
அப்பர் பெருமான், திரு க்கோயில்களிலும் அவற்றின் திருமதில்களிலும் மண்டிக்கிடந்த களைகளை யெல்லாம் அப்புறப்படுத்தும் திருத்தொண்டாற்றியவர்.
அதோடு, மனித மனங்களிலிருந்த இருளையும் அப்புறப்படுத்திய ஞானி அவர். ‘அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதுமில்லை’ என்று அச்சமற்ற ஞான வாழ்வை அடையாளம் காட்டியவர். அழைப்பவன் அரசனாக இருந்தாலும், அழைக்கும் முறை தவறாக இருந்தால் அதை எதிர்த்துப் போர்க்குரல் கொடுத்த முதல் மனித உரிமைப் போராளி.
குரங்கு மரம் விட்டு மரம் தாவுவதைப்போல, மனித மனம் ஒன்றை விட்டு மற்றொன்றைப் பற்றிக்கொள்ளத் துடிக்கிறது. அது ஆசைவயப்பட்டதாகவே இருக்கிறது; சலனப்படுகிறது; சஞ்சலப்படுகிறது; கேட்கக் கூடாதவற்றைக் கேட்கிறது. அதன்விளைவாக, சந்திக்கக் கூடாதவற்றைச் சந்திக்கும் நிர்பந்தத்துக்கு ஆளாகிறது. நுகர்வுகளில் எல்லை மீறுகிறது. மது, மாமிசம், புகை எனத் தன் வாழ்வை அழித்துக்கொள்ளும் கூட்டம் பெருகிக்கொண்டே இருக்கிறது. சிலந்தி வலையில் பூச்சிகள் சிக்கிக்கொள்வதைப்போல, மீன் தூண்டிலில் சிக்கிக்கொள்வதைப்போல, ஆசைவயப்பட்ட மனம் தடம் மாறி, தடுமாறித் தன்னை அழித்துக்கொள்கிறது. இவற்றையெல்லாம் எடுத்துரைத்தவர் அப்பர் பெருமான்.

அவரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். வயதில் இளையவர். ஞானத்தில் பெரியவர். `வேதநெறி தழைத்தோங்கவும், மிகு சைவத்துறை விளங்கவும், பூத பரம்பரை பொலியவும் புனிதவாய் மலர்ந்தழுதது’ என்று சேக்கிழார், திருஞானசம்பந்தரின் தோற்றத்தைக் குறிப்பிடுவார். அப்பர் பெருமான் வயதிலும் ஞானத்திலும் முதிர்ந்தவர். இருவருக்குமிடையே தன்முனைப்புகள் கிடையாது. இருவரும் சந்தித்துக்கொள்ளும்போது அன்போடு, ஆரத் தழுவிக்கொள்வார்கள்.
ஒருமுறை, இப்போது `வேதாரண்யம்’ என்று அழைக்கப்படும் திருமறைக்காட்டில் இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். அங்கே வேதங்கள் அடைத்த கதவை, தெய்வத்தமிழ் பாடி, திருநாவுக்கரசர் திறந்தார்; வழிபாடு செய்தபின் திருஞானசம்பந்தர் அடைத்தார். அந்த நிகழ்வுக்குப் பின்னர் பாண்டி மண்டலத்திலிருந்து பாண்டிய மன்னனின் வாழ்க்கைத் துணைநலம் மங்கையர்க்கரசியார், குலச்சிறையார் என்ற தலைமை அமைச்சர் மூலம் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தார்; அவரும் தன் பரிவாரங்களோடு புறப்படத் தயாரானார்.
திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்மீது கொண்ட தணியாத அன்பால் ஒரு குழந்தைக்குத் தந்தை அறிவுரை சொல்வதைப்போலச் சொன்னார்... ``இப்போது அங்கே செல்ல வேண்டாம். ஏனென்றால், நானும் சமணர்களால் நிறைய துன்பப்பட்டேன். நாளும் கோளும் சரியில்லை.’’
உடனே, திருஞானசம்பந்தர் `வேயுறு தோளிபங்கன்…’ என்று தொடங்கும் கோளறுபதிகம் பாடி, ``நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்யாது. அது நன்மையே செய்யும்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஞானிகள் இன்ப துன்பங்களைச் சமமாகவே பார்ப்பார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் `என் கடன் பணி செய்து கிடப்பதே…’ என்று பணியாற்றுவார்கள். திருஞானசம்பந்தரும் அப்பரும் அப்படித்தான் பணி செய்தார்கள்.
திருஞானசம்பந்தர் துன்பத்தில் கிடந்த தமிழ்ச் சமூகத்தைக் காப்பதற்காக மதுரைக்குப் புறப்பட்டார். பாண்டிய மன்னனுக்கு வெப்ப நோய். பாண்டி மண்டலமே வெப்பத்தால் தாக்கப்பட்டிருந்தது. மனிதகுலத்தைத் தாக்கும் அந்த வெப்பத்தைக் குறைக்கத்தான் அவர் மதுரைக்கு அழைக்கப்பட்டார். தமிழ் வழக்கு வெற்றி பெற வேண்டும். தமிழ்ப் பண்பாடு நிலை நிறுத்தப்பட வேண்டும். மக்கள் வாழ வேண்டிய நெறிமுறை இந்த மண்ணில் நிலைத்து நிற்க வேண்டும். அதற்காகப் புறப்பட்டார்.
மதுரைக்கு வரும் வழியில், `திருக்கொடுங்குன்றம்’ என்ற பறம்புமலைக்கும் (பிரான்மலை) வந்தார். அது வரலாற்றுச் சிறப்புமிக்கது. திருஞானசம்பந்தர், பிரான்மலையில் திருக்கொடுங்குன்றநாதரை வழிபட்டார். அங்கு அவர் பாடிய பாடல்கள் அற்புதமானவை. எப்போதும் பதிகத்தின் நிறைவுப் பாடலில், `இந்தப் பாடலால் இந்தப் பலன் கிடைக்கும்’ என்று குறிப்பிடுவார் திருஞானசம்பந்தர். திருக்கொடுங்குன்றப் பதிகத்தில், `இதைப் பாடுவோர் அனைவரும் நலம் பெறுவர். துன்பம் நீங்குவர். இடர் களைவர்’ என்று குறிப்பிடுகிறார். இயற்கைவளமும் எழிற்கோலமும், மயில்களும் சிங்கங்களும் யானைகளும் வாழும் மலை பறம்புமலை. அங்கே, `உழவர் உழாதன நான்கு பயன் உடைத்து...’ என்பது கபிலர் வாக்கு. அங்கு நான்கு வகைச் செல்வம் உண்டு. தேன், பலா, வள்ளிக்கிழங்கு, மூங்கில் அரிசி ஆகிய அற்புதமான உணவு வகைகள் அவை. உழவர் உழாமல் கிடைக்கும் செல்வத்தின் காரணத்தால்தான் பறம்புமலையை ஆண்ட பாரியும் இயற்கை நேசனாக, சுற்றுப்புறச்சூழல் ஆர்வலனாக, உயிர் இரக்கத்துக்கு உட்பட்டவனாக இருந்தான்.
பறம்புமலையைப்போல, நம் இந்தியாவும் இயற்கை வளத்துக்குக் குறைவில்லாத நாடு. அதனால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். இங்கே ஏன் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை...
வற்றாத ஈரமும், வாரி வழங்கும் கொடைத் தன்மையும், யாருக்கும் அஞ்சாத வீரமும்கொண்டவன் பாரி. அவனுக்குத் தனிப்பெரும் புகழ்மாலையைக் கபிலர் சூட்டினார். `பாரி... பாரி என்று எல்லோரும் புகழ்கிறீர்களே… உலகத்தில் கொடுப்பதற்குப் பாரி ஒருவன் மட்டுமா இருக்கிறான்... மாரியும் உண்டு’ என்று பாடினார். அதாவது, `வற்றாத வான்மழை, உலகத்தைச் செழிக்கவைக்கிறது. மழைக்கு இணையாகக் கொடுப்பதற்குப் பாரி ஒருவன் மட்டும்தான் இருக்கிறான்’ என்று பொருள்.
பாரியின் புகழ் கண்டு பொறாமைகொண்டு மூவேந்தர்களும் அவன் நாட்டை முற்றுகையிட்டார்கள். இயற்கை வளம் பாரிக்கு அரணாக இருந்தது. ஒரு தேசத்தின் வெற்றி, அதன் இயற்கை வளத்தைச் சார்ந்தது. பாரியின் மண்ணில் உழவர் உழாதன செல்வம் இருந்ததால், அந்த மக்கள் போர்க்காலத்திலும் உணவு நெருக்கடியின்றி வாழ்ந்து, போரைத் தொடர்ந்தார்கள்.
கம்பர், `கள்வரும் காவலரும் இல்லாத, கொள்வாரும் கொடுப்பாரும் இல்லாத நாடு’ என்று அயோத்தியை அடையாளம் காட்டினார். அந்த நாட்டில் வறுமை இல்லாததால், ஏழைகள் இல்லை; அதனால் கொடுப்பவர்கள் இல்லை. ஆனால், பாரி முல்லைக்கொடிக்குத் தன் தேரைத் தந்தான். அவன் நாட்டு மக்கள் ஏழைகளாக இல்லை. ஆனால், உழைப்பவர்களாக இருந்தார்கள். அதனால்தான், வள்ளல் தன்மையோடு பாரி விளங்கினான்.
`ஏன் முற்றுகையிடுகிறீர்கள்... ஆடுநர், பாடுநராய் வந்தால், நீங்கள் கேட்கும் அத்தனை ஊர்களையும் பாரி தானமாகக் கொடுத்துவிடுவான்’ என்று பறம்புமலையை முற்றுகையிட்ட மூவேந்தருக்குக் கபிலர் அறிவுறுத்தினார். `தன் நாட்டிலிருந்த முந்நூறு ஊர்களையும் பாரி இரவலர்க்குக் கொடுத்துவிட்டான். இனி என்ன இருக்கிறது... நான் இருக்கிறேன். பாரி இருக்கிறான். பறம்புமலைக் குன்றிருக்கிறது. இவற்றைத் தவிர பாரியிடம் எதுவும் இல்லை’ என்றார் கபிலர்.
பாரி அரசனாக இருந்த காலத்தில், அவன் மகளிர் பறம்புமலையை நோக்கிப் போரிட வந்தவர்களின் குதிரைகளை எண்ணிக்கொண்டி ருந்தார்கள். பாரி மாய்ந்த பிறகு அந்த மகளிர் உப்பு மூட்டைகளைச் சுமந்துவரும் உமணர்களின் வண்டிகளை எண்ணிக்கொண்டிருந்தார்கள். `அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் இருந்தார். எம் குன்றும் இருந்தது. இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லை; எம் குன்றையும் பிறர் கொண்டார்’ என்று பாரி மகளிர் அழுது புலம்பும் காட்சியை, கபிலரால் தாங்க முடியவில்லை. பாரி மகளிருக்குத் திருமணம் செய்துவைக்க இரு குறுநில மன்னர்களைச் சந்தித்தார். அந்த முயற்சி கைகூடவில்லை. நிறைவாக, தக்க இடத்தில் திருமணம் செய்து தந்துவிட்டு, தன் நண்பன் பாரிக்குச் செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றிவிட்ட ஆத்ம திருப்தியோடு கபிலர் இன்னொரு செயலுக்குத் தயாராகிறார்.

திருவண்ணாமலை செல்லும் வழியில் திருக்கோவலூரிலுள்ள பெண்ணை யாற்றங்கரையில் ஒரு சிறிய குன்று இருக்கிறது. அங்கே வடக்கிருந்து உயிர் துறந்தார். அது சில அடி உயரமே உடைய குன்று. ஆனால், கபிலர் வடக்கிருந்த காரணத்தால், `நட்பின் சிகரம் அதுதான்’ என்று அடையாளம் காட்டப்படுகிறது.
பறம்புமலையைப்போல, நம் இந்தியாவும் இயற்கை வளத்துக்குக் குறைவில்லாத நாடு. அதனால், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திருக்க வேண்டும். இங்கே ஏன் எல்லோருக்கும் எல்லாமும் கிடைப்பதில்லை... பொருளாதார நிபுணர்கள், `இந்தியா ஏழை நாடல்ல; ஏழைகளின் நாடு’ என்று குறிப்பிடுவார்கள். வளம் நிறைந்த இந்தியத் திருநாட்டில் குடிமக்கள் ஏன் ஏழை மக்களாக இருக்கிறார்கள்... பொருளாதார நிபுணர் ஸ்ரீமந் நாராயணன் 1968-ம் ஆண்டில் நிகழ்த்திய படேல் நினைவுச் சொற்பொழிவில் ஒன்றைக் குறிப்பிட்டார்:
`இலவசங்களை, மானியங்களை வழங்கு வதைவிட இந்தியாவின் கிராமப்புறங்களுக்கு அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால், அங்கெல்லாம் உருப்படியான வேலைவாய்ப்புகள் உருவாகும். மக்களின் வறுமை மறையும்.’
கள்வரும் காவலரும் இல்லாத நாடு. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாடு. அப்படி ஒரு நாட்டை உருவாக்க இளைய தலைமுறை தயாராக இருக்க வேண்டும்;
அப்துல் கலாம் `இந்தியா 2020’ என்ற திட்டத்தில், `அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுப் பொருளாதார வளர்ச்சி அடையும்’ என்று நம்பிக்கையோடு கூறினார். `அப்படிச் செயல்படுமேயானால், வேலைவாய்ப்பு பெருகும்; தனிநபர் வருமானம் உயரும்; விவசாயம் தழைக்கும்; கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வசதி எனப் பன்முகப் பொருளாதார வளர்ச்சி கிராமப்புறங்களிலும் சாத்தியமாகும். வறுமையில் வாடும் மக்களை மேல்தட்டுக்குக் கொண்டுவர முடியும். சமூக, பொருளாதார வேறுபாடற்ற ஓர் அறிவார்ந்த சமுதாயமாக இந்தியாவை மாற்ற முடியும்’ என்று நம்பினார். `இளைய சமுதாயம் நம்பிக்கையோடு உழைத்தால், இந்தப் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியும்’ என்றார்.
2006ஆம் ஆண்டு. ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நிவாரணம் வழங்கச் சென்றிருந்தார் கலாம். அங்கே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான மாணவன் ஸ்ரீகாந்த்தைச் சந்தித்தார். ``நீ எதிர்காலத்தில் யாராக ஆக வேண்டும்?’’ என்று அவர் கேட்ட கேள்விக்கு ஸ்ரீகாந்த் பதிலளித்தான்: ``ஒருநாள் நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதியாக ஆவேன். அதுதான் என் லட்சியம்.’’ எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை. அதோடு, ``அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள எம்.ஐ.டி-யில் கல்வி கற்பது என் லட்சியம்’’ என்றும் குறிப்பிட்டான். அந்த லட்சியம் நிறைவேறியது. 10ஆம் வகுப்பில் 90 சதவிகிதமும், 12ஆம் வகுப்பில் 96 சதவிகிதமும் மதிப்பெண்கள் பெற்று, `லீடு 2020’ (Lead 2020) என்ற இயக்கம் மற்றும் ஜி.ஈ (GE) நிறுவனத்தைச் சேர்ந்த சில தன்னார்வலர்களின் உதவியுடன் அவன் அமெரிக்காவுக்குச் சென்றான்.

`படித்து முடித்தவுடன் எங்கள் நிறுவனமே உன்னை வேலைக்கு எடுத்துக்கொள்ளும்’ என்றது ஜி.ஈ நிறுவனம்.
`உங்கள் உதவிக்கு நன்றி. ஒருவேளை நான் இந்தியாவின் பார்வையற்ற முதல் ஜனாதிபதியாக ஆகாவிட்டால், உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று அந்த நிறுவனத்துக்கு பதிலனுப்பினான் ஸ்ரீகாந்த். `இப்படிப்பட்ட லட்சியமுள்ள இளைஞர்கள்தாம் இன்றைக்கு இந்தியாவுக்குத் தேவை’ என்று குறிப்பிட்டார் அப்துல் கலாம்.
வறுமையும் ஏழ்மையும் இல்லாத நாடு. வள்ளன்மையும் வறுமையும் இல்லாத நாடு. கள்வரும் காவலரும் இல்லாத நாடு. ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நாடு. அப்படி ஒரு நாட்டை உருவாக்க இளைய தலைமுறை தயாராக இருக்க வேண்டும்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் வெற்றிப் பாதையை நோக்கி அது நடைபோட வேண்டும்!
- புரிவோம்