
அமெரிக்கப் பயணத்தில் நாம் பார்த்த இடங்களில் முக்கியமான ஒன்று உண்டு. அது, `பாஸ்டன் தேநீர் விருந்து அருங்காட்சியகம் (Boston Tea Party Ships and Museum).’
அங்கே, அமெரிக்க விடுதலைப் போருக்கு அழுத்தமாக விதைபோட்ட அந்த நிகழ்வை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறார்கள். அந்த வரலாற்று நிகழ்வைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம். அமெரிக்காவில் மக்கள் சுதந்திரமாகக் குடியேறிவிட்டாலும், அங்கிருந்த 13 காலனிகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடிமைப்படுத்தி வைத்திருந்த காலம் அது. எங்கேயோ இருந்துகொண்டு அமெரிக்க மக்கள்மீது வரிக்கு மேல் வரி போட்டுக்கொண்டிருந்தது இங்கிலாந்து. ஆளைக் கொல்லும் வரிச்சுமை. டீ குடிப்பதிலிருந்து பத்திரம் வாங்குவதுவரை அத்தனைக்கும் வரி.
1773, டிசம்பர் 16. பாஸ்டன் துறைமுகத்தில் பிரிட்டனுக்குச் சொந்தமான ஒரு கப்பல் வந்து நின்றிருந்தது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேயிலைகள் மூட்டை மூட்டையாக அந்தக் கப்பலில் இருந்தன. அவற்றை அமெரிக்காவில் விற்பனை செய்ய அனுப்பியிருந்தது இங்கிலாந்து. `வரிக்கு மேல் வரி. இது போதாதென்று இங்கே விற்பதற்காகத் தேயிலையை வேறு அனுப்புகிறாயா?’ என்று கோபப்பட்டார்கள் அமெரிக்கர்கள். கும்பல் கும்பலாகக் கப்பலில் ஏறினார்கள். அதிகாரிகள் தடுத்தும் கேட்காமல், கப்பலிலிருந்த எல்லாத் தேயிலை மூட்டைகளையும் கடலில் வீசியெறிந்தார்கள். அதிகாரிகளிடம், `கடலுக்கு டீ பார்ட்டி கொடுக்கிறோம்’ என்றார்கள். இந்த நிகழ்வு, வரலாற்றில் `பாஸ்டன் தேநீர் விருந்து’ என்று குறிப்பிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசர் பாஸ்டன் துறைமுகத்தை இழுத்து மூடினார். இங்கிலாந்திலிருந்து ஒரு படையை அமெரிக்காவுக்கு அனுப்பினார். சந்தேகப்படுபவர்களையெல்லாம் பிடித்துச் சிறையில் போட்டார்கள். காலனி நாடுகளில் ஒன்றான மாசாசூசெட்ஸுக்கு அளிக்கப்பட்டிருந்த அத்தனை உரிமைகளும் ரத்து செய்யப்பட்டன. அதன் பிறகு அமெரிக்க சுதந்திரப் போர் தீவிரமடைந்தது.
நாட்டின் வரலாற்று நிகழ்வுகளைப் பேணிக் காப்பதில், அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது அமெரிக்கா. அருங்காட்சியகத்தில் அந்த நிகழ்வை ஒரு நாடகக் காட்சியாக அப்படியே நடித்துக் காட்டுகிறார்கள். நடிகர்களின் பழங்காலத்து உடை, அந்நாளில் அமெரிக்கர்கள் பேசியது போன்ற உரையாடல்கள் என எல்லாமே தத்ரூபமாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, அந்தக்காலக் கப்பலைக் காட்சிப் பொருளாகவும் வைத்திருக்கிறார்கள். அதைப் பார்த்தபோது `நாம், நம் வரலாற்றை உரிய முறையில் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்த்திருக்கிறோமா?’ என்கிற கேள்வி நமக்கு எழுந்தது.

விடுதலைப் போராட்டத்தின் உச்சக்கட்ட நிகழ்வு தண்டி யாத்திரை. அந்தச் சந்தர்ப்பத்தில் காந்தியடிகள் குறிப்பிடுகிறார்... `தண்டி யாத்திரைப் போராட்டத்தால், `மகாத்மா’ என்ற பட்டத்துக்குப் பதிலாக, `உப்புத் திருடன்’ என்ற பெயரை எனக்குக் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் பட்டம் எனக்குப் பிடித்திருக்கிறது. ஒரு மனிதன், மகாத்மாவாக மாறுவது சுலபம். ஆனால், உப்புத் திருடனாக மாறுவது கடினம். அரை ஆடை உடுத்திக்கொள்வது, எளிய உணவு உண்பது, பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்வது ஆகியவற்றால் ஒருவன் எளிதாக மகாத்மாவாகக் கருதப்பட்டுவிடுகிறான். ஆனால், ஒருவன் சட்டத்தை மீறி, ஒரு பொருளை அபகரிக்கும்போது தான் திருடனாகக் கருதப்படுவான். சட்டத்தை மீறி நான் உப்பை எடுத்ததால் என்னை `உப்புத் திருடன்’ என்கிறார்கள். `நான் சட்டத்தை மீறினேனா... நான் உப்புத் திருடன்தானா?’ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் உண்மையிலேயே சட்டத்தை மீறியிருந்தால், உப்புத் திருடனாக மாறியிருந்தால் இந்நேரம் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அல்லவா இருந்திருக்க வேண்டும்?’
உப்புச் சத்தியாகிரகத்தில் காந்தி ஈடுபட்டபோது பம்பாயில் மகளிர் தொண்டர்கள் மறைமுகமாக உப்புப் போராட்டத்தில் பங்கேற்றனர். `புனித உப்பு, காந்தி உப்பு, சட்ட மறுப்பு உப்பு, இந்தியாவுக்கு விடுதலையை வாங்கித்தரும் உப்பு...’ என்றெல்லாம் கோஷம் எழுப்பியபடி வீதிகளில் உப்பை விற்றார்கள்.
உப்புச் சத்தியாகிரகத்தின் நோக்கம், உப்பு வரி விலக்கு மட்டுமல்ல... பூரண மதுவிலக்கு, அந்நியத் துணிகளுக்குக் கொடுக்கப்படும் வரிச் சலுகையைக் குறைத்தல், அந்நியப் பொருள்களை வாங்குவதைப் புறக்கணித்தல் உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கியது.
காந்திக்கும் வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே இந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்கு முன்னர் காந்தியடிகளும், இர்வின் பிரபுவும் தேநீர் அருந்த ஏற்பாடானது. காந்தி, தேநீர் அருந்தும்முன் தன் பையில் முடிந்து வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து உயர்த்திக் காட்டினார். `பாஸ்டன் தேநீர் விருந்து நினைவாக என் தேநீர்க் கோப்பையில் இந்த உப்பைப் போட்டுக்கொள்கிறேன்’ என்று புன்னகைத்தபடி சொன்னார். உப்பில் சிறிதளவைத் தேநீர்க் கோப்பையில் போட்டுக்கொண்டார். இர்வின் பிரபு ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார். ஆக, அமெரிக்காவில் நடந்த பாஸ்டன் தேநீர் விருந்துப் போராட்டத்துக்கும், இந்தியாவில் நடந்த உப்புச் சத்தியாகிரகத்துக்கும் ஆத்மார்த்தமான தொடர்பு இருக்கிறது.
அந்தச் சந்தர்ப்பத்தில் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர், `பாஸ்டன் தேநீர் விருந்து எப்படி சுதந்திர அமெரிக்காவைத் தோற்றுவித்ததோ அப்படி இந்தியாவுக்கு `தண்டி யாத்திரை’ என்ற உப்புச் சத்தியாகிரகம் விடுதலையைப் பெற்றுத் தரும்’ என்று குறிப்பிட்டார்.
காந்தி, பெண்களை மதுவிலக்குப் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடச் சொல்லி வலியுறுத்தினார். `மதுக்கடைகளுக்கு முன்னால் பெண்கள் நிற்க வேண்டும். குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்களிடம், மது அருந்துவதால் ஏற்படும் தீமைகளை எடுத்துக் கூற வேண்டும். அவர்களை மது அருந்துவதிலிருந்து மீட்க வேண்டும்’ என்று பெண்களிடம் கோரிக்கை வைத்தார்.
ஒருமுறை ஒரு பெண், காந்தியிடம் ``நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது தாக்கப்பட்டால் என்ன செய்வது?’’ என்று கேட்டார்.
``பெண்களைத் தாக்கும் துணிவு யாருக்கும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படித் தாக்கப்பட்டால் அதுதான் உங்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி. அதன் பிறகு அந்த மதுக்கடைக்காரர் தன் வாழ்நாள் முழுக்க மது விற்பனையில் ஈடுபட மாட்டார்’’ என்றார் காந்தி.
`சத்தியாகிரகம் என்பது ஓர் அற்புதமான வாழ்வியல். ஓர் உண்மையான சத்தியாகிரகி, உலகில் யாருக்கும் எதற்கும் அச்சப்பட மாட்டார். மனதிலிருந்து பயம் விலகிவிட்டவராக வாழ்நாள் முழுக்க இருப்பார்’ என்பது காந்தியின் அறிவுரை. `தனிமனிதனின் மனப்பாங்கை மாற்றினால்தான் சமூக மாற்றம் ஏற்படும்’ என்று காந்தி உறுதியாக நம்பினார்.
உப்பு, விசுவாசத்தின் குறியீடு. நன்றியறிதலின் அடையாளம். இன்றியமையாதது, அதே நேரத்தில் எளிமையானது. உப்பைப்போல் காந்தியும் எளிமையானவர்; இன்றியமையாததாக இருப்பதால்தான் பந்தியில் முந்திப் பரிமாறப்படுகிறது. `உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று வலியுறுத்துகிறது தமிழ்மொழி. எளிய உப்பைக்கொண்டு ஒரு நாட்டின் விடுதலை வேள்வியை காந்தியடிகள் திறம்பட முன்னெடுத்தார்.

அமெரிக்காவிலிருக்கும் சுதந்திரதேவி சிலை அமெரிக்கா - பிரான்ஸ் நாடுகளின் நட்புறவின் அடையாளம். பிரான்ஸ், அந்தச் சிலையை அன்பளிப்பாக அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கிறது. அந்தச் சிலை உலக மக்களின் விடுதலையின் அடையாளம். நியூயார்க் நகர இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதல் அமெரிக்காவையே உலுக்கிப் போட்டது. அதை அந்த நாட்டுக்கு விடுக்கப்பட்ட சவாலாக அமெரிக்க மக்கள் நினைத்தார்கள். அதையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது அமெரிக்கா. அந்தத் தாக்குதல் எப்படி நடந்தது... அதன் அரங்கேற்றம் எப்படி... எப்போது திட்டமிடப்பட்டது... பின்புலம் என்ன... எல்லாவற்றையும் விரிவாக, தெளிவாக நினைவுக் காட்சியகமாக வைத்திருக்கிறது அமெரிக்கா. இது அந்த நாட்டின் அடையாளம்.
அன்பையும் அகிம்சையையும் போதிக்கும் நம் இந்தியா, அமெரிக்காவிடம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? முன்பின் அறிமுகமில்லாத வர்களைக்கூட முகமலர்ச்சி யோடு வரவேற்கும், வணக்கம் செலுத்தும், தோழமை உணர்வை வெளிப்படுத்தும் பாங்கு. குழந்தை வளர்ப்பில் காட்டும் அதீத அக்கறை. தங்கள் வேலைகளைத் தாங்களே செய்ய வேண்டும் என்ற மனநிலை. உழைக்கும் மனோபாவம்.

`வீரன் ஒருமுறை சாகிறான். கோழை பலமுறை சாகிறான்’ என்பது ஜூலியஸ் சீஸர் வாக்கு. அப்பர் பெருமான் `நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ என்றார். எமனுக்கே பயப்படாத வாழ்க்கையைக் காட்டுகிறார். `காலா... என் காலருகே வாடா...’ என்று பாரதி மரணத்தை வரவேற்றுப் பாடினார்.
பாஸ்டன் தேநீர் விருந்துப் போராட்டமும், உப்புச் சத்தியாகிரகப் போராட்டமும் நமக்குச் சுதந்திர உணர்வை ஊட்டும் நிகழ்வுகள். அறப் போராட்டத்தின் வலிமையை உணர்த்த இந்தியா கொடுத்த விலை உலகத்தில் எந்த நாடும் கொடுக்க முடியாதது. அன்பு, அகிம்சை, சத்திய வாழ்வு, மனிதகுல சமத்துவம், பெண்ணினத்தின் முன்னேற்றம் என்ற இலக்குகளோடுதான் நம் நாட்டு சுதந்திரப் போராட்டத்தை காந்தியடிகள் வழிநடத்தினார்.
மதுவிலக்கு அவசியம், தீண்டாமை இல்லாத சமுதாயம் வேண்டும், இந்து-முஸ்லிம் ஒற்றுமை வேண்டும், பெண் முன்னேற்றம் வேண்டும் என்றெல்லாம் கோரிய மகாத்மாவின் பாதை, இன்று கரடுமுரடாக இருக்கிறது. அதைச் செப்பனிடுவதற்கு இளைய தலைமுறை தயாராக வேண்டும். உண்மையோடும் நேர்மையோடும் சத்தியத்தின் பாதையில், அகிம்சையின் தடத்தில், அறிவை வலிமைப்படுத்தி, அன்பை ஊற்றெடுக்கச் செய்து, மனிதகுலத்தை நேசிக்கும் தடத்தில் பயணம் செய்ய வேண்டும். அதுதான் நாட்டின் சுதந்திரத்துக்கு நாம் கொடுத்த விலையைச் சரியாகப் பேணிக்காக்கும் நிலை!
புரிவோம்...