மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அன்பே தவம் - 42

அன்பே தவம்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பே தவம்

பெரியபுராணம் பக்திநெறியை மட்டும் பாடாமல், தொண்டுநெறியைப் பற்றியும் பாடியது.

றைவனைப் பற்றி மட்டும் பாடாமல், இறைவனை நாடி, தேடிச் சென்ற அடியார் பெருமக்களைப் பற்றியும் பாடியது. நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை, வாழ்வு தாழ்வுகளைச் சமமாக எண்ணிப்பார்க்கும் பற்றற்ற அடியார் பெருமக்களின் லட்சியத்தை, குறிக்கோளை, சமயவழிப்பட்ட சமூகப் பணிகளையெல்லாம் பாடியது.

பெரியபுராணம், உள்ளும் புறமும் புனிதமாக இருக்கும் திருநீற்று வெண்மையைப்போல், உடலும் உள்ளமும் தூய்மையாக இருக்கும் அடியார் பெருமக்களைப் பற்றிப் பாடியது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்றும் பணியை, பக்திவழியில் செம்மையாகச் செய்தது. ‘எல்லோரும் இறைநெறியை அடைய முடியும். இறைவழிபாட்டின் மூலம் இறைவனின் திருவடிப்பேற்றை அடைய முடியும்’ என்ற மனிதகுல சமத்துவப் புரட்சியைச் செய்துகாட்டியது.

பெரியபுராணத்துக்கு உரை எழுதியவர்கள் மிகச் சிலரே. நம் குன்றக்குடி, திருவண்ணாமலை ஆதீனத்தின் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னர் பெரியபுராணத்துக்கு எழுதிய விளக்க உரையை `சிவாலயம்’ ஜெ.மோகன் அண்மையில் பதிப்பித்து வெளியிட்டார். 100 ஆண்டுகளுக்கு முந்தைய, பழந்தமிழ் இலக்கிய, சமயவழிப்பட்ட, சமூக வழிப்பட்ட நூல்களான திருக்குறள் உரை, திருவாசகம் ஆங்கில மொழிபெயர்ப்பு, பெரியபுராண உரை போன்றவற்றைப் பதிப்பிக்கும் பணியில் அவர் ஈடுபட்டி ருக்கிறார். எப்படி உ.வே.சா., கறை யான்களுக்கு இரையாகிக்கொண்டிருந்த ஓலைச்சுவடி களையெல்லாம் தேடித்தேடிக் கொணர்ந்து அச்சுக்கூடத்தில் ஏற்றினாரோ அப்படி, காலவெள்ளத்தில் அழியும் நிலையிலிருக்கும் பழைமையான நூல்களை மோகன் புதுப்பித்துப் பதிப்பித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய தமிழ்த் தொண்டை வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது.

பெரியபுராணம், `பக்திவழியில், அன்புவழியில் இறைவனை அடைய முடியும்’ என்கிறது. `பூசலார்’ என்ற அடியவர், இறைவனை இதயக் கோயிலில் எழுந்து அருள்பாலிக்கச் செய்தார். அதேநேரத்தில், பல்லவ மன்னன் பெரிய கற்கோயிலை எழுப்பினான். அங்கே கற்களெல்லாம் பேசும் பொற்சிலை களாகின. மண்ணெல்லாம் விண்முட்டும் கோபுரங்களாக உயர்ந்தன. வண்ணங்க ளால் தீட்டப்பட்ட உயிர்ப்புடைய ஓவியங்கள் எழுந்தன. அப்படி ஒரு கோயிலைப் பார்த்துப் பார்த்து எழுப்பினான் பல்லவ மன்னன். திருக்குட நீராட்டுக்கு நாளும் நேரமும் நிச்சயிக்கப்பட்டன. ஆனால், அந்தத் திருக்கோயிலில் இறைவன் எழுந்து அருள்பாலிக்கவில்லை; பூசலார் என்ற ஏழை அடியவரின் இதயக்கோயிலில் எழுந்து அருள்பாலித்தான். அடியவர் இதயமே தான் எழுந்தருளும் கர்ப்பகிரகம் என்பதை இறைவன் உலகத்துக்கு உணர்த்தினான்.

அன்பே தவம் - 42

நம் மகாசன்னிதானம் அடிகள் பெருமான் அடிக்கடி குறிப்பிடுவார்கள். `இறைவன் எப்போது உண்பான்?’

கோடிக்கணக்கான மக்கள் பசியால் துடிக்கும்போது நாம் தரும் திருவமுதை அவன் ஏற்றுக்கொள்வானா? நாம் அவனுக்குத் திருவமுதைப் படைக்கிறோம். எப்போதாவது அவன் உண்டிருக்கிறானா? இறைவன் உண்டதாக நினைத்துக்கொண்டு நாம் அனைவரும் உண்கிறோம். திரும்பவும் நம் மகாசன்னிதானத்தின் கேள்விக்கு வருவோம். `இறைவன் எப்போது உண்பான்?’

`உலகிலிருக்கும் அத்தனை உயிர்க்குலத்துக்கும் பசித்துன்பம் இல்லாமல், வயிறு நிறையும்போதுதான் அவனும் நாம் தரும் திருவமுதை ஏற்றுக்கொள்வான்’ என்று மகாசன்னிதானம் குறிப்பிடுவார்கள். அதை நகைச்சுவையான ஒரு கதையாகவும் சொல்வார்கள்.

ஒரு செல்வந்தர், பழநி முருகப்பெருமான் கோயிலுக்குத் தன் பண்ணையில் விளைந்த முதல் வாழைத்தாரைத் தன் பணியாளர் மூலமாகக் கொடுத்தனுப்பினார். அதிலிருந்தவை, நல்ல கனிந்த வாழைப்பழங்கள். வாழைத்தாரை எடுத்துச் சென்ற ஏழைப் பணியாளருக்கு நல்ல பசி. `அதிலிருந்து இரண்டு பழங்களை எடுத்து உண்டால் யாருக்குத் தெரியப்போகிறது?’ என்று நினைத்து, இரண்டு பழங்களை எடுத்து உண்டும்விட்டார். எஞ்சிய பழங்களோ டிருந்த வாழைத்தாரை இறைவன் சன்னிதானத்தில் கொண்டு போய்ச் சேர்த்தார். வாழைத்தாரைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகி, `நீங்கள் அனுப்பிய வாழைத்தாரில் இரண்டு பழங்கள் இல்லை’ என்று அந்தச் செல்வந்தருக்குச் சொல்லி யனுப்பினார். செல்வந்தர், ``இறைவனுக்கு அர்ப்பணித்த வாழைப்பழங்களை நீ எப்படி உண்ணலாம்?’’ என்று அந்தப் பணியாளரை நையப் புடைத்துவிட்டார்.

அன்றிரவு செல்வந்தரின் கனவில் இறைவன் தோன்றினான். ``நீ அனுப்பிய வாழைத்தாரிலிருந்து இரண்டு பழங்கள் மட்டுமே என்னிடம் வந்து சேர்ந்தன. அவை எவை தெரியுமா... எந்த ஏழையால் சாப்பிடப்பட்டனவோ, அவை’’ என்று சொன்னான்.

இதுதான் வழிபாட்டுநெறி. ஏழைகளின் பசி தீர்ப்பதுதான் இறைநெறி. இதைத்தான்,

`யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போதொரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே’

என்று திருமந்திரம் தெளிவாகச் சொல்கிறது. `நீ இறைவனை ஒரு பச்சிலையால் அர்ச்சித்தால் போதும். இறைவனுக்கு உணவு படைப்பதற்கு முன்னர், ஏழைகளுக்கு உணவளித்துவிட்டுப் பிறகு நீ உண். யாரேனும் ஏழைக்கு ஒரு கைப்பிடி உணவாவது கொடு. பசுவுக்கு உணவளி. இன்சொற்களால் பிறரிடம் பேசு.’ இது, திருமந்திரம் காட்டும் நெறி. நம் ஊனுடம்புதான் ஆலயம். உள்ளம்தான் பெருங்கோயில். இதைப் பூசலார் நிரூபித்தார்.

அன்புநெறிதான் பக்திநெறி, பக்திநெறிதான் அன்புநெறி என்பதைப் பெரியபுராணம் உலகுக்கு அடையாளம் காட்டியது. அடியவர்களாக இறைத்தொண்டையும், சமூகத்தொண்டையும் செய்தவர்கள்தாம் இறைவனின் திருவடிப்பேற்றை அடைய முடியும்.

ஒரு பௌத்த ஆலயத்துக்குள் வயது முதிர்ந்த ஒரு பெரியவர் இரவு நேரத்தில் அடைக்கலமாகப் புகுந்தார். கடுங்குளிர்காலம். அங்கே புத்தரின் மரச்சிற்பங்கள் நிறைய இருந்தன. குளிரைத் தாங்க முடியாத முதியவர், அந்த மரச்சிற்பங்களிலிருந்து சிலவற்றை எடுத்து நெருப்பிலிட்டுக் குளிர்காய்ந்தார். அதை பௌத்த ஆலயத்தின் காவலன் பார்த்து விட்டான்.

``புத்தர் சிற்பங்களையா எரிக்கிறாய்... வெளியே போ!’’ என்று கடுமையாகத் திட்டி வெளியே விரட்டினான். மீதமிருந்த இரவுப்பொழுதைக் கடுங்குளிரில், சாலையோரமாக அமர்ந்து அந்த முதியவர் கழித்தார்.

விடிந்தது. சாலையிலிருந்த மைல்கல் ஒன்றைப் பார்த்தார் முதியவர். `இதுதான் புத்தர்’ என்று சொன்னபடி அதற்குப் பூசை செய்ய ஆரம்பித்தார். அப்போது அந்த வழியாக வந்த பௌத்த ஆலயத்தின் காவலன் அதைப் பார்த்தான். ``உனக்கு மைல்கல் புத்தராகத் தெரிகிறதா?’’ என்று கேட்டான்.

``உனக்கு மரச்சிற்பங்கள் புத்தராகத் தெரியும்போது, எனக்கு மைல்கல் ஏன் புத்தராகத் தெரியக் கூடாது?’’ என்று கேட்டார் பெரியவர்.

எதுவுமே நாம் பார்க்கும் பார்வையைப் பொறுத்தது. கல்லாகப் பார்த்தால் கல். `அதற்குள் கருணையுள்ள கடவுள் இருக்கிறான்’ என்று நினைத்தால், அது கடவுள்.

நம்முடைய ஆதீனத்தின் ஆறுமுகத் தம்பிரான் சுவாமிகள் பெரியபுராணத்துக்கு எழுத்தால் உரை எழுதினார்கள். நம் 45ஆவது குருமகாசன்னிதானமோ வாழ்க்கையால் உரை எழுதினார்கள். நாயன்மார்களின் அடிச்சுவட்டில் தொண்டுநெறியைப் பரப்பினார்கள்.

கண்ணப்பர் குருபூசை நாளில் இலவசக் கண்சிகிச்சை முகாம் நடத்துவது, கண்புரைநோய் உள்ளவர்களுக்கு அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடுசெய்வது, இலவசக் கண் கண்ணாடிகள் வழங்குவது எனக் கொண்டாடும் மரபைத் தோற்றுவித்தார்கள். மதுரை அரசு மருத்துவமனையிலிருக்கும் கண் சிகிச்சைப் பிரிவுக்கு, `கண்ணப்பர் கண் சிகிச்சைப் பிரிவு’ என்று பெயரிடுவதற்கு அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த மருத்துவர் வெங்கடசாமியிடம் வேண்டுகோள் விடுத்து, அதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

கண் தெரியாத தண்டியடிகள் திருவாரூர் கமலாலயக் குளத்தைத் தூர்வாரினார். அவரின் குருபூசை நாளன்று குளங்களைத் தூர்வாரும் பணிகளையும், நீர்நிலைகளைப் பராமரிக்கும் பணிகளையும் செய்தார்கள்.

அன்பே தவம் - 42

அப்பரடிகள் செய்த உழவாரப் பணிகளைத் தமிழ்நாட்டுத் திருக்கோயில்கள் முழுவதிலும் செய்யும் வகையில் மாற்றினார்கள் நம் குருமகாசன்னிதானம். இன்றும் நம் ஆலயங்கள் அனைத்திலும் உழவாரப் பணிகள் நடைபெறுகின்றன. திருப்பணிகள் செய்யப்பட்டு, திருக்கோயில்கள் பொலிவோடு விளங்கிக்கொண்டிருக்கின்றன.

இளையான்குடி மாறநாயனாரின் பக்தி நெறியை, தொண்டுநெறியை வலியுறுத்தும்விதமாக, நம் திருமடத்தின் உணவரங்கம் மதியவேளையில் வருவோர் அனைவருக்கும் உணவளிக்கும் பணியை இன்றும் செய்துவருகிறது.

கீழப்பழையாறையில் மங்கையர்க்கரசியார் பிறந்த மண்ணில் நலத்திட்டப்பணிகள் நடைபெற்றன. அதைப்போல மங்கை யர்கரசியாருக்கு உறுதுணையாக இருந்த குலச்சிறையார் பிறந்த மணமேல்குடி கிராமத்தில் குலச்சிறையாருக்கான கோயில் சிறப்பாக எழுப்பப்பட்டு, மூன்று குடமுழுக்குகளைக் கண்டிருக்கிறது. அங்கு, கிராம வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

திருநாளைப் போவார் (நந்தனார்) அவதரித்த மேல ஆதனூரிலும் கிராமத் திட்ட வளர்ச்சிப் பணிகளை நம் ஆதீனம் செம்மையாகச் செய்தது. ஆக, நம் நாயன்மார்கள் செய்த தொண்டு நெறியை அவர்கள் குருபூசை நாளில் வெறும் வழிபாட்டு விழாவாக மட்டும் அமைத்துவிடாமல், மக்களுக்கு வழிகாட்டும் சமூகப் பணிக்களமாக அமைக்கும் செயலை நம் ஆதீனம் அன்றும் இன்றும் தொடர்ந்து செய்துவருகிறது.

அன்பே தவம் - 42

அபூ பென் ஆதம் (Abou Ben Adhem) என்பவரின் கனவில் ஒருநாள் தேவதை ஒன்று தோன்றியது. அது ஒரு தங்கப்புத்தகத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தது.

``என்ன எழுதுகிறாய்?’’ என்று கேட்டார் அபூ.

``யாரெல்லாம் கடவுளைச் சிறப்பாக பூஜிக்கிறார்கள் என்ற பட்டியலை எழுதுகிறேன்.’’

``அதில் என் பெயர் இருக்கிறதா?’’

``இல்லை.’’

ஏமாற்றம் அடைந்தார் அபூ. மறுநாளும் தேவதை அவர் கனவில் தோன்றியது. அன்றைக்கும் தங்கப்புத்தகத்தில் எதையோ எழுதியது.

``என்ன எழுதுகிறாய்?’’ என்று கேட்டார் அபூ.

``யாரையெல்லாம் இறைவன் நேசிக்கிறார் என்ற பட்டியலை எழுதுகிறேன்.’’

``அதில் என் பெயர் இருக்கிறதா?’’

``உன் பெயர்தான் முதலிடத்திலிருக்கிறது’’ என்றது தேவதை.

இதுதான் உண்மையான பக்திநெறி.

இராமகிருஷ்ண பரமஹம்சர் எல்லா மதங்களின் தத்துவங்களையும் ஆழ்ந்து உள்வாங்கிக்கொண்டவர். அவர் ஒருமுறை இஸ்லாமிய மார்க்கத் தத்துவங்களைத் தெரிந்துகொள்கிறபோது, தன்னை முழுமையான இஸ்லாமியராகவே மனதளவில் பாவித்துக்கொண்டார். அந்த நாள்களில் அவர் தினமும் வழிபடும் காளிதேவியை தரிசிக்கக்கூடச் செல்லாமல், தத்துவத்தின் சாரத்தைப் புரிந்துகொள்வதற்காகத் தன்னை இஸ்லாமிய நெறியிலேயே வைத்துக்கொண்டு வாழ்ந்தார்.

அன்பே தவம் - 42

சுவாமி விவேகானந்தர் வேதாந்த சிகரத்தில் நின்றுகொண்டு, ``இப்போது இருக்கும் எல்லா மதங்களையும், இனி பிறக்கப்போகும் புதிய மதங்களையும் இருகரம் நீட்டி வரவேற்கிறேன்’’ என்றார்.

மகாத்மா காந்தியடிகள் ``என் மதத்துக்குப் பூகோள எல்லைகள் எதுவும் கிடையாது. அன்பும் அகிம்சையுமே என் மதம். எவரையும் வெறுக்க என் மனம் அனுமதிக்காது. மதம் மனிதர்களை இணைப்பதற்குத்தானே தவிர, பிரிப்பதற்கு அல்ல’’ என்றார். எப்போதும் அவருடைய பிரார்த்தனைக்கூடத்தில் கீதையுடன் சேர்த்து பைபிளும் திருக்குரானும் வாசிக்கப்படும். அன்பின் அடித்தளத்தில்தான் ஆன்மிகநெறி அமைந்திருக்கிறது. அதைத்தான் எல்லாத் தத்துவங்களும் நமக்கு வலியுறுத்துகின்றன.

அன்பே தவம் - 42

அன்புநெறிதான் பக்திநெறி, பக்திநெறிதான் அன்புநெறி என்பதைப் பெரியபுராணம் உலகுக்கு அடையாளம் காட்டியது. அடியவர்களாக இறைத்தொண்டையும், சமூகத்தொண்டையும் செய்தவர்கள்தாம் இறைவனின் திருவடிப்பேற்றை அடைய முடியும். பசித்தோருக்கு உணவிட்ட இளையான்குடி மாறநாயனார், கேட்ட எதையும் மறுக்காத இயற்பகையார், தன் கண்களைக்கூடக் கடவுளுக்குக் கொடுக்கச் சித்தமாக இருந்த கண்ணப்பர், தன் உடலை, உயிரைத் தந்த காரைக்கால் அம்மையார், இதயக்கோயிலில் இறைவனை எழுந்தருளச் செய்த பூசலார்... இப்படி அடியவர் பட்டியல் வெகுநீளமானது. அவர்களின் ஆன்மிகமும் அன்பும் கலந்த சமூகப் பணியை நாமும் தொடர்ந்து செயல்படுத்துவோம்!

(புரிவோம்...)