மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 40

அன்பே தவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம்

‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று’ - அடிமை இந்தியாவில் பாடினான் பாரதி.

ஆனால் அந்தச் சூழ்நிலையிலேயே, `சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடினான். இன்னும் இரு வாரங்களில் நம் தேசம் 72ஆவது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடவிருக்கிறது. பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறது நம் மூவர்ண சுதந்திரக்கொடி. தேச விடுதலைக்கான தியாக வரலாற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

`நான் கனவு காணும் சுயராஜ்யம் ஏழை மனிதனின் சுயராஜ்யமே. ஒரு பணக்காரன் அனுபவிக்கும் சாதாரணத் தேவைகளெல்லாம் ஏழைக்கும் கிடைத்தாக வேண்டும். இவற்றுக்கான சூழல் கனியாதவரை நமக்குப் பூரண சுயராஜ்யம் கிடைத்துவிட்டதாக நான் நம்ப மாட்டேன். நான் விரும்பி எதிர்நோக்கியிருக்கும் ஜனநாயகத்தில் அனைவருக்கும் சரிசமமான சுதந்திரம் இருக்கும். ஒவ்வொருவரும் தமக்குத் தாமே எஜமானராக இருப்பார்கள்’ என்றார் மகாத்மா காந்தியடிகள்.

அவர் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிவிட்டுத் தாயகம் திரும்பியபோது தன் சொத்துகளை அங்கேயிருந்த ஆசிரமத்துக்கு அளித்துவிட்டு, வெறுங்கையோடு வந்தார். அங்கே அவருக்கு இருந்த ஒற்றை உறவு ராலியாட்பெஹன் (Raliatbehn). அவரின் சகோதரி. அவரை `கோகிபெஹன்’ (Gokibehn) என்றுதான் அழைப்பார்கள். அவர் கணவரை இழந்தவர். அவருக்கு காந்தியடிகள் எதையும் தரவில்லை. அவருடைய வாழ்க்கைச் செலவுக்கு மாதம்

10 ரூபாய் தரும்படி அவரின் நண்பர் பிராணஜீவன் மேத்தாவிடம் (Pranajivan Jagjivandas Mehta) கேட்டுக்கொண்டார். சில மாதங்களில் கோகிபெஹனிடமிருந்து காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் வந்தது.

அன்பே தவம் - 40

`பிராணஜீவன் மேத்தா தரும் பணம் போதவில்லை. வாழ்க்கைச் செலவு கூடிவிட்டது. நானும் என் மகளும் பலருக்கு மாவு அரைத்துக் கொடுத்துதான் செலவுகளைச் சரிக்கட்ட வேண்டியிருக்கிறது. கொஞ்சம் கூடுதலாகப் பணம் கிடைத்தால் நலமாக இருக்கும்’ என்று கோகிபெஹன் எழுதியிருந்தார்.

`மாவரைப்பது உடலுக்கு நல்லது. இங்கே நாங்களும் ஆசிரமத்தில் அந்தப் பணியைத்தான் செய்கிறோம். நீங்கள் விருப்பப்பட்டால், இங்கு வந்து அதைச் செய்யலாம். அதற்கு மேல் பணம் அனுப்பும் நிலையில் நான் இல்லை’ என்று பதிலனுப்பினார் காந்தி. பொது நன்மைக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் மனப்பக்குவம் அது.

அரசியல் நிர்ணய சபையில் தொடக்கவுரை ஆற்றிய நேரு, `பசித்துக் கிடப்பவருக்கு உணவு, உடை இல்லாதவருக்கு உடை, திறமைக்கேற்ப ஒவ்வொருவருக்கும் வளர்ச்சியைப் பெருக்குவதற்கான வாய்ப்பு விரைவில் கிடைப்பதற்கேற்ப, அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

`காலத்தின் கடைசிக் கருணை’ என்று கவிஞர் கண்ணதாசனால் போற்றப்பட்டவர் காமராஜர். அவரின் பிறந்த நாள், இன்று கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது. ‘சுதந்திர வெளிச்சத்தின் ஒளி, கடைக்கோடி மக்களின் கல்வி ஒளியாக மாற வேண்டும்’ என்பதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டவர் காமராஜர்.

அன்பே தவம் - 40

முதலமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, தனக்கு இருந்த ஒற்றை உறவான தாயைக்கூடத் தவிர்த்தார். தன்னருகில் வைத்துக்கொள்ளாமல் சொந்த ஊரிலேயே தாயை இருக்கச் சொன்னார். அவருடைய நண்பர் கவிஞர் எஸ்.டி.சுந்தரம் ஒருமுறை, ``ஐயா, உங்கள் ஆட்சியில் அணைக்கட்டுகள், பள்ளிக்கூடங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பலவற்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் மக்கள் நினைவுகூரும் வகையில் ஒரு செய்திப்படம் எடுத்தால் நல்லது’’ என்று சொன்னார்.

காமராஜருக்குக் கோபம் கொப்புளித்தது. ``நாம் சாலை போட்டோம். அதன் மேலேதானே மக்கள் அன்றாடம் நடக்கிறார்கள். பள்ளிக்கூடங்கள் கட்டினோம். அவற்றில்தானே அவர்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். அணைகளைக் கட்டினோம். அந்தத் தண்ணீரில்தானே விவசாயம் செய்கிறார்கள். இதற்கு விளம்பரப்படம் எதற்கு?’’ என்று மறுத்தார்.

``மூன்று லட்ச ரூபாய் இருந்தால் போதுமய்யா... தேர்தல் நேரத்தில் பயன்படுகிற மாதிரி ஒரு நல்ல செய்திப்படம் எடுத்துவிடலாம்...’’ திரும்பச் சொன்னார் சுந்தரம்.

``அந்த மூன்று லட்ச ரூபாயில் இன்னும் 10 ஊர்களில் பள்ளிக்கூடங்கள் கட்டிவிடுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல் விளம்பரப்படம் எடுக்கச் சொல்கிறாயே… முதலில் இங்கிருந்து நடையைக்கட்டு’’ என்று சொல்லிவிட்டார் காமராஜர்.

1967-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காமராஜர் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் மிகக் குறைந்த வித்தியாசத்தில் சீனிவாசன் என்ற மாணவத் தலைவரிடம் தோற்றுப்போனார்.

``உங்கள் தோல்வி குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?’’ என்று அவரிடம் கேட்டார்கள். ``தேர்தலில் நான் தோற்றேன். ஜனநாயகம் ஜெயித்துவிட்டது’’ என்று சிரித்துக்கொண்டே காமராஜர் சொன்னார்.

``நீங்கள் தோற்றதற்கும், ஜனநாயகம் வென்றதற்கும் என்ன சம்பந்தம்?’’ என்று கேட்டதற்கு, ``சம்பந்தம் இருக்குன்னேன்… ஒரு மாநில முதல்வராக இருந்த, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த என்னை ஒரு மாணவன் தோற்கடிக்க முடியுமென்றால், அதுதான் ஜனநாயகத்தின் வெற்றி. இந்த ஜனநாயகம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்றுதானே நான் ஒன்பது வருஷம் சிறையில் இருந்தேன்’’ என்றார்.

நேரு பிரதமராக இருந்த காலம் அது. ஒருமுறை காங்கிரஸ் செயற்குழு கூடியது. இடைவேளையில், ``உங்களைப்போன்ற செல்வச் சீமான்களா நாங்கள்?’’ என்று யாரோ கேட்டுவிட்டார்கள். ``என் சட்டையைப் பாருங்கள்… கிழிந்த இடத்தில் தையல் போட்டிருக்கிறேன். செல்வச் சீமானின் சட்டை இப்படியா இருக்கும்... பிரதமர் சம்பளத்தில் செலவு போக மாதந்தோறும் மிஞ்சுவது ஒன்பது ரூபாய்தான். சொத்துக்கு ஒருபோதும் நான் மதிப்பு தருவதில்லை. என்னைப் பொறுத்தவரை சொத்து ஒரு பெரிய சுமை. வாழ்க்கைப்பயணத்தில் குறைந்த சுமையைத்தான் நாம் எடுத்துச் செல்ல வேண்டும்’’ என்றார் நேரு.

‘இந்துஸ்தான் டைம்ஸ்‘ இதழில் அரசியல்வாதிகளை ஏளனம் செய்து, கார்ட்டூனிஸ்ட் சங்கர் (K.Shankar Pillai) வரைந்த கேலிச்சித்திரங்கள் பெரும்புகழ் பெற்றவை. அவர் 1948ஆம் ஆண்டு ‘சங்கர்’ஸ் வீக்லி’ என்ற கார்ட்டூன் இதழைத் தொடங்கினார். ``என்னையும் என் அரசையும் கொஞ்சம்கூடத் தயங்காமல் தாக்கி, எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் கேலிச்சித்திரம் வரைந்துகொள்ளலாம்’’ என்று சங்கரிடம் சொன்னார் நேரு.

அன்பே தவம் - 40

``நேருவை எவ்வளவு மோசமாகத் தாக்கி எழுதினாலும், படம் வரைந்தாலும் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால், அவர் திருப்பித் தாக்க மாட்டார்’’ என்றார் சங்கர்.

அறத்தையும் அரசியலையும் நம் முன்னோர்கள் பிரித்துப் பார்த்ததில்லை. `அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலப்பதிகாரம். ஆட்சித் தலைமையைத் தகுதியின்றி அலங்கரிக்க, எந்த மனிதனையும் நம் மூதாதையர்கள் அனுமதித்ததில்லை.

மகாபாரதம், சாந்திபர்வத்தில் ஓர் ஆழ்ந்த அரசியல் செய்தி உண்டு. `ஆள்வதற்காக அரசுக்கட்டிலில் அமர்பவன் ஒரு தாயைப்போல இருக்க வேண்டும். ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குரிய தர்மமே அரச தர்மம். தனக்கு விருப்பமான உணவைவிட, கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான உணவையே ஒரு தாய் ஏற்பாள். ஆட்சியாளனும் தனக்கு விருப்பமான செயல்களைச் செய்யாமல், மக்கள்நலனுக்குரிய காரியங்களில் ஈடுபட வேண்டும்’ என்று அம்புப்படுக்கையில் மரணத்தின் பிடியில் சாய்ந்துகிடந்த பீஷ்மர், தருமனுக்கு அரசியல் அறம் உரைத்தார்.

`மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்கிறது புறநானூறு. `உயிரெலாம் உறைவதோர் உடம்பு ஆயினான்’ என்கிறார் கம்பர். அதாவது, மக்கள் உயிர்; மன்னன் உடல். கம்பர் கண்ட அயோத்தியில், `ராமனுக்கு முடிசூட்டு விழா’ என்றதும் மக்கள் மகிழ்ந்தார்கள். அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டது. ஒரு நாட்டின் தலைமை சிரித்தபோது மக்கள் சிரித்தார்கள். நாட்டின் தலைமை துன்பப்பட்டபோது அவர்களும் துன்பப்பட்டார்கள்.

இன்று நம் நாட்டு மக்கள் அழவும் சிரிக்கவும் மறந்துபோயிருக்கிறார்கள். காரணம், எல்லோருக்கும் தன்னலம். அரசியல் என்றால், பேச பயப்படுகிறார்கள். `கட்சி அரசியல்தான் அரசியல்’ என்று நினைக்கிறார்கள். குடியரசு நாட்டில், அரசியல் என்பது கட்சிகளின் அரசியல் அல்ல. அது ஒரு தேசத்தின் சமூகப் பொருளாதார விஞ்ஞானம் என்பதை இளைய தலைமுறை உணர வேண்டும்.

``நாமெல்லாம் ஒரு வகையில் திருடர்கள். என் தேவைக்கும் அதிகமான ஒன்றை எடுத்துப் பத்திரப்படுத்தினால், நான் திருடியவன் ஆவேன். மக்கள் அனைவருக்கும் வேண்டிய அனைத்தையும் இயற்கை அன்னை அளிக்கிறாள். அவனவனுக்கு வேண்டியதை மட்டும் பயன்படுத்தினால், பிச்சை எடுப்பவர்கள் இருக்க மாட்டார்கள். பசியால் யாரும் சாக நேரிடும் கொடுமை நிகழாது. இந்தியாவில் இன்று ஒருவேளை உண்பவர்களே அதிகம். அந்த ஒருவேளை உணவில் நெய்யும் இல்லை; எண்ணெயும் இல்லை. இந்த ஏழைகள் உண்டு பசியாறி, மானம் காக்க உடையும் அணிந்த பிறகே நீங்களும் நானும் எதையும், `நமது’ என்று உரிமை பாராட்ட முடியும். நம் ஆசைகளைக் குறைத்துக்கொண்டு ஏதுமற்ற ஏழைகளுக்கு ஓரளவாவது கிடைக்கும்படி செய்வதுதான் நம் முதற்கடமை’’ என்றார் காந்தியடிகள்.

பிறருக்காக இரங்காதவர்கள், பிறரை நேசிக்காதவர்கள், சுரண்டுபவர்களுக்கும் கொடுமைக்காரர்களுக்கும் எதிராகப் போராட மாட்டார்கள். வன்முறையும் அகிம்சையும் ஒரே ஓவியத்தின் இரண்டு பகுதிகள். அவை காலச்சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டேயிருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் வன்முறையாகத் தோன்றுவது, இன்னொரு சந்தர்ப்பத்தில் அகிம்சையாகத் தோற்றம் தரும். இந்த இரண்டு அம்சங்களின் சேர்க்கைதான் தியாகத்தின் பாதை.

சூர்யா சென் (Surya Sen) இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 39 வயதில் தூக்கிலிடப்பட்டார். சூர்யாவின் சடலம்கூட முறையாக அடக்கம் செய்யப்படவில்லை; வங்கக் கடலில் வீசி எறியப்பட்டது. அவர் தன் நண்பர்களுக்குக் கடைசியாக எழுதிய கடிதம் இப்படி விரிகிறது... `மரணம் என் வீட்டுக்கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. என் மனம் எல்லையற்ற பெருவெளியை நோக்கிப் பறந்து கொண்டிருக்கிறது. இந்த ரம்யமான மரணப் பொழுதில் உங்களுக்காக நான் எதை விட்டுச் செல்வேன்? ஒன்றே ஒன்றுதான். என் கனவு. `சுதந்திர இந்தியா’ என்ற பொற்கனவு. தோழர்களே… அந்தக் கனவை நனவாக்குங்கள். எந்த நிலையிலும் ஓர் அடிகூடப் பின்வாங்க முயலாதீர்கள். நம் தேசத்தின் அடிமைப் பொழுது முடிந்துவிடும். சுதந்திரத்தின் ஒளிக்கதிர்கள் பொன்னொளி வீசும். எல்லோரும் எழுங்கள். அவநம்பிக்கை அடையாதீர்கள். வெற்றி விரைவில் வந்தே தீரும்.’

``இந்தியாவில் இன்று ஒருவேளை உண்பவர்களே அதிகம். அந்த ஒருவேளை உணவில் நெய்யும் இல்லை; எண்ணெயும் இல்லை.’’

சட்டமேதை நானாபாய் ‘நானி’ பல்கிவாலா (Nanaboy Palkhivala) ``இந்தியாவின் இன்றைய தேவை அளவற்ற சுதந்திரமில்லை. அதிகமான ஒழுக்கம்’’ என்றார். நோய்களின் இருப்பிடமாக, சதுப்புநிலக் காடுகளின் உறைவிடமாக இருந்த சிங்கப்பூரைத் தென் கிழக்கு ஆசியாவின் சொர்க்கமாக மாற்றினார் லீ குவான் யூ (Lee Kuan Yew). அதற்கு அடித்தளமிட்டது அவர் கையாண்ட கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரமும், கட்டமைக்கப்பட்ட மானுட ஒழுக்கமும்தான்.

நம் நாட்டில் தவறான சுதந்திரத்துக்கு எல்லையே இல்லை. ஒழுங்கீனத்துக்கோ அளவே இல்லை. நாடாண்ட அரசர்கள் சோகங்களை மறந்து, காடேறி அறம் வளர்த்தார்கள். சொந்தச் சோகங்களை மறுதலித்த அந்தப் பண்பு இன்று ஏன் பொதுவாழ்வில் அற்றுப்போனது?

இந்தியாவில் சுதந்திரம் கண் விழித்து 71 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் சுதந்திரதினக் கொடியேற்று விழா சட்டமன்ற வளாகம், நாடாளுமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர்களின் அலுவலக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றுக்கு மட்டும் உரிய விழாவாக முடிந்துபோகிறது. நம் கடைக்கோடி மனிதனின் வீட்டு விழாவாக அதை நாம் எப்போது மாற்றப்போகிறோம்?

நம் இந்தியத் திருநாடு விடுதலையைப் பெறுவதற்குக் கொடுத்த விலை விலைமதிப்பில்லாதது. எத்தனையோ உயிர்கள்... எத்தனையோ இளைஞர்களின் வாழ்வு... ஆண் பெண் வேறுபாடில்லாமல் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட தியாகம். அந்த ஆகுதியில் எழும்பியதுதான் சுதந்திர வேள்வி. இனி நாம் என்ன செய்ய வேண்டும்?

அன்பே தவம் - 40

எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் நிலையை நோக்கி தேசம் நகர வேண்டும். கடைக்கோடி மனிதனின் வாழ்வு, சுதந்திரமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்நாட்டு இளைஞர்கள் சொந்த மண்ணில் உழைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும். நாட்டை வளப்படுத்த அவர்கள் முன்வர வேண்டும். எப்படி ஒரு மரம் மண்ணுக்குள் வேர் மூலம் நீரையும் உரத்தையும் எடுத்துக்கொண்டு, ஒளியை உள்வாங்கிக் கொண்டு, மலர்களை, காய்களை, கனிகளைத் தருகிறதோ அதைப்போல, இந்த மண்ணில் தாம் பெற்ற கல்வியை நம் தாய்நாட்டுக்குப் பயன்படுத்தும் தேசப்பற்றுமிக்க இளைய தலைமுறை உருவாக வேண்டும். எல்லைக்கோட்டைக் காப்பது மட்டுமல்ல தேசபக்தி; ஒவ்வொரு வீட்டையும் காப்பதும்தான். அந்த தேசபக்தியை வளர்ப்போம்.

- புரிவோம்...