத்தரவு.

``இப்போது அதற்கு அவசரம் இல்லையே...’’ - தயங்கித் தயங்கிக் கூறினோம். ஆனால், மகாசன்னிதானம் ஆணையை மீற முடியவில்லை. அன்றே திருமடத்தின் மரபுகளின்படி காளத்திநாதர் சன்னிதியில் வழிபாடு செய்து, பூசை மடத்தில் யாத்திரை காஷாயம் பெற்று, மகாசன்னிதானத்தின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றோம்.

``நானேயோ தவம் செய்தேன். சிவாய நம எனப் பெற்றேன்’’ என்ற பெரும்பேறு நமக்கு வாய்க்கப்பெற்று, துறவு வாழ்க்கை தொடங்கியது. நாம் துறவு மேற்கொண்ட செய்தியறிந்து மதுரையிலிருந்து நமது பூர்வாசிரமத் தாயும் தங்கையும் பதறியடித்து ஓடி வந்தார்கள். அவர்களைச் சமாதானம் செய்தோம். நம்மை அழைத்துப்போக, நாம் அணிந்திருந்த பழைய வண்ண உடைகளைக் கையில் எடுத்து வந்திருந்தார் தாய்.

``அடிக்கடி உடைகளை மாற்றிக் கொள்வதற்குக் கோபப்படுவீர்களே... இப்போது ஒரே உடைக்கு (காவியுடைக்கு) மாறிவிட்டேன். இனி உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம்’’ என்று கூறினோம்.

கதறி அழுதபடி, ``எத்தனை உடைகளை வேண்டுமானாலும் மாற்று… நாங்கள் துவைத்துப் போடுகிறோம்… எங்களோடு வந்துவிடு’’ என்று தாயும் தங்கையும் கதறினார்கள். நாம் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பிவைத்தோம். ஊருக்குச் சென்ற பிறகும் தாயார் நாம் அணிந்திருந்த பழைய உடைகளைப் பொக்கிஷமாகப் பேணிக் காத்தார். தினந்தோறும் மடிப்பு கலையாமல் உடைகளை எடுத்துப் பார்த்து, மடித்துவைத்து, அணைத்தபடி அவற்றோடு பேசி, மீண்டும் மடித்து வைப்பாராம். மரணத்தின் கடைசி நொடிவரை அவற்றைத் தொட எவரையும் அவர் அனுமதித்ததில்லை. அவற்றில்தான் அவர் மகன், அவரோடு வாழ்வதாக அவருக்கு ஒரு நம்பிக்கை.

துறவு மேற்கொண்ட சில நாள்களில் ஒருவர் வந்தார். அவர், துப்புரவுத் தொழிலாளர் சண்முகவேல். மதுரையில் இருந்தபோது அதிகாலையில் தேநீர்க் கடைக்குச் சென்று நாம் தேநீர் அருந்தும்போது அவருக்கும் வாங்கித் தருவோம். எப்போதும் காக்கிச் சீருடையில் இருந்த அவர், பட்டுவேட்டி பட்டுச்சட்டை அணிந்து நம்மைப் பார்க்கத் திருமடத்துக்கு வந்திருந்தார்.

நம்மைப் பார்த்ததும், கதறி மண்ணில் கீழே விழுந்து புரண்டு அழுதார்.

அன்பே தவம் - 46

மண்ணாகிப்போன பட்டுடையுடன் எழுந்து நின்றவர், ``சாமி… தெருவுக்கே அலங்காரமாக, தேர் அசைந்து வருவது போல் கம்பீரமாக வருவீர்களே… வேறுபாடு பார்க்காம எங்க எல்லாரையும் அரவணைத்து உதவி செய்வீர்களே... நீங்க நடந்த தெருவைத் தூய்மை செய்ய நான் இருக்கேன்… இப்போ எங்க மனசைத் தூய்மை செய்ய அங்கே யார் இருக்காங்க?’’ என்றார்.

``என் கல்யாணத்துக்குக்கூடப் பட்டுவேட்டி பட்டுச் சட்டை கட்டலை. உங்களைப் பார்க்க வரும்போது உள்ளே விடுவாங்களோ, மாட்டாங்களோன்னு நினைச்சு பட்டுவேட்டி சட்டையைக் கட்டிட்டு வந்தேன் சாமி…’’ என்று வணங்கினார்.

``சண்முகவேல்… இது ஏழைகளின் மடம். இங்கே எல்லோரும் ஒன்று. அதனால்தான் இங்கே வந்தேன்’’ என்று கூறி, பந்தியில் உணவு சாப்பிடச் சொன்னோம். விக்கி விக்கி அழுதுகொண்டே பாதி சாப்பிட்டும் சாப்பிடாமலும் விடைபெற்றார் சண்முகவேல்.

சில்லறைக் காசுகளைத் தேடினோம். ``எதுவும் வேண்டாம் சாமி… விபூதி மட்டும் தாருங்கள் போதும்” என்று கூறி விழுந்து வணங்கி, பக்கத்திலிருந்தவரிடம், ``சாமியை நல்லாப் பார்த்துக்கங்க’’ என்று சொல்லி விடைபெற்றுச் சென்றார். அவரை இன்றுவரை பார்க்க வாய்ப்பு இல்லை.

நமக்கு அப்பனாக, அம்மையாக, அய்யனாக எல்லா நிலைகளிலுமாக இருந்து, நம் நெஞ்சைத் துறப்பித்து மகாசன்னிதானம் நம்மை வழிநடத்தினார்கள். தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, நம்மை ஆட்கொண்டு அருளினார்கள். உலகில் எவருக்கும் வாய்க்காத ஒப்பற்ற குருமணியை நாம் பெற்றதே நம் வாழ்வில் பெரும்பேறு. தாயைப் பின்தொடரும் கன்றைப்போல், மகாசன்னிதானத்தைப் பற்றிக்கொண்டு பயணம் தொடர்ந்தது. மகாசன்னிதானம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பரிபூரணம் அடைந்த பின்னரும், எப்போதும் நம் எல்லாப் பணிகளிலும் தோன்றாத் துணையாக நின்று நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

02.12.2012-ல் பறம்புமலை அடிவாரத்தில் நம் வள்ளல்பாரி மேல்நிலைப் பள்ளியின் புதிய கட்டடங்கள் திறப்புவிழா. விழாவில் பெரியார் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் முத்துச் செழியன் தலைமை தாங்கி உரையாற்றினார். ``நான் துணைவேந்தராக வரவில்லை. இந்தப் பள்ளியின் பழைய மாணவராக வந்திருக்கிறேன். நுழைந்தபோது, இந்தப் பள்ளியின் மண்ணைத் தொட்டு வணங்கி, என் தாய்வீட்டுக்குள் நுழைவதைப்போல் மகிழ்ந்தேன். சின்னஞ்சிறு வயதில் இந்தப் பள்ளியில் ஆடிப்பாடி மகிழ்ந்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. நான் பயின்ற பள்ளிக்குப் போதிய கட்டட வசதி இல்லை. கோயில் வளாகத்திலும் பள்ளி நடைபெறும்; இன்று இவ்வளவு கட்டடங்கள்... பல்கலைக்கழக வளாகத்துக்குள் வந்ததுபோல் உணர்கிறேன். இது நல்வாய்ப்பு. நம் அடிகள் செய்த பெருந்தவத்தால் இந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதற்காகவே நீங்கள் நன்கு படிக்க வேண்டும்’’ என்றார்.

அன்பே தவம் - 46

நமது நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. அப்போது, இந்தப் பள்ளி வளாகத்தில் மகாசன்னிதானம் சுதேசி விஞ்ஞான இயக்கம் சார்பில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். போதிய கட்டட வசதி இல்லை என்ற காரணத்துக்காக, கடைசி நேரத்தில் அறிவியல் கண்காட்சி, பிரான்மலை அரசுத் தொடக்கப் பள்ளிக் கட்டடத்தில் நடைபெற்றது. மகாசன்னிதானத்தின் ஆழ்ந்த வருத்தத்தை நம்மால் உணர முடிந்தது.

மகாசன்னிதானம் பரிபூரணமான சில ஆண்டுகளில் பறம்புமலை வள்ளல் பாரி மேல்நிலைப் பள்ளிக்குப் புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்றன. 08.07.2002 அன்று பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழா. அதை ஊர் மக்கள் தங்கள் சொந்த வீட்டு விழாவாகக் கருதிப் பங்கெடுத்தார்கள். அதிகாலையில் நமக்குத் தொலைபேசி வழி ஒரு செய்தி. தயங்கித் தயங்கி உதவியாளர் இராமசாமி தெரிவித்தார். நம்மிடம் ஒரு நிமிடம் அமைதி. பின் இயல்பாகப் பணிகளைத் தொடர்ந்தோம்.

தொலைபேசி ஒலித்தது. தலைமை ஆசிரியர். ``கட்டடத் திறப்புவிழா நடத்தலாமா?’’ என்று கேட்டார்.

``ஏன்... விழாவுக்கு என்ன?’’

தயங்கித் தயங்கி விஷயத்தைச் சொன்னார்.

``உங்களுக்குத் தெரிந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம்…’’ என்று வாக்குறுதி பெற்றுவிட்டு, ``விழா வேலைகளை கவனியுங்கள்’’ என்றோம்.

விழா கோலாகலமாகத் தொடங்கியது. அறிஞர்களும் முக்கியப் பிரமுகர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். நாம் உரையாற்றும்போது, ``தாய்ப்பால் குடித்த உணர்வைவிட, மகா சன்னிதானத்தின் தமிழ்ப்பால் குடித்த உணர்வில் தான் இந்த அரங்கத்தில் இந்த விழாவில் உரையாற்றுகிறோம்...’’ என்றோம். புதிய பள்ளிக் கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றிவைக்கப்பட்டது, பிரான்மலையில். அதே நேரத்தில், நம்மை மணிவயிற்றில் சுமந்த தாயின் இறுதி ஊர்வலம் மதுரையில். சிதையில் தாயின் உடலில் நெருப்பு மூட்டும் அதே நேரத்தில், ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கோயிலில் குத்துவிளக்கின் ஒளி வெள்ளமாகப் பரவியது.

`இனி வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுப் போன அம்மா, ஏழைப் பிள்ளைகளின் கல்விக் கோயிலில் வெளிச்சமாக ஒளிர்கிறார். வானத்திலிருந்து மழைத்தூறல்கள் மலர்களாகத் தூவின.

``பிரான்மலை வள்ளல்பாரி மேல்நிலைப் பள்ளிக்குக் கட்டட வசதி இல்லையே…’’ என்ற மகாசன்னிதானத்தின் ஏக்கமும் வருத்தமும் மறைந்தன. வான்மழைத் தூறல்களின்வழி மகாசன்னிதானம் வாழ்த்துவதை நம்மால் உணர முடிந்தது.

எவரும் அறியாமல் நம் கண்களில் நீர்த்துளிகளும், மழையின் துளிகளும் இரண்டறக் கலந்தன.

`அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று

ஓம்புதல் தேற்றா தவர்.’

துறவு என்பது இருந்ததையெல்லாம் இழப்பது மட்டுமல்ல... `இழந்தோம்’ என்று எண்ணிப் பாராமல் இருப்பதும்தான். அந்தப் பக்குவநிலையைத் திருவருளும், மகாசன்னிதானத்தின் குருவருளும் நமக்குத் தொடர்ந்து வழங்கப் பிரார்த்திக்கிறோம்.

புரிவோம்...