மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 39

அன்பே தவம் - 39
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம் - 39

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

ம்மிடம் சிரித்துப் பேசுவார்கள்; முகம் சிரிப்பைக் காட்டினாலும் நெஞ்சத்துக்குள் ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கும்.

அன்பே தவம் - 39

அன்போடு கைகுலுக் குவார்கள்; உள்ளே `எப்போது இவனை வீழ்த்தலாம்?’ என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும். தோள்மீது கை போட்டுப் பேசுவார்கள்;

நம்மைஆழப்புதைத்துவிடுவதற்கான எண்ணம் அவர்களுக்குள் சுழன்றுகொண்டிருக்கும். உறவில், நட்பில் ஏன் இப்படி இரு வேறு நிலைகள்?

அன்பே தவம் - 39

ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் நாடகத்தில், புகழ்பெற்ற ஒரு வாசகம் உண்டு... `யூ டூ புரூட்டஸ்?’ மரணத்தின் கடைசி விநாடியில் தன்னைக் கத்தியால் குத்திய நண்பன் புரூட்டஸைப் பார்த்து சீசர் கேட்ட கேள்வி. அது, நம்பிக்கைத் துரோகத்தை அடையாளம் காட்டும் வாசகமாகச் சரித்திரத்தில் நிலைத்து நின்றுவிட்டது.

அன்பின் உருவமாக, அகிம்சையின் வடிவமாகத் திகழ்ந்த யேசுபெருமானை அவருடனேயே இருந்த சீடன் யூதாஸ், 30 வெள்ளிக் காசுகளுக்காகக் காட்டிக் கொடுத்தான். அதன் பிறகு யூதாஸால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்பது வேறு விஷயம். ஆனால், `நம்பிக்கைத் துரோகம்’ என்ற சொல்லுக்கு யூதாஸ் இன்றைக்கும் அடையாளமாக இருக்கிறான்.

`இவர்கள் இன்னதென்று அறியாது செய்கிறார்கள். அவர்களை மன்னித்துவிடுங்கள் பரமபிதாவே...’ என்று சிலுவையில் அறையப்படும்போதும், தன்னைச் சிலுவையில் அறைபவர்களுக்காக மன்னிப்பு கேட்டார் யேசு.

``ஒருவரை எத்தனை முறை மன்னிக்கலாம்... ஏழு முறையா... எழுபது முறையா?’’ என்று கேட்டபோது, ``ஏழேழு எழுபது முறையும் மன்னிக்கலாம்’’ என்று சொன்னது அந்தக் கருணை உள்ளம். `சீடன் யூதாஸ்தான் காட்டிக்கொடுப்பான்’ என்று உணர்ந்திருந்தபோதும் யேசு, யூதாஸைக் காட்டிக் கொடுக்கவில்லை. இறை உணர்வோடு இருப்பவர்கள், இறை உணர்வில் திளைப்பவர்கள் துரோகங்களுக்காக ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. ஆலகால விஷத்தோடு வருபவர்களையும் வரவேற்று, அவர்கள் கொடுக்கும் விஷத்தை மகிழ்வோடு உண்பவர்கள் அவர்கள்.

மனிதர்கள் நம்பிக்கையால் வாழ்கிறார்கள்; நம்பிக்கையாலேயே வீழ்கிறார்கள்.

காட்டுவழியில் ஒருவன் குதிரையில் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்தான். வழியில் ஒருவன் மயங்கிக் கிடந்ததைப் பார்த்தான். உடனே குதிரையிலிருந்து இறங்கி, அவனுக்கு முதலுதவி செய்தான். கீழே கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தான். அதுவரை மயங்கியதுபோலக் கிடந்தவன், விருட்டென்று எழுந்தான். அந்தப் பயணியைத் தள்ளிவிட்டுவிட்டுக் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

விழுந்துகிடந்த பயணி, திருடனைப் பார்த்துச் சொன்னான்...

``இந்தச் சம்பவத்தை யாரிடமும் சொல்லிவிடாதே…’’

``ஏன்... வெட்கமாக இருக்கிறதா?’’ திருடன் ஏளனமாகக் கேட்டான்.

``நீ மயங்கிக் கிடக்கிறாய் என்று நினைத்து உனக்கு உதவிசெய்ய வந்தேன். நீ குதிரையைத் திருடுவதற்காக அப்படி நடித்திருந்தாய். இனி யாராவது உண்மையிலேயே காயம்பட்டுக் கிடந்தால்கூட, இந்தச் சம்பவத்தைக் கேள்விப் பட்ட யாரும் காப்பாற்ற முன்வர மாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விடும். அதற்காகச் சொன்னேன்.’’ இப்படியும் பரந்த உள்ளம்கொண்ட மனிதர்கள் இந்த மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

``கப்பலோடு வருவேன். இல்லையெனில் கடலில் விழுந்து மாய்வேன்’’ என்று சூளுரைத்துவிட்டு, வ.உ.சிதம்பரம் மும்பைக்குக் கப்பல் வாங்கச் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவர் மகன் உலகநாதன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். மனைவி, நிறைமாத கர்ப்பிணி. உறவினர்கள் வ.உ.சியை ஊர் திரும்பச் சொன்னார்கள். ஆனால் அவரோ, `இறைவன் துணை நிற்பார்’ என்று கடிதம் எழுதிவிட்டு, சுதேசிக் கப்பலை வாங்கிய பிறகுதான் ஊர் திரும்பினார். எஸ்.எஸ். காலியோ,

எஸ்.எஸ்.லாவோ என்ற இரண்டு கப்பல்கள் தூத்துக்குடித் துறைமுகத்தைத் தொட்ட போது, `நெடுங்காலமாகப் பிள்ளைப்பேறு இல்லாத பெண் ஒருத்திக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததைப்போல ஆனந்தத்தை நான் அடைந்தேன்’ என்று பாரதி அந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார். தேசத்துக்காகத் தன்னையே தந்த வ.உ.சிக்கு விதிக்கப்பட்டது இரட்டை ஆயுள் தண்டனை. இதுதான் தியாகத்துக்குக் கிடைத்த பரிசு.

இன்றைய அறிவு சார்ந்த உலகம் எல்லாவற்றையும் தன்னுடையது என்று உரிமை கொண்டாடுகிறது. `பேட்டன்ட் ரைட்’ `காப்புரிமை’, `இன்டலெக்சுவல் பேட்டன்ட் ரைட்’ என்றெல்லாம் பேசப்படுகிறது. கண்டுபிடிப்புகளெல்லாம் உலக நன்மைக்காக, பொதுவுடைமையாக மாறும் நாள் எந்த நாள்?

உலகை வாழவைப்பதற்காகக் கார்மேகம் கொட்டித் தீர்க்கிறதே... அந்த மழைக்கு யார் காப்புரிமை கொண்டாடுவார்கள்?

`ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு’ என்கிறார் வள்ளுவர்.

அன்பே தவம் - 39

ஃபிர்தௌஸி (Ferdowsi), பாரசீகக் கவிஞர். ஊர் மக்களின் வறுமையை விரட்ட, தன் அறிவைப் பயன்படுத்த நினைத்தார். பாரசீக அரசர் பாட அழைத்தபோது நிபந்தனை ஒன்றை விதித்தார் ஃபிர்தௌஸி. `என் கவிதைகள் உங்கள் புகழ் பாடும். ஆனால், ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு பொன் தர வேண்டும்.’ நிபந்தனையை ஏற்றுக்கொண்டார் அரசர். ஊர் மக்களின் வறுமையை விரட்டிவிட வேண்டும் என, 60,000 கவிதைகளைப் பாடினார். ஆனால், பாரசீக அமைச்சர், `60,000 பொன்னைக் கொடுத்தால் அரசுக் கரூவூலமே காலியாகிவிடும். 60,000 வெள்ளி நாணயங்கள் தருகிறோம்’ என்று சொன்னார். பரிசை ஏற்க மறுத்து ஊர் திரும்பினார் ஃபிர்தௌஸி. அவர் உடல்நலம் குன்றியது.

ஒருநாள் பாரசீக மன்னர், ஃபிர்தௌஸியின் கவிதைகளை எடுத்துப் படித்துப் பார்த்தார். அந்த மணிமணியான கவிதைகளுக்கு மனதைப் பறிகொடுத்தார். ``உடனடியாக ஃபிர்தௌஸியின் இல்லத்துக்கு 60,000 பொற்காசுகளை எடுத்துப் போங்கள்’ என்று ஆணையிட்டார். அரச மரியாதையோடு பொற்காசுகளைச் சுமந்துகொண்டு ஓர் ஒட்டகமும் வீரர்களும் கிளம்பினார்கள். ஃபிர்தௌஸியின் ஊருக்குள் ஒட்டகம் நுழைந்தபோது, எதிரே ஃபிர்தௌஸியின் உடல் இறுதிமரியாதை செலுத்தப்பட்டு வந்துகொண்டிருந்தது.

சின்னஞ்சிறு உதவிகள், பல மகத்தான காரியங்களைச் சாதிக்கின்றன. பயணம் செய்த வாகனத்தில் கிடந்த பணப்பையை எத்தனை பேர் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்... தன் சொந்தக் குடும்பத்துக்காக எத்தனை பேர் தங்களையே கரைத்துக்கொள்கி றார்கள்... ஓய்வுபெற்ற பிறகும் பணிபுரிந்த நிறுவனத்தை நினைத்துப் பார்க்கிறவர்கள் எத்தனை பேர்... சுயநலம் கடந்து பொதுநலனுக் காகத் தங்களை அர்ப்பணிப்பவர்களால்தான் உலகம் இன்னமும் சுழன்றுகொண்டிருக்கிறது.

திருநாவுக்கரசருக்கு நஞ்சூட்டினார்கள்; கல்லில் கட்டி, கடலில் தூக்கிப் போட்டார்கள்; யானையால் இடறச் செய்தார்கள். அத்தனை பேராபத்துகளிலிருந்தும் அவர் தப்பிப் பிழைத்தார். துரோகம் நிரந்தர வெற்றி பெற்றதாக வரலாறு எப்போதும் அடையாளம் காட்டாது. வாழ்க்கை என்பது எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வது. இன்பத்தை, துன்பத்தை, சுகத்தை, துக்கத்தை, நன்மையை, தீமையை ஒருசேர மதிக்கும் வாழ்வை நாம் கற்றுக் கொள்வோம்.

- புரிவோம்...